இந்தியன் 2

என்னா அடி… ஒவ்வொண்ணும் இடி – இந்தியன் – 2 சந்திச்ச பிரச்னைகள்!

ப்ராஜெக்ட் தொடங்கியது முதலே அடுத்தடுத்து தடங்கல்கள்.. விபத்துகள்..  ஷூட்டிங் முடியுறதுக்கு முன்னாடியே படத்துல நடிச்ச நடிகர்களின் திடீர் மரணங்கள் என தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை எந்த ஒரு படமும் சந்தித்திராத அளவுக்கு இந்தியன் -2 படம் தொடர்ந்து பிரச்சனைகளை சந்திச்சுக்கிட்டு வருது. அப்படி என்னென்ன பிரச்சனைகளை அந்தப் படம் சந்திச்சுது.. இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அந்த பிரச்சனைகளையெல்லாம் எப்படி எதிர்கொண்டாங்க அப்படிங்கிறதைதான் இந்த வீடியோவுல நாம பாக்கப்போறோம்..

2.0 பட ரிலீஸுக்கு அப்புறம் இயக்குநர் ஷங்கர்.. கமல் நடிப்புல தன்னோட ப்ளாக்பஸ்டர் படமான இந்தியன் படத்தோட சீக்குவலை தொடங்குனாரு. 2018 கடைசியில இந்தப் படத்துக்கான ப்ரீ புரொடக்சன் வேலைகளை தொடங்கி 2021 பொங்கலுக்கு இந்தப் படத்தை ரிலீஸ் செய்றதுதான் இயக்குநர் ஷங்கருக்கும் படத்தோட புரொடக்சன் ஹவுஸ் லைக்காவுக்கும் ப்ளானா இருந்துச்சு. அதுக்கேத்தமாதிரி 2019 ஜனவரியிலயே ஷூட்டிங்கை தொடங்கி ஒருவாரம் மட்டுமே படத்தோட ஷூட்டிங் நடந்தப்போ.. படத்துக்கான செட் இன்னும் ரெடியாகலைன்னு சொல்லி ஷூட்டிங்கை தள்ளிப்போட்டாங்க.  அந்த சூழ்நிலையில ஹீரோ கமல், அப்போ வந்த நாடாளுமன்ற தேர்தல்ல கலந்துக்கிறதுக்காக தன்னையும் தன்னோட மக்கள் நீதி மய்யம் கட்சியையும் தயார்படுத்துறதுக்காக போக.. படத்தோட ஷூட்டிங்கை திரும்ப ஆரம்பிக்க கொஞ்சம் லேட் ஆச்சு. இந்த டைம்லதான் ‘இந்தியன்-2’ டிராப் அப்படிங்கிற வதந்தி மீடியாவுல பரவ ஆரம்பிச்சுது. இதுதான் இந்தப் படத்தைப் பத்தி மீடியாவுல சர்க்குலேட் ஆக ஆரம்பிச்ச முதல் நெகட்டிவ் நியூஸ். 

அதுக்கப்புறம் ஒருவழியா எலெக்சன்லாம் முடிஞ்சு.. படத்தோட ஷூட்டிங்கை திரும்பவும் ஆரம்பிக்கலாம்னு இருந்தப்போ படத்துக்கு கேமராமேனா கமிட் ஆகியிருந்த ரவிவர்மன், ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு போக வேண்டியதா இருந்ததால இந்தப் படத்துலேர்ந்து திடீர்னு விலகுனாரு. அவரை எந்திரன் படத்து கேமராமேனான ரத்னவேலு ரீப்ளேஸ் பண்ண, திரும்பவும் ஷூட்டிங் ஆரம்பிச்சுது. இந்தமுறை ஷூட்டிங் நல்லபடியா தொடர்ந்து சென்னை, ஹைதராபாத், போபால்னு மிகப் பிரம்மாண்டமா நடந்துக்கிட்டிருந்த நேரத்துலதான் 2019 நவம்பர்ல கமலுக்கு காலுல அடிபட்டு சர்ஜரி அளவுக்குப் போய்டுது.. இதனால அவருக்கு பெட் ரெஸ்ட் தேவைப்பட ஷூட்டிங் திரும்பவும் நின்னுச்சு. அதுலேர்ந்து கமல் ரெக்கவரி ஆகி, திரும்ப 2020 ஜனவரியில ஷூட்டிங் ஆரம்பிச்சு சென்னை ஈவிபில எந்தவித தடங்கலும் இல்லாம தொடர்ந்து 30 நாட்களுக்கும் மேலாக ஷூட்டிங் நடந்துக்கிட்டிருந்துச்சு.. அப்போதான் அடுத்த மிகப்பெரிய தடங்கல் ஒண்ணு வந்துச்சு. அதுதான் தமிழ்நாட்டையே உலுக்குன கிரேன் விபத்து. அந்தப் படத்தோட ஷூட்டிங்குக்காக மிகப்பெரிய லைட்களை ஏத்துன கிரேன் ஒண்ணு வெயிட் தாங்காம விழுந்ததால ஒரு உதவி இயக்குநர் உட்பட 3 பேர் இறந்துபோனது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியதும் இல்லாம, இயக்குநர் ஷங்கரை மனசளவுல ரொம்பவும் பாதிச்சுது. அதுவரைக்கும் தன்னோட பக்கத்துல நின்னுக்கிட்டிருந்த தன்னோட பர்சனல் அசிஸ்டெண்ட் உள்ளிட்டவங்க இறப்புல அவர் ரொம்பவும் உடைஞ்சுபோனாரு. கூடவே.. நடந்தது ஒரு விபத்துங்கிறதால, கமலும் ஷங்கரும் வழக்கு, விசாரணைன்னு சிபிஐ வரைக்கும் பதில் சொல்ற மாதிரி ஆச்சு. இந்த நிலையில கமல் ட்விட்டர் மூலமா லைக்கா நிறுவனத்துக்கிட்ட யூனிட்டோட பாதுகாப்பை உறுதிபடுத்தும்படி கோரிக்கை வைக்க, அதேநாள் லைக்காகிட்டயிருந்து ஷங்கர் & கமல் வழிகாட்டுதல்படிதான் ஷூட்டிங் நடந்துச்சுன்னு கிட்டத்தட்ட ஹார்ஷாவே ரிப்ளை வர, யூனிட்குள்ளயே பிரச்சனை வெடிக்க ஆரம்பிச்சுது.

இதனால பட ஷூட்டிங்கை திரும்ப தொடங்குறதுல சிக்கல் நீடிச்சுக்கிட்டிருந்தப்போதான் உலகையே அச்சுறுத்துன கோவிட்னால முதல் லாக்டவுன் வந்துச்சு. இதைக் கடந்து 2021 ஜனவரிக்கு இந்தப் படத்தை திரும்ப தொடங்கலாம்னு ஷங்கர் ப்ளான் பண்ணப்போ, ஏற்கெனவே கமல் கமிட் ஆகியிருந்த பிக் பாஸ் சீசன்-4-க்கு போக வேண்டிய சிச்சுவேசன் இருந்ததாலயும் சட்டமன்ற தேர்தலில் கமல் உள்ளிட்ட அவரது கட்சியினர் போட்டியிட திட்டமிடப்பட்டிருந்ததாலயும் திரும்பவும் சிக்கல் வந்துச்சு. ஆனா இந்த முறை டைரக்டர் ஷங்கர், கமல் இல்லாத மத்த நடிகர்களோட போர்சனை வேகவேகமா எடுத்து முடிக்க ஆரம்பிச்சாரு. திரும்ப கமல் வர்றப்போ அவரோட போர்சன் மட்டும்தான் பாக்கியா இருக்குற மாதிரி பாத்துக்கிட்டாரு. அதேசமயம் கொரோனா கட்டுப்பாடுகள் நிறைய இருந்ததாலயும் அவரால நிறைய ஜூனியர் ஆர்டிஸ்டுகளை வெச்சு ஷூட் பண்ண முடியாத நிலையிலயும் இருந்தாரு டைரக்டர் ஷங்கர். இதுக்கு இடையில நடிகர் விவேக் மாரடைப்பால இறந்துபோக,, அவருக்கு படத்துல மிகப்பெரிய ரோல் இருந்ததாலயும் அதுல பேலன்ஸ் இருந்ததாலயும் அதுவும் ஷங்கருக்கு தலைவலிய ஏற்படுத்துச்சு. ஆனாலும் கிடைச்ச ரிசோர்ஸை வெச்சு.. ஒரே நேரத்துல தன்னோட முன்னாள் உதவி இயக்குநர்களான வசந்தபாலன், சிம்புதேவன் உள்ளிட்டவர்கள் ஒரு பக்கம் ஒரு பகுதியை ஷூட் பண்ண..  இன்னொருபக்கம் ஷங்கர் மேஜர் போர்சன்களை இன்னொரு பக்கம் ஷூட் பண்றதுன்னு படத்தோட ஷூட்டிங் மளமளன்னு நடத்தி சுமார் 100 நாட்கள்ல 60 % சதவிகிதம் படத்தோட ஷூட்டிங்கை முடிச்சாரு.  குறிப்பா விவேக்கோட போர்சனை அவரோட சாயல்ல இருக்குற நடிகர் கோவை பாபுவை வெச்சு பெரும்பாலான காட்சிகளையும் மிச்சத்தை சிஜியில அவரை உருவாக்கிக்கவும் ப்ளான் பண்ணியிருந்தாரு ஷங்கர். 

இதையெல்லாம் கடந்து ஆகஸ்ட் 2021-ல திரும்பவும் ஷுட் ஆரம்பிச்சு போய்க்கிட்டிருந்தப்போதான் படத்துல முக்கிய ரோல்ல நடிச்சுக்கிட்டிருந்த மலையாள நடிகர் நெடுமுடி வேணு,  கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோனாரு. படத்துல ரொம்ப முக்கியமான ரோல்ல அவர் இருந்ததால அவரொட மிச்ச போர்சனை சிஜி மூலமா சமாளிக்க ரெடியானாரு டைரக்டர் ஷங்கர். 

ஆனா திரும்பவும் ஒரு பிரச்சனை வெடிச்சுது. இந்த முறை பிரச்சனைய ஆரம்பிச்சது லைக்கா நிறுவனம், எங்களால முன்னாடி ப்ளான் பண்ண மாதிரிலாம் படத்துக்கு நிறைய செலவு பண்ண முடியாது. இப்போ நிறைய நஷ்டமாச்சு.. அதனால படத்தோட பட்ஜெட்டை ஷங்கர் கணிசமா குறைச்சுக்கனும்னு சொல்ல.. பட்ஜெட்டை குறைச்சா நினைச்ச மாதிரி படத்தை குவாலிட்டியா எப்படி எடுக்குறதுன்னு ஷங்கர் ஒரு பக்கம் முறுக்க.. இதனால ஏற்பட்ட காலதாமதத்தால கடுப்பான இயக்குநர் ஷங்கர் ஹிந்தியில ரன்வீர் சிங் நடிப்புல அந்நியன் ரீமேக் தெலுங்குல ராம் சரண் நடிப்புல கேம் சேஞ்சர்னு அடுத்தடுத்து வேற வேற படங்கள்ல கமிட் ஆக.. கமலும் லோகேஷ் கனகராஜ் டைரக்சன்ல விக்ரம்ல நடிக்க போக.. திரும்பவும் இந்தியன்-2 டிராப்னு நியுஸ் வர ஆரம்பிச்சுது. இதனால இந்தியன்-2 படத்தை முடிக்காம வேற எந்த படத்தையும் ஷங்கர் இயக்ககூடாதுன்னு விஷயத்தை கோர்ட் வரைக்கும் கொண்டு போச்சு லைக்கா நிறுவனம். இதனால கிட்டத்தட்ட ஒருவருசம் வரைக்கும் ஷூட்டிங் நின்னுப் போயிருந்துச்சு. இந்த கேப்ல விக்ரம் படம் ஷுட்டிங் முடிஞ்சு படமும் வெளியாகி படம் அதிரி புதிரி ஹிட் ஆகி வசூலை வாரி குவிக்க, லைக்காவுக்கு திரும்பவும் இந்தியன்-2 படத்தை  தூசு தட்டனும்னு தோணுது.

ஆனா இதுக்கு இடையில கேம்சேஞ்சர் படத்தோட ஷூட்டிங்கை ஷங்கர்  தொடங்கியிருந்ததால.. ஏற்கெனவே லைக்கா போட்ட கேஸ் தீர்ப்புப்படி.. ஷங்கரால ஒரே நேரத்துல ரெண்டு படத்தையும் டைரக்ட் பண்ணுற நெருக்கடிக்கு ஆளானாரு. அதன் படி ஒரு மாசம் இந்தியன்-2 படம்னா இன்னொரு மாசம் அந்த தெலுங்கு பட ஷூட்டிங்குன்னு பம்பரமா சுழல ஆரம்பிச்சாரு ஷங்கர். இந்த நேரத்துலதான் படத்துல நடிச்ச மனோபாலா 2023 மே மாசம் கல்லீரல் பாதிக்கப்பட்டு இறந்துபோனாரு. இந்த சோகத்துலயும் ஒரேயொரு ஆறுதலான விசயம் படத்துல மனோபாலா போர்சன் பெரிய அளவு இல்லங்கிறதுதான். அவரைத் தொடர்ந்து சமீபத்துல நடிகர் மாரிமுத்துவும் ஹார்ட் அட்டாக்ல இறந்துவிட.. இந்த இரண்டு பேரோட போர்சன் முடிஞ்சிருந்தாலும் இவங்களோட டப்பிங் இன்னும் முடியாததால இவங்களுக்கு மேட்ச் ஆகுற ஒரு குரலை தேடிக் கண்டுபிடிக்கவேண்டிய நெருக்கடி ஷங்கருக்கு உருவாகியிருக்கு. இந்த ரெண்டு பேரொட குரலும் ரொம்ப தனித்துவமான குரல்ங்கிறதால அதுக்காக ரொம்பவே மெனக்கெடவும் வேண்டியதா இருக்கு. இப்ப நான் சொன்னதெல்லாம் வெறும் இந்தியன்-2 பட சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்தான். இதெல்லாம் இல்லாம.. இதே காலகட்டத்துல தன்னோட தாயார் மரணம், மருமகன் மீதான சர்ச்சைன்னு தனிப்பட்ட அளவுலயும் ஷங்கருக்கு ஏகப்பட்ட  பிரச்சனைகள். 

Also Read – தளபதி ரசிகர்களின் அதிபதி.. விஜய் ஆடியோ லாஞ்ச் ஏன் ஸ்பெஷல்?

இவ்வளவு பிரச்சனைகளைக் கடந்து ஒருவழியா 90 சதவிகிதம் படத்தை முடிச்ச டைரக்டர் ஷங்கர், இப்போ இந்தப் படத்தோட சிஜி வேலைகள்ல பிஸியா இருக்காரு. படத்துல சிஜி வேலைகள் எக்கசக்கமா இருக்குறதாலயும் அதையெல்லாம் செய்றது பிரபல வெளிநாட்டு கம்பெனிகள்ங்கிறதாலயும் இன்னும்கூட கொஞ்சம் டைம் எடுத்து படத்தை 2024 ஏப்ரலுக்கு மேல ரிலீஸ் செய்றதுக்கான முயற்சியில இருக்காரு டைரக்டர் ஷங்கர்.

சரி.. படத்தைப் பத்தி இவ்வளவு நெகட்டிவ் நியூஸ் சொல்லியாச்சு.. ஒரு சூப்பர் ஸ்கூப் நியூஸ் ஒண்ணு சொல்லவா.. படத்துல இதுவரைக்கும் லீக் ஆகாத.. கமலை அடையாளமே கண்டுபிடிக்க முடியாத ஒரு செம்ம டெரிஃபிக் கெட்டப்ல.. ஒரு செம்ம டெட்லி போர்சன் ஒண்ண ஷூட் பண்ணியிருக்காரு டைரக்டர் ஷங்கர். அதோட எடிட்டர் வெர்சனை ரீசண்டா பாத்த கமல் மிரண்டு போய்ருக்காரு.. அதனாலதான் இப்பவே படத்தை பத்தி மிகப்பெருசா பாராட்டி ட்வீட் பண்ணியிருக்காரு கமல். அதனால இந்தப் படம் எப்போ வந்தாலும் நிச்சயம் பந்தயம் அடிக்கும்ங்கிறதுல எந்த டவுட்டும் இல்ல..

இந்தியன் படம் உங்களுக்கு எதனால பிடிக்கும்..? பார்ட்-டூ ல என்னெல்லாம் எதிர்பார்ப்பீங்க..?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top