ரவி சாஸ்திரி

உலகக் கோப்பையோடு விடைபெறும் ரவிசாஸ்திரி… இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?

நவம்பரில் முடிவடையும் உலகக் கோப்பை டி20 தொடரோடு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விடைபெறுகிறார். அடுத்த பயிற்சியாளர் யார்… பிசிசிஐ-யின் திட்டம் என்ன?

ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கடந்த 2017-ல் பொறுப்பேற்றார் ரவி சாஸ்திரி. அவர் இந்திய அணி பயிற்சியாளராக இருந்த காலத்தில் இந்திய அணி ஐசிசி தொடர்களில் எதுவும் கோப்பை வெல்லவில்லை என்றாலுல், வெளிநாட்டுத் தொடர்களில் இந்திய அணி குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது.

விராட் கோலி - ரவி சாஸ்திரி
விராட் கோலி – ரவி சாஸ்திரி

குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் தொடர்களை வென்றது, இங்கிலாந்தில் 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது இந்திய அணி. அதேபோல், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் டி20 தொடர்களை வென்றிருக்கிறது. ஒருநாள் போட்டிகளிலும் ரவி சாஸ்திரி பயிற்சியின் கீழ் இந்திய அணி 60% மேல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

இங்கிலாந்து தொடர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றிபெறவில்லை என்றாலும், இங்கிலாந்து தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக லண்டன் லார்ட்ஸ், ஓவல் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இதனிடையே, இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கிரிக்கெட் உலகில் தன்னைக் கவர்ந்த வீரர்கள் பற்றியும் கிரிக்கெட்டராகத் தனது அனுபவங்கள் பற்றியும் `Star Gazing’ என்ற பெயரில் புத்தகம் எழுதிய புத்தகம் லண்டன் தாஜ் ஹோட்டலில் செப்டம்பர் 1-ம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஆலன் வில்கின்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விராட் கோலி - ரவி சாஸ்திரி
விராட் கோலி – ரவி சாஸ்திரி

நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி, `ரவி சாஸ்திரியின் குரலில் எப்போதும் தெளிவு இருக்கும். கம்பீரக் குரலில்Boys’ என்று பேசத் தொடங்குவார். 2014-ல் ஒரு அணியாக நாங்கள் சோர்ந்துபோயிருந்தபோது அவர் கொடுத்த உணர்வுப்பூர்வமான பெப் டாக்கை மறக்கவே முடியாது. முதல்முறையாக அவர் குரலைக் கேட்டது இப்போதும் நினைவிருக்கிறது. அவர் பேசத் தொடங்கியபோது நான் புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். அவரது குரலைக் கேட்டவுடன் எனது உடலில் ஒரு நடுக்கம் ஏற்பட்டதை இப்போதும் உணர்கிறேன்’’ என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் பௌலிங் பயிற்சியாளர் பரத் அருண் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, மான்செஸ்டரில் நடைபெற இருந்த இந்தியா – இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் மாஸ்க் அணியாமல் சுமார் 150 பேர் கலந்துகொண்டது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்!

இந்தசூழலில், இங்கிலாந்து ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கும் ரவி சாஸ்திரி, நவம்பர் 14-ம் தேதியோடு முடியும் உலகக் கோப்பை டி20 தொடரோடு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், “டி20 உலகக் கோப்பை ரொம்பவே ஸ்பெஷலானதுதான். ஆனால், இந்திய அணி வீரர்கள் எனது பதவிக் காலத்தில் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார்கள். பயிற்சியாளராக நான் நினைத்ததை சாதித்துவிட்டேன் என்று நம்புகிறேன். ஐந்து ஆண்டுகளாக நம்பர் ஒன் அணி (டெஸ்ட்), ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இரண்டு முறை டெஸ்ட் தொடரை வென்றது, இங்கிலாந்தில் தொடரை வென்றிருக்கிறோம்.

தோனி - ரவி சாஸ்திரி - கோலி
தோனி – ரவி சாஸ்திரி – கோலி

ஒருநாள், டி20 போட்டிகளைப் பொறுத்தவரை உலகின் ஒவ்வொரு நாட்டையும், அவர்களது சொந்த மண்ணில் வெற்றி கண்டிருக்கிறோம். டி20 உலகக் கோப்பையை வென்றால், அது மகிழ்ச்சியே. என்னைப் பொறுத்தவரை நான் ஒரு விஷயத்தை நம்புகிறேன். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பை மீறி அதிக நாள் நீங்கள் அங்கே இருக்கக் கூடாது. வீரர்களிடம் ஒரு அணியாக என்ன எதிர்பார்த்தேனோ… அதைவிட அதிகமாகவே நான் சாதித்துவிட்டதாக நினைக்கிறேன். கொரோனா சூழலில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வெல்வது, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரில் முன்னிலை பெறுவது… இதை விட வேறு என்ன வேண்டும்? எனது நாற்பதாண்டு கிரிக்கெட் வாழ்வில் இது திருப்திகரமான தருணம்.

ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரி

உலகக் கோப்பை டி20 தொடரில் எங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்வோம். டிரெஸ்ஸிங் ரூம் அனுபவம் மகிழ்ச்சிகரமானது. ஆனால், எங்களது முயற்சிகளுக்குக் கிடைத்த பலனும் பெற்ற வெற்றிகளும் இந்தப் பயணத்தை உணர்வுப்பூர்வமானதாக்குகிறது.

பும்ராவின் எழுச்சி

பும்ரா
பும்ரா

பும்ராவை டெஸ்ட் வீரராக மாற்றிய தருணம் குறித்து பேசிய ரவி சாஸ்திரி, `ஜஸ்பிரித் பும்ராவால் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியும் என்று யாரும் நம்பவில்லை. அவர், ஒருநாள் – டி20 ஸ்பெஷலிஸ்ட். நான் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதும்,வெளிநாட்டு மண்ணில் ஒரு டெஸ்டில் 20 விக்கெட்டுகளை எப்படி வீழ்த்துவது?’ என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். நான்கு சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் வேண்டும் என்பதை நான் அறிவேன், ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நிறையவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். அது 2018 தென்னாப்பிரிக்கா தொடரில் தொடங்கியது. மிகவும் சிறப்பான அந்தத் தொடரை 1-2 என்ற கணக்கில் நாங்கள் இழந்துவிட்டோம்.

பும்ராவை டெஸ்ட் போட்டிகளில் களமிறக்க வேண்டும் என்ற ஐடியாவை விராட் கோலியுடன் ஆலோசித்துவிட்டு, தேர்வாளர்களிடம் சொன்னோம். இந்தியாவில் அவரைக் களமிறக்க வேண்டாம். வெளிநாட்டுத் தொடரில் அவரை அறிமுகப்படுத்துவோம் என்று வலியுறுத்தினேன். அது நடந்து 3 ஆண்டுகள் கடந்து விட்டன. அதன்பிறகு, அவர் 101 விக்கெட்டுகளை (24 டெஸ்ட்) வீழ்த்திவிட்டார்’’ என்று தெரிவித்தார்.

அடுத்த பயிற்சியாளர் யார்?

விராட் கோலி - அணில் கும்ப்ளே
விராட் கோலி – அணில் கும்ப்ளே

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் ரேஸில் பிசிசிஐ-யின் முதல் சாய்ஸாக ராகுல் டிராவிட்டே இருந்தார். ஆனால், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராகத் தொடர்வதேயே விரும்புவதாக டிராவிட் சொல்லிவிட்டதால், அடுத்த தேர்வாக முன்னாள் பயிற்சியாளர் அணில் கும்ப்ளேவை வைத்திருக்கிறது பிசிசிஐ. இந்திய அணியின் வெற்றிகரமான பயிற்சியாளராகக் கடந்த 2017-ல் ஓராண்டை நிறைவு செய்தபோதும், அவரது பதவிக் காலத்தை நீட்டிக்க அப்போது உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் நிர்வாகக் குழு மறுத்துவிட்டது. அதேபோல், அணில் கும்ப்ளேவின் பயிற்சி முறைகள் குறித்து கேப்டன் விராட் கோலியும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்த சூழலில், அணில் கும்ப்ளேவே மீண்டும் பயிற்சியாளராகப் பதவியேற்க வேண்டும் என பிசிசிஐ தலைமை விரும்புவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து வெளியேறிய பிறகு ஐபிஎல் தொடரில் விளையாடும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக கும்ப்ளே இருந்து வருகிறார். அதேபோல், வி.வி.எஸ்.லட்சுமணன், வீரேந்திர சேவாக், ஜாஹீர் கான், மஹேலா ஜெயவர்த்தனே ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

Also Read – ViratKohli: கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் விராட் கோலி… என்ன காரணம்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top