பெட்ரோல், டீசல்

ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் வராது… மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன?

ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் கொண்டுவர இது சரியான நேரம் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். அதற்கு அவர் கூறிய விளக்கம் என்ன?

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் 45-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கொரோனா தொற்றால் சுமார் 20 மாதங்களாகக் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் முதல்முறையாக உறுப்பினர்கள் நேரடியாகப் பங்குபெறும் வகையில் நடந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், வணிக வரித்துறை செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் 32 பொருட்கள், 29 வகையான சேவைகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பை மாற்றியமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

கூட்டத்தில் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. சமீபத்தில், வழக்கு ஒன்றை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவருவது பற்றி கவுன்சில் பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. அதன்படி, பெட்ரோலியம் பொருட்களை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு ஆலோசிப்பதாகத் தகவல் வெளியானது. மேலும், இவை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75, டீசல் விலை ரூ.68 அளவுக்குக் கொண்டுவரப்படும் என்றும் தகவல் வெளியானது.

நிர்மலா சீதாராமன் விளக்கம்

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

ஆனால், ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்படாது என்று கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்க்ப்பட்டது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து ஜி.எஸ்.டி கவுன்சில் பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி இந்த விவகாரம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், பெட்ரோலியம் பொருட்களை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். பல உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் தெளிவாகத் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து கேரள உயர் நீதிமன்றத்துக்கு அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்படும். பெட்ரோலியப் பொருட்களை வரி வரம்புக்குள் கொண்டுவர இது சரியான நேரம் இல்லை என ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவு செய்திருக்கிறது’’ என்றார்.

தமிழகம் எதிர்ப்பு!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

இந்தக் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேரடியாகக் கலந்துகொள்ளவில்லை என்றாலும், அவரது உரை எழுத்துப்பூர்வமாக கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. `ஜி.எஸ்.டி-யின் சிக்கலான செயல்பாடு, தொழில்நுட்பம் ஆகிய இரண்டு காரணங்களால் சிறிய அளவில் வரி செலுத்துவோர் மீது சமமற்ற சுமை ஏற்றப்பட்டிருக்கிறது. கலால் வரி, மேல் வரி விதிப்புகளால் மத்திய அரசின் வருமானம் பல லட்சம் கோடி ரூபாய் அதிகரித்திருக்கிறது. ஆனால், மாநிலங்கள் பெரிய அளவில் வருவாயை இழந்திருக்கின்றன. ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டுவருவது மாநிலங்களுக்கு மிகப்பெரிய வரி வருவாயைப் பாதிக்கும். பெரும் அநீதியாக அது அமையும். பெட்ரோல், டீசல் மீதான மேல்வரியை மத்திய அரசு முழுமையாக விலக்கிக் கொள்ளும்பட்சத்தில், அவற்றை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவருவதற்கான தங்களது கருத்தைப் பரிசீலனை செய்யலாம்’ என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

ஆன்லைன் உணவு ஆர்டர்கள்!

ஸ்விக்கி, ஜொமாட்டோ
ஸ்விக்கி, ஜொமாட்டோ

அதேபோல், இந்தக் கூட்டத்தில் ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்ட செயலிகள் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவு வகைகளுக்கு 5% வரி விதிக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வரி விதிப்பை ஆன்லைன் உணவு நிறுவனங்கள் ஹோட்டல்களிடம் பெற்று அரசுக்கு செலுத்தும் என்றும், இதனால், பொதுமக்களுக்குப் பாதிப்பில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.

Also Read – டி.என்.பி.எஸ்.சி தேர்வெழுத ஆதார் கட்டாயமா… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top