ஆர்யாவின் கரியரை ‘சார்பட்டா’ படத்திற்கு முன், ‘சார்பட்டா’ படத்திற்குப் பின் என பிரித்துவிடலாம். சரிவை நோக்கிப் போய்க்கொண்டிருந்த ஆர்யாவின் கரியரை முன்னேற்ற பாதையில் திசை திருப்பியிருக்கிறது பா.ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா’. ஆர்யா மட்டுமல்லாது படம் சார்ந்த அனைவருக்குமே பெரும் திருப்புமுனையாக அமையும் அளவுக்கு இந்தப் படம் அமையவும், மக்கள் இந்தப் படத்தைக் கொண்டாடவும் காரணமாக இருந்த காரணிகள் ஏராளம். அவற்றுள் சிலவற்றைப் பற்றி பார்க்கலாம்.
கதாபாத்திரங்கள்
ஒரு படத்திற்கு உயிர்கொடுப்பது நல்ல கதாப்பாத்திரங்கள்தான். எந்தெந்த படங்களில் ஹீரோ, ஹீரோயின், வில்லன் ஆகியவற்றைத் தாண்டி மற்ற கதாப்பாத்திரங்கள் உயிர்ப்புடன் இருக்கிறதோ அந்த படம் நிச்சயம் வெற்றிபெறும். அந்தவகையில் ‘சார்பட்டா’ படத்தில் ஒவ்வொரு கேரக்டர்களுமே மக்கள் மனதில் பதியும் அளவுக்கு எழுதப்பட்டிருக்கிறது. கபிலன், வாத்தியார், டான்ஸிங் ரோஸ், மாரியம்மாள், தணிகா, ராமன் என கேரக்டரின் பெயரை சொன்னாலே ஆடியன்ஸ் கனெக்ட் செய்துகொள்ளும் வகையில் இயக்குநர் ரஞ்சித் இந்த பாத்திரங்களை எழுதி பிரெசண்ட் செய்த விதம் அனைவரையும் கவர்ந்தது.
நடிகர்கள்
‘சார்பட்டா’ திரைக்கதையில் அழுத்தமான கதாபாத்திரங்கள் நிரம்பியிருந்தது என்றால் அதை திரையில் அழகாக கொண்டு சேர்த்த நடிகர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. பசுபதி, துஷாரா, ஜான் விஜய், ஜி.எம்.சுந்தர், கலையரசன், ‘வேட்டை’ முத்துக்குமார், பிரியதர்ஷிணி ராஜ்குமார் என பங்கெடுத்த அனைத்து நடிகர்களுமே தத்தமது ரோல்களுக்கு தங்களால் இயன்றவரை உயிர்கொடுத்திருக்கிறார்கள். படத்தின் ஹீரோவான ஆர்யா மட்டும் ஆரம்பத்தில் அந்த கதை உலகுக்கு அந்நியமானவராக தெரிந்தாலும் ஒரு கட்டத்துக்குமேல் அவருமே அவர் ஏற்றிருந்த ‘கபிலன்’ கதாபாத்திரமாகத்தான் தெரிந்தார்.
கதை உலகம்
ஒரு கதை எந்த பகுதியில் நடக்கிறதாக காட்டப்படுகிறதோ அந்தப் பகுதியின் நம்பகத்தன்மை படத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அது தெரியவேண்டும். அவ்வாறு ‘சார்பட்டா’ படத்தில் கதை நடைபெறும் வட சென்னை மக்களின் வாழ்வியலை இம்மி பிசகாமல் அவர்களின் பேசும் மொழி, உடற்மொழி, உடை, வாழ்விடம் என எல்லோவற்றிலும் உண்மைக்கு பக்கத்தில் சென்றிருக்கிறார் ரஞ்சித். கூடுதலாக இந்த்க் கதை 80-களில் நடப்பதுபோல் சித்தரிக்கப்பட்டிருப்பதால் அதற்கேற்ற நியாயங்களையும் செய்யத் தவறவில்லை.
சண்டைக்காட்சிகளில் நம்பகத்தன்மை
வழக்கமாக இதுபோன்ற சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்களில் சண்டைக்கலைஞர்களை நடிக்கவைப்பது வழக்கம். ஆனால், இயக்குநர் ரஞ்சித் இந்தப் படத்தில் பயன்படுத்திய அனைவருமே ஒன்று பாக்ஸிங் வீரர்களாக இருக்கிறார்கள் அல்லது பாக்ஸிங் போட்டியில் ஈடுபடக்கூடிய அளவுக்கு பயிற்சிபெற்ற நடிகர்களாக இருக்கிறார்கள். இவர்களால் அந்த சண்டைக்காட்சிகளில் ஏற்பட்ட நம்பகத்தன்மை கதையோட்டத்திற்கு பெரிதும் உதவியது.
படம் பேசும் அரசியல்
மேம்போக்காக இதுவொரு பாக்ஸிங் படம்போல தோன்றினாலும் உள்ளார்ந்து ரஞ்சித் பேசியிருக்கும் அரசியல் அதி முக்கியமானது. திராவிடக் கட்சிகளின் தாக்கங்களால் தமிழக இளைஞர்களின் வாழ்வில் எவ்வாறெல்லாம் நன்மை, தீமைகள் ஏற்படுகிறது என்பதை கேஷூவலாக பதிவு செய்த ரஞ்சித், கிளைமேக்ஸ் போட்டியில் `கபிலன்’ பாத்திரத்திற்கு நீல நிற ஜெர்க் அணிவித்து தான் சார்ந்த அரசியல் கருத்துக்களையும் பதிவு செய்ய தவறவில்லை.
Also Read – சி.சு.செல்லப்பா: `வாடிவாசல்’ கதை பேசும் அரசியல்!