ஓமந்தூரார்

ஓமந்தூரார் மருத்துவமனை: தலைமைச் செயலக அரசியல்; தலைதூக்கும் இடமாற்ற விவகாரம்… பின்னணி என்ன?

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில், அந்தக் கட்டடம் தலைமைச் செயலகமாகத் திறக்கப்பட்டபோது வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு மீண்டும் வைக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்யத் திட்டமிடுகிறதா.. என்ன நடக்கிறது.

ஓமந்தூரார் தோட்டம் – புதிய தலைமைச் செயலகம்!

தமிழகத்தில் கடந்த 2006-11 காலகட்டத்தில் தி.மு.க ஆட்சியில் இருந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, எம்.எல்.ஏவாக அரை நூற்றாண்டை நிறைவு செய்திருந்தார். அந்த சூழலில் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் ஓமந்தூரார் தோட்டத்தில் ரூ.629 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள், விசாலமான இட வசதியுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் கட்டத் திட்டமிடப்பட்டது. 2008-ம் ஆண்டு புதிய கட்டடப் பணிகளுக்கு கருணாநிதி அடிக்கல் நாட்டினார். இரண்டு ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்பட்டு 2010-ம் ஆண்டு மார்ச் 13-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் புதிய தலைமைச் செயலகத்தைத் திறந்துவைத்தனர்.

 புதிய தலைமைச் செயலகம்!
புதிய தலைமைச் செயலகம்!

அந்த நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி, `என்னை அடைத்துவைத்த இந்த இடத்தில்தான் இப்போது புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டிருக்கிறது’ என்றார். (2001-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மேம்பால ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாநிதி, ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த போலீஸின் ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்). அதைத் தொடர்ந்து செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்த அரசு அலுவலகங்கள் படிப்படியாக மாற்றப்பட்டு வந்தநிலையில், 2011 தேர்தலில் அ.தி.மு.க வென்று ஜெயலலிதா முதல்வரானார். அப்போது ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த கட்டடத்தில் தலைமைச் செயலகம் செயல்பட ஏதுவாக இல்லை என்று கூறி, தலைமைச் செயலகத்தை செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கே மீண்டும் மாற்ற 2011 மே 20-ல் ஜெயலலிதா உத்தரவிட்டார். மேலும், அந்தக் கட்டடத்தை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றவும் உத்தரவிட்டார். இதையடுத்து, அங்கு கடந்த 10 வருடங்களாக மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

ஊழல் புகார் – ஆணையம்

ஓமந்தூரார் அரசினர் தோட்ட கட்டடத்தைக் கட்டுவதில் ஊழல் நடந்ததாகக் கூறி, அதை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆர். ரகுபதி தலைமையில் ஒரு ஆணையத்தையும் ஜெயலலிதா அமைத்தார். விசாரணை ஆணையத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் கருணாநிதி, ஸ்டாலின், துரைமுருகன் சார்பில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆணையத்தை முடக்கியது. இதையடுத்து, ஆணையத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி விலகினார். மேலும், ஊழல் தொடர்பாக விசாரிக்க ஆணையத்துக்கு புதிய நீதிபதியை நியமிக்க விரும்பவில்லை என்றும், இதுபற்றி அடுத்தகட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொள்ளும் என்றும் அ.தி.மு.க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து, தி.மு.க சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குத் திரும்பப் பெறப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், `அரசியல் காரணங்களுக்காக அரசு எடுக்கும் முடிவுகளால் மக்களின் வரிப்பணம் பெரிதும் வீணடிக்கப்படுகிறது. புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியதில் மக்களின் பணம் பெரிதும் வீணடிக்கப்பட்டதோடு, அதில் முறைகேடு நடந்ததாகக் கூறி அதை விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டதில் 5 கோடி ரூபாய் மேலும் செலவழிக்கப்பட்டது. இப்படி தன்னுடைய வரிப்பணம் வீணடிக்கப்படுவது குறித்து கேள்வியெழுப்ப ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு’ என்று அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகம் மாற்றம்?

இந்தநிலையில், 2021 தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. இதையடுத்து, பேரவையின் முதல் கூட்டத் தொடரின்போதே தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் மருத்துவமனைக் கட்டடத்துக்கு மாற்ற இருப்பதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து அ.தி.மு.க சார்பில் ஓ.பி.எஸ் அப்போதே எதிர்ப்புத் தெரிவித்தார். தலைமைச் செயலகத்தை மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தவில்லை என தி.மு.க தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.

கல்வெட்டு
கல்வெட்டு

தி.மு.க-வின் மாஸ்டர் பிளான்?

தலைமைச் செயலகத்தை மாற்றுவது குறித்து தி.மு.க தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக பேசப்படவில்லை. கொரோனா சூழலால் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. அதேநேரம், தலைமைச் செயலகத்தை மாற்ற வேண்டும் என தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க போன்றவை கோரிக்கையாகவே பேரவைக் கூட்டத்தொடரில் பதிவு செய்திருக்கின்றன. இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜகுமார்,கொரோனா சூழலால் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை கலைவாணர் அரங்கில் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி பார்த்து பார்த்து கட்டிய சட்டப்பேரவை இன்று மருத்துவமனையாக உள்ளது. அந்த ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு மீண்டும் அங்கு சட்டப்பேரவையை நடத்த வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதேபோல், வாசுதேவநல்லூர் ம.தி.மு.க எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமார்,அரசு பன்னோக்கு மருத்துவமனையை தென்சென்னைக்கு மாற்றிவிட்டு சட்டப்பேரவையை ஓமந்தூரர் அரசினர் கூட்டத்தில் நடத்த வேண்டும்’’ என்று பேரவையில் வலியுறுத்தினார்.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

இதனால், சட்டப்பேரவையை இடமாற்றம் செய்வது குறித்து தி.மு.க நேரடியாகப் பேசாமல் கூட்டணிக் கட்சிகள் வாயிலாக இதுகுறித்து சூசகமாகப் பேச வைத்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். பேரவை இடமாற்றத்தை சர்ச்சைகள் ஏதுமின்றி நிகழ்த்திக் காட்டவே தி.மு.க தலைமை விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

கல்வெட்டு

இந்தநிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் புதிய தலைமைச் செயலகம் திறக்கப்பட்டது குறித்த கல்வெட்டு மீண்டும் வைக்கப்பட்டிருக்கிறது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது சோனியா காந்தி முன்னிலையில், பிரதமர் மன்மோகன் சிங், புதிய தலைமைச் செயலகத்தைத் திறந்து வைத்ததாகக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா பெயர் கொண்ட கல்வெட்டுக்கு 4 அடி இடைவெளிவிட்டு புதிய தலைமைச் செயலகக் கட்டடம் என்ற கல்வெட்டும் மீண்டும் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இதனால், தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் தோட்டத்தில் இருக்கும் கட்டடத்தில் செயல்பட வைக்க வேண்டும் என்ற கருணாநிதியின் கனவை நிறைவேற்ற ஸ்டாலின் திட்டமிடுகிறாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

கல்வெட்டு
கல்வெட்டு

அமைச்சர் சுப்பிரமணியன்

தென்சென்னையில் அரசு பன்னோக்கு மருத்துவமனை கட்டப்படும் என மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. கிண்டி கிங்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.250 கோடி செலவில் 500 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பன்னோக்கு மருத்துவமனை அங்கு இடம் மாற்றப்படலாம் என்கிறார்கள். மருத்துவமனை குறித்து கேள்வி கேட்பவர்களுக்குப் பதிலாக இது அமையும் என்று நினைக்கிறது தி.மு.க தலைமை என்கிறார்கள். சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் இருக்கும் சட்டப்பேரவை கூட்ட அரங்கு, அமைச்சர்கள், தலைமைச் செயலகத்துக்கான அலுவலகங்கள் போன்றவை பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. அதை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்வது குறித்த திட்டத்தை முதலமைச்சர் அறிவிப்பார்’’ என்று கூறியிருக்கிறார். பேரவை இடம் மாற்றத்துக்கான அறிகுறியாகவே இதுவும் பார்க்கப்படுகிறது.

Also Read : கே.சி.வீரமணி: 645% சொத்து அதிகரிப்பு; 28 இடங்களில் சோதனை – எஃப்.ஐ.ஆர் என்ன சொல்கிறது?-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top