எஸ்.பி.சைலஜா… இவங்களை எஸ்.பி.பி.யோட தங்கச்சியா உங்களில் பல பேருக்கு தெரிஞ்சிருக்கும்; சூப்பர் சிங்கர் ஜட்ஜா சிலருக்கு தெரிஞ்சிருக்கும். ஆனால், ஒரு சூப்பர் பாடகியா இவங்க என்னென்ன சம்பவங்கள் பண்ணியிருக்காங்கனு உங்களுக்கு தெரியுமா..? இவங்க பாடுன பாடல்கள் என்னென்னனு பார்த்தீங்கன்னா, ‘இதெல்லாம் இவங்க பாடுன பாட்டா?’னு நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க. அப்படி உங்களுக்கு பல ஆச்சரியங்களை கொடுக்கப்போற வீடியோதான் இது.
எஸ்.பி.சைலஜா அவங்களோட கரியரில் ரெண்டு டைப்ஸ் ஆஃப் பாடல்கள் பாடியிருக்காங்க. ஒன்னு நம்மை பயங்கரமா ஆட வைக்கிற பாடல்கள்; இன்னொரு நம்மை அழ வைக்கிற பாடல்கள். முதலில் நம்மை ஆட வைக்கிற மாதிரி என்னென்ன பாடல்கள் பாடியிருக்காங்கனு பார்க்கலாம். ராஜா சின்ன ரோஜா படத்துல சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா; ஜானி படத்துல ஆசைய காத்துல; மனிதன் படத்துல காளை காளை; சகலகலா வல்லவன் படத்துல கட்ட வண்டி கட்ட வண்டி; விக்ரம் படத்துல என் ஜோடி மஞ்சக்குருவி; அபூர்வ சகோதரர்கள் படத்துல புது மாப்பிள்ளைக்கு; சங்கர் குரு படத்துல காக்கிசட்ட போட்ட மச்சான்; மாநகரகாவல் படத்துல வண்டிக்காரன் சொந்த ஊரு; முந்தானை முடிச்சு படத்துல வா வா வாத்தியாரே; ஜெய்ஹிந்த் படத்துல போதை ஏறிப்போச்சுனு பல பாடல்கள் சொல்லிக்கிட்டே போகலாம்.
சைலஜா ஒரு நல்ல பாடகி மட்டுமில்ல; ஒரு நடிகையும்தான். ஆனா, அவங்க ஒரு படத்துக்கு மேல நடிக்கவேயில்லை. கமல் நடிச்ச சலங்கை ஒலி படத்துல ஜெயபிரதாவுக்கு மகளா; கமல்கிட்ட பரதநாட்டியம் கத்துக்கிற பெண்ணா நடிச்சிருப்பாங்க. நடிகையா முதல் படத்துலேயே கமலுடன் கலகம் செய்யும் நடிப்பாலும்; துடிப்பான நடனத்தினாலும் பலரது பாராட்டையும் பெற்ற சைலஜா, அதற்குபின் நடிக்கவேயில்லை. ஏன்னா, அவருக்கு நடிப்பின் மேல் ஆர்வமே இல்லையாம். இந்தப் படத்தில் நடிப்பதற்கும் முதலில் மறுக்கவே செய்திருக்கிறார். சைலஜாவின் பரதநாட்டிய அரக்கேற்றத்தைப் பார்க்க வந்த இயக்குநர் கே.விஸ்வநாத், அடுத்து தான் இயக்கப்போகும் படத்தின் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்கு இவர் சரியாக இருப்பார் என்று கேட்டப்போது மறுத்துவிட்டார். அவர்களும் அடுத்தடுத்து சில நபர்களை நடிக்க வைக்க முயற்சி எடுக்க, இயக்குநருக்கு சைலஜாதான் சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது. பிறகு, சைலஜாவின் அப்பாவிடம் பேசி சம்மதம் வாங்கியிருக்கிறார். இந்தப் படத்தில் சைலஜா பாடுவதைப் போல் வரும் வேதம் அனுவிலும் ஒரு நாதம் பாடலையும் நாத வினோதங்கள், வான் போலே வண்ணம் கொண்டு என சலங்கை ஒலி படத்தில் மூன்று பாடல்களை பாடியிருக்கிறார்.
சைலஜாவோட எவர்க்ரீன் காம்போ என்னனு பார்க்கலாம். ஜோடி பாடல்களை பொறுத்தவரைக்கும் எஸ்.பி.பிதான் சைலஜாவோட சக்ஸஸ்ஃபுல் காம்போ. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய காதல் பாடல்கள் பாடியிருக்காங்க. ஆனால், ஆரம்பகாலத்தில் அண்ணனோடு சேர்ந்து எப்படி காதல் பாட்டு பாடுறது என தயங்கியிருக்கிறார் சைலஜா. பிறகு எஸ்.பி.பி.தான் அந்த தயக்கத்தை உடைத்திருக்கிறார். ‘நாம பாடுற காதல் பாட்டுக்கு வேற ரெண்டு பேருதான் ஸ்க்ரீன்ல வரப்போறாங்க. நம்மளோட வேலை அந்தப் பாட்டுக்கு தேவையான எமோஷன்ஸோடு பாடுறது மட்டும்தான். எந்த தயக்கமும் இல்லாம பாடு’னு சொல்லியிருக்கார். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து கொக்கரக்கோ படத்துல கீதம் சங்கீதம்; ரோசாப்பூ ரவுக்கைக்காரி படத்துல மாமன் ஒருநாள் மல்லிகைப்பூ கொடுத்தான்னு பல பாடல்களை திரையிலும் பல பாடல்களை மேடைகளிலும் இணைந்து பாடியிருக்காங்க. இசை கச்சேரிகளில் எஸ்.பி.பி.யும் சைலஜாவும் சேர்ந்து பாடிய அளவுக்கு எஸ்.பி.பி.சரணும் சைலஜாவும் சேர்ந்தே நிறைய பாடல்கள் பாடியிருக்காங்க. இவங்க மூணு பேரும் ஒன்னா மேடையில் நின்றாலும் சரி; சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு நடுவர்களாக சென்றாலும் சரி… அங்கு பாட்டுகும் ஃபன்னுக்கும் குறையே இருக்காது.
எஸ்.பி.பி-க்கு அடுத்து சைலஜாவோட இன்னொரு பக்கா காம்போவா அது இளையராஜாதான். இளையராஜா இசையில் சைலஜா பாடுய முதல் பாட்டு பொண்ணு ஊருக்கு புதுசுங்கிற படத்துலவர சோலைகுயிலே பாடல்தான். முதலில் இந்தப் பாடலை வேற பாடகியை வெச்சு ரெக்கார்ட் பண்றதுதான் ப்ளானா இருந்துச்சு. அந்த சமயத்தில் இளையராஜாக்கூட இருந்த ஒருத்தர், நம்ம எஸ்.பி.பி.யோட தங்கச்சி அவரோடு சேர்ந்து மேடைகளில் பாடிட்டு இருக்காங்க. இந்தப் பாட்டுக்கு அவங்களை நாம ட்ரை பண்ணி பார்க்கலாமா’னு கேட்டிருக்கிறார். அதுக்கு இளையராஜா தயக்கத்தோடு, ‘இல்லய்யா வேணாம். எனக்கு குரல் பிடிக்கலைனா அதை நான் எப்படி சொல்ல முடியும். எஸ்.பி.பி தப்பா நினைச்சுப்பாரே’னு சொல்லியிருக்கார். முதலில் வர வெச்சு வாய்ஸ் டெஸ்ட் பண்ணிப் பார்ப்போம். அதுக்கப்பறம் முடிவு பண்ணிக்கலாம்னு ராஜாவை கன்வின்ஸ் பண்ணி சைலஜாவை வாய்ஸ் டெஸ்டுக்கு வர வெச்சுட்டாங்க. சைலஜா வந்து பாடுனதும் ராஜாவுக்கு பிடிச்சிடுச்சு. ‘நாளைக்கே உனக்கு ரெக்கார்டிங் இருக்கு’னு சொல்லிட்டு கிளம்பிட்டார். அடுத்த நாள் காலையில இந்தப் பாட்டை முடிச்சிட்டு, ‘அடுத்து என்கூட டூயட் பாடுறியா’னு கேட்டிருக்கார். அதே படத்துல சாமக்கோழி ஏன் கூவுதுனு இன்னொரு பாட்டை அன்னைக்கு மதியமே ரெண்டு பேரும் சேர்ந்து பாடியிருக்காங்க.
இப்படி ஆரம்பிச்ச இந்த காம்போ அதுக்கப்பறம், அகல் விளக்கு படத்துல ஏதோ நினைவுகள், மீண்டும் கோகிலா படத்துல சின்னஞ்சிறு வயதில், நிறம் மாறாத பூக்கள் படத்துல ஆயிரம் மலர்களே, ஆனந்தக்கும்மி படத்துல ஒரு கிளி உருகுது, கல்யாண ராமன் படத்துல மலர்களில் ஆடும் இளமை, கோபுரங்கள் சாய்வதில்லை படத்துல என் புருஷன்தான், ராஜாதி ராஜா படத்துல வா வா மஞ்சள்மலரே, தனிகாட்டு ராஜா படத்துல ராசாவே உன்ன நான் எண்ணித்தான், சிப்பிக்குள் முத்து படத்துல தர்மம் சரணம்னு இவங்க கூட்டணியில் வந்தப் பாடல்கள் எல்லாமே எவர்க்ரீன் ரகம்தான்.
நடிகை, பாடகி என்பதையும் தாண்டி சைலஜா டப்பிங் ஆர்டிஸ்டும்கூட. ராதிகா, ஸ்ரீதேவி, சரண்யா பொன்வண்ணன், அமலா, ரேகா, தேவயானி என பல முன்னணி தமிழ் நடிகைகளுக்கு தெலுங்கில் டப்பிங் கொடுத்திருக்கிறார்.
Also Read – யுவன் ஆஃபீஸ்ல அசிங்கப்படுத்தப்பட்ட பாடகர்.. பிக்பாஸ் ஏ.டி.கே பயணம்!
சைலஜா பாடிய பாடல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் என்ன என்பதையும் இவங்க பாடிய பாடலா இதுனு உங்களை ஆச்சரியப் படுத்திய பாடல் எது என்பதையும் மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.