village cooking channel

வில்லேஜ் குக்கிங் சேனல் ஆரம்பிக்கப்பட்ட கதை தெரியுமா?

`வில்லேஜ் குக்கிங் சேனல்‘ – கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் இந்தப் பெயர்தான் டிரெண்டிங். ஏன்னு உங்களுக்கே தெரியும்! ஆமாங்க, வில்லேஜ் குக்கிங் சேனல்தான் தென்னிந்தியாவிலேயே ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களைப் பெற்ற முதல் யூ டியூப் சேனல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக யூ டியூப் நிறுவனம் இவர்களுக்கு டைமண்ட் பட்டனை அளித்துள்ளது. யூ டியூப் சேனல் மூலமாக கிடைத்த வருவாயில் இருந்து சுமார் பத்து லட்சம் ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்ததும் சமூக வலைதளங்களில் இவர்களுக்கு பாராட்டைப் பெற்றுக் கொடுத்தது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது ராகுல்காந்தி இவர்களுடன் இணைந்து காளான் பிரியாணி சமைத்து சாப்பிட்ட வீடியோவும் டிரெண்டானது. புதுக்கோட்டை மாவட்டம் சின்ன வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ள ஐயனார், சுப்பிரமணியன், முருகேசன், முத்து மாணிக்கம், தமிழ் செல்வன் மற்றும் இவர்களின் தாத்தா ஆகியோர் இணைந்துதான்  ‘வில்லேஜ் குக்கிங் சேனலை’ நடத்தி வருகிறார்கள். வில்லேஜ் குக்கிங் சேனலின் வெற்றியை இன்றைக்கு பலரும் பாராட்டி வருகிறார்கள். ஆனால், அவர்கள் சேனல் ஆரம்பித்த கதை உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றிதான் இன்றைக்கு தெரிஞ்சுக்கப்போறோம். வாங்க!

வில்லேஜ் குக்கிங் சேனல்
வில்லேஜ் குக்கிங் சேனல்

யூ டியூப் சேனலை ஆரம்பித்த கதை தொடர்பாக வில்லேஜ் குக்குங் சேனல் குழுவின் சுப்பிரமணி பேசும்போது, “எங்க குடும்பத்துல எல்லாருமே வெளிநாடு போக வேண்டிய கட்டாயத்துல இருந்தோம். குடும்பத்துல இருக்குற ஆம்பளைங்க எல்லாருமே வெளிநாடு போறோம்னு சொன்னதும் ஒரு மாதிரி ஃபீல் பண்ணாங்க. அவங்கள கஷ்டப்படுத்திட்டு போனுமா? 5 பேர் கிராமத்துல இருந்து எதுவும் பண்ண முடியாதா? அப்டின்ற கேள்வி உள்ளூர்ல இருந்து எதாவது வேலை பாக்கனும்ன்ற ஆர்வத்தை தூண்டிச்சு. அப்புறம்தான் யூ டியூப் சேனல் ஆரம்பிச்சோம். எட்டு மாசம் டி.வில வர்ற மாதிரி சமையல் பண்ணோம். அதை மக்கள் விரும்பல. முக்கால்வாசி எல்லாமே ஃபெயிலியர் ஆயிடுச்சு. இனிமேல் மக்களுக்காக இல்லைனாலும் நம்முடைய வாழ்க்கை முறையை பதிவு பண்ணனும்ன்றதுக்காக.. சின்ன பிள்ளையா இருக்கும்போது ஈசல் புடிச்சு சின்ன ரிசி போட்டு வருத்து சாப்பிட்டோம். வருஷத்துக்கு ஒருதடவைதான் ஈசல் புடிக்கலாம். தீபாவளி, பொங்கலைவிட பெரிய கொண்டாட்டமா இது இருக்கும். அதை பதிவு பண்ணனும்னு நினைச்சு அதை வீடியோ பண்ணி போட்டோம். அதுக்கு அதிகமான வரவேற்பு கிடைச்சுது. அன்னைக்கு ஒரு சந்தோஷம் கிடைச்சுது. இன்னைக்கு வரைக்கும் அந்த சந்தோஷம் தொடர்ந்துட்டேதான் இருக்கு.

வில்லேஜ் குக்கிங் சேனல்
வில்லேஜ் குக்கிங் சேனல்

உள்ளூர்ல நிறைய பேர் வேலை பாக்குறாங்க. உள்ளூர்ல வேலை கிடைக்காதப்பதான் மக்கள் வெளியூர் போக ஆரம்பிக்கிறாங்க. ஆறு மாசம் விவசாயம் பண்ணனும். ஆறு மாசம் விவசாயம் இருக்காது. அப்போ சும்மாதான் இருக்கனும். எனக்கு கொஞ்சம் இண்டர்நெட் தொடர்பான அறிவு இருக்கு. இண்டர்நெட்ல என்ன பண்ணலாம்னு யோசிச்சோம். அப்போ யூ டியூப் எல்லாருமே பயன்படுத்துறாங்க. அதுல எதாவது ட்ரை பண்ணலாம்னு தொடங்கினோம். நாங்க ஆரம்பிக்கும்போது சமையல் பயங்கர டிரெண்டிங்ல இருந்துச்சு. விளையாட்டாதான் ஆரம்பிச்சோம். எவ்வளவு வருமானம் வரும், சப்ஸ்கிரைபர்கள் வருவாங்க, எவ்வளவு வியூஸ் வரும்னு எதுவும் தெரியாது. ஆனால், கமெண்ட்ஸ் வரும்னு எதிர்பார்த்தோம். ஆனால், இந்த அளவுக்கு வளர்ச்சி கிடைக்கும்னு எதிர்பார்க்கல. எங்களுடைய குடும்பமா சப்ஸ்கிரைபர்கள் கிடைச்சிருக்காங்க. அதுதான் எங்களுக்கு ரொம்பவே சந்தோஷம். எங்களுடைய சப்ஸ்கிரைபர்கள் சொல்லக்கூடிய விஷயங்களை நாங்க ரொம்பவே கவனிப்போம். குறிப்பிட்டு சொல்லனும்னா, ஆல்வேஸ் வெல்கம்னு ஒரு வீடியோல சொன்னோம். சப்ஸ்கிரைபர்ஸ் ரொம்ப நல்லாருக்கு கன்டினியூ பண்ணுங்கனு சொன்னாங்க. அப்படியே அதை கன்டின்யூ பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டோம். சப்ஸ்கிரைபர்கள் சொன்ன கருத்து மூலமாதான் எல்லாமே பண்ணோம்” என்று வீடியோவில் பார்க்கும் அதே எனர்ஜியுடன் நக்கீரன் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளனர்.

வில்லேஜ் குக்கிங் சேனல்
வில்லேஜ் குக்கிங் சேனல்

சமைக்கப்போற உணவு வகைகளை முன்னாடியே தங்களோட வீட்டுல சமைச்சு பாத்துப்பாங்களாம் வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர். வீட்டுல வர்ற டேஸ்ட் எல்லாம் வச்சுதான் அந்த உணவை சமைக்கலாம்னு முடிவு பண்ணுவாங்களாம்.  அதுமட்டுமில்ல வீடியோவை எல்லாம் எடிட் பண்ணி முடிச்சதும் அதை அப்லோட் பண்றதுக்கு படாதபாடு படுவாங்களாம். ஏன்னா.. அவங்க ஊர்ல இண்டர்நெட் வேகம் ரொம்பவே குறைவா இருக்குமாம். இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவரான ராகுல் காந்தி வரைக்கும் வில்லேஜ் குக்கிங் சேனல் ரீச் ஆயிருந்தாலும், தங்களுடைய சொந்த கிராமத்துல மக்கள் பலரும் தங்களோட வீடியோக்களை பாக்கலங்குற வருத்தம் வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவுக்கு இருந்ததுனு சொல்லிருக்காங்க. ராகுல் காந்தி வந்ததுக்கு அப்புறம் அவங்களோட சேனல் பெயர் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் வந்தது. இதைப் பார்த்த பின்னர்தான் அவங்களோட கிராம மக்கள் அவங்களை பாராட்டியிருக்காங்க. வில்லேஜ் குக்கிங் சேனலோட இன்னொரு பிளஸ் அவங்களோட கேமரா மற்றும் எடிட்டிங் வொர்க். இவ்வளவு சிறப்பா வீடியோ அவுட் வர்றதுக்கு முன்னாடி பெரிய கதையே இருக்குதுனு சொல்றாங்க. இதுதொடர்பாக கேமரா மேன் சுப்பிரமணி பேசும்போது, “என்னோட சொந்தகாரங்க திருமண நிகழ்ச்சில நான் கேமரா பயன்படுத்துறத பார்த்து அங்க வந்துருந்த கேமரா மேன் எல்லாம் சிரிச்சாங்க. அப்போ ஒரு வைராக்கியம் நான் ஜெயிச்சு காட்டுவேன் அப்டினு. அப்புறம்தான் கத்துக்கிட்டு வந்தேன்” என்றார்.

நிறைய தோல்விகளைக் கடந்து மிரட்டல்களைக் கடந்து இன்றைக்கு இந்திய அளவில் மட்டுமில்லாது உலக அளவிலும் தனக்கென ரசிகர்களை பெற்றிருக்கும் வில்லேஜ் குக்கிங் சேனலைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க மக்களே!

Also Read : `பி டீம்’ பஞ்சாயத்து – இந்திய அணி மீதான விமர்சனம் சரியா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top