`உங்கள் வாழ்நாளில் தமிழர்களை ஒருபோதும் ஆள முடியாது. அதை நடத்திக் காட்ட முடியாது’ என்று பா.ஜ.க-வைப் பார்த்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.
பட்ஜெட் கூட்டத்தொடர்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் ஜனவரி 31-ல் தொடங்கியது. பிப்ரவரி 1-ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். கொரோனா சூழலால், காலையில் மாநிலங்களவையும் மாலையில் மக்களவையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை கூடிய மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடந்தது. மாலை 3 மணிக்கு மாநிலங்களவை முடிந்த நிலையில், 4 மணியளவில் மக்களவை கூடியது. மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரை மீதான விவாத்தத்தை பா.ஜ.க-வைச் சேர்ந்த ஹரிஷ் துவிவேதி தொடங்கி வைத்தார். அதன்பின்னர், எதிர்க்கட்சிகள் சார்பில் முதல் ஆளாக வயநாடு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விவாதத்தில் பங்கேற்றுப் பேசினார். தனது பேச்சில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, பல்வேறு விவகாரங்கள் குறித்து சுமார் அரை மணி நேரத்துக்கும் மேல் பேசினார்.
ராகுல் காந்தி பேச்சு
அவர் பேசுகையில், “நமது நாட்டைப் பற்றிய இரண்டு யோசனைகள் உள்ளன. கட்டுக்கடங்காத அதிகாரத்தை வைத்துக் கொண்டு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வேலை போன்றவை எதுவும் தேவைப்படாத பணக்காரர்களுக்கான இந்தியா, மற்றொன்று ஏழை, எளிய மக்களுக்கான இந்தியா. இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கும் இந்த இரண்டு பேருக்குமான இடைவெளியும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஏழைகளுக்கான ஒரு இந்தியா; பணக்காரர்களுக்கான ஒரு இந்தியா என இரண்டு இந்தியாக்கள் இருக்கின்றன. அரசு அந்த இரண்டு இந்தியர்களுக்குமான இடைவெளியைக் குறைக்க ஆக்கப்பூர்வமாக செயலாற்ற வேண்டும்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்றே வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாடாக எந்தவொரு இடத்திலும் வரையறுக்கப்படவில்லை. இது மன்னராட்சி அல்ல. மாநில உரிமைகளைக் காப்பதை நமது ஒட்டுமொத்த நாடும் தமிழ்நாட்டிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தமிழ் சகோதரரிடம் சென்று, உங்களுக்கு என்ன தேவை’ என்று கேட்டால், எனக்கு இதெல்லாம் தேவை என்று அவர் சொல்வார். அவர் நம்மிடம்,
உங்களுக்கு என்ன தேவை’ என்று கேட்டால், நமக்குத் தேவையானதை அவரிடம் சொல்வோம். இதன் பொருள் இரண்டு தரப்புக்கும் இடையே நடக்கும் உரையாடல். இருதரப்பும் பரஸ்பரம் அவரவர் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவே ஜனநாயகம். இது மன்னர் ஆட்சி செய்யும் நாடு அல்ல. உங்கள் வாழ்நாளில் ஒருபோதும் தமிழர்களை உங்களால் ஆளவே முடியாது. அதை எப்போதும் நிகழ்த்திக்காட்ட முடியவே முடியாது’’ என்று பேசினார்.
மேலும், `நாட்டின் 40% செல்வம் வெகு சிலரிடமே இருக்கிறது. இன்று நாட்டின் 84% பேரின் வருமானம் குறைந்து, வறுமை நிலையை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். அமைப்புசாரா தொழில்துறையை நசுக்கிவிட்டால், மேக் இன் இந்தியா என்ற ஒன்று நிகழவே நிகழாது என்றும் பேசினார். அத்தோடு, கொரோனா, பெகாசஸ், சீனாவுடனான எல்லை பிரச்னை போன்றவற்றையும் தனது பேச்சில் ராகுல் காந்தி குறிப்பிட்டுப் பேசினார்.
Also Read – `முண்டாசு’ தியேட்டர் விசிட்; வங்கிக் கணக்கு – அறிஞர் அண்ணா.. 9 சுவாரஸ்யங்கள்!