யோகி பாபுன்ற ஒருத்தரால மட்டும்தான் நயன்தாராவுக்கு ப்ரபோஸ் பண்ண முடியும், பரியனுக்கு அறிவுரை சொல்ற அரவணைக்கிற நண்பனா இருக்க முடியும், சூப்பர் ஸ்டாரையே கலாய்க்க முடியும், ஃபாரீன் போட்டு வர்றவங்க வலியை சொல்ல முடியும், ஒத்த ஓட்டுக்கான அரசியலை அப்படியே நடிப்பால கடத்த முடியும், சீரியஸா பேசி விழுந்து விழுந்த நம்மளை சிரிக்க வைக்க முடியும். இவ்வளவு ஏன், ஃபுட்பால் வீரராவும் கலக்க முடியும். அவரோட சினிமா பயணம் பத்திதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.
இராணுவ வீரர் ஆகணும்ன்றதுதான் பாபுவோட ஆசை. ஏன்னா, அவங்க அப்பாவும் நாட்டுக்காக போராடுன வீரர்களில் ஒருத்தர். அதனாலயே, இவருக்கும் அந்த ஆசை வந்திடுச்சு. ஸ்கூல் படிக்கும்போது ஆசிரியர்கள்கிட்ட அடிவாங்குற, எப்பவுமே கிளாஸ்க்கு கட் அடிக்கிற கேங்க் ஒண்ணு இருக்கும்ல? அந்த கேங்க் தான் பாபுவும். 10 வது வரைக்கும் தட்டுத் தடுமாறி வந்த பாபு, 10 வதுல ஃபெயில். ஒருநாள் வெளிய கிளம்பி போகும்போது அவங்க அப்பா எதிர்ல வந்துருக்காரு. “எங்கப் போற?”னு கேட்ருக்காரு. உடனே, பாபு பவ்யமா, “ரிஸ்ல்ட் பார்க்கப் போறேன்”னு சொல்லிருக்காரு. அதுக்கு அவங்கப்பா, “உள்ளப்போ, ரிஸல்ட் என்னனு எனக்கு தெரியும்”னு சொல்லியிருக்காரு. அவங்க அப்பா சொன்ன மாதிரியே அந்த தடவையும் அவர் ஃபெயில். கஜினி முகமது படையெடுத்த மாதிரி பல தடவை எழுதிதான் பாஸ் ஆனதா பாபு சொல்லுவாரு. அப்புறம் ராணுவம்ல எப்படியாவது சேரணும்னு முயற்சி பண்ண ஆரம்பிச்சிருக்காரு.
முதல் தடவை ட்ரை பண்ணப்போ கிடைக்கலை. சரி, அடுத்த தடவை ட்ரை பண்ண வெயிட் பண்ணும்போது, பாபுவோட ஃப்ரெண்ட், “என்னோட அண்ணன் லொள்ளு சபா டீம்ல லைட் மேனா வேலை பார்க்குறாரு. பணம் வாங்கணும். கூட வறியா?”னு கேட்ருக்காரு. லொள்ளு சபா செம பீக்ல இருந்த சமயம். சரி, ஷூட்டிங் எல்லாம் பார்க்கலாம்னு ஆவலா கிளம்பி போய்ருக்காரு. அங்க போகும்போது பாபு மொட்டையடிச்சிட்டு இருந்துருக்காரு. பாபுவை பார்த்ததும் ராம் பாலா, “யார் இந்த பையன்? ஒருமாதிரியா இருக்கான்!”னு கூட இருந்தவங்கள்ட கேட்ருக்காரு. அப்புறம் பாபுக்கிட்ட, “என்ன பண்றீங்க?”னு கேட்ருக்காரு. “வேலை தேடிட்டு இருக்கேன். ஆர்மி ஆஃபர் வந்ததும் ட்ரை பண்ணனும்”னு சொல்லிருக்காரு. உடனே, ராம் பாலா, “சும்மா நடிக்கலாமே”னு சொல்லிருக்காரு. எல்லார் முன்னாலயும் நடிச்சுக் காட்ட சொல்லியிருக்காரு.
திருவிளையாடல்ல சிவாஜி கடல் பக்கம் நடந்து வர்றது, மூன்று முகம்ல ரஜினி சிகரெட் பிடிச்சுட்டு “அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் உரசுனாலும் தீப்பிடிக்கும் டயலாக்” சொல்ல சொல்லிருக்காரு. ஆனால், பாபுவுக்கு அது வரவே இல்லை. செட்ல இருந்தவங்க எல்லாம் இவர் பண்றதைப் பார்த்துட்டு பயங்கரமா சிரிச்சிருக்காங்க. கொஞ்சம் நாள் கழிச்சு லொள்ளு சபா டீம்ல இருந்து ஃபோன் பண்ணி 4 செட் டிரெஸ் எடுத்துட்டு வானு கூப்பிட்டு அட்மாஸ்ஃபியர்ல நிக்க வைச்சிருக்காங்க. ராம் பாலா, பாபுவை பார்க்கும்போதுலாம், “இந்த மூஞ்சு நல்ல காமெடி மூஞ்சு. டயலாக் பேசலாமே”னு சொல்லுவாராம். ஆனால், டயலாக் கொடுக்க மாட்டாராம். ஃபஸ்ட் டைம் 100 ரூபாய் செல்வழிச்சு போய்ருக்காரு. சம்பளமா 50 ரூ தான் கொடுத்துருக்காங்க. ஆனால், படிப்படியா சம்பளம் அவருக்கு அதிகமாக ஆரம்பிச்சிருக்கு.
விஜய் டி.வி மொட்டை மாடில உட்கார்ந்து டயலாக் எழுதுறது, நடிக்கிறதுனு காலம் போய்கிட்டே இருக்கும்போது லொள்ளு சபா நின்னு போச்சு. சரி, இவ்வளவு நாள்கூட இருந்துட்ட உன்னை வைச்சு எபிசோடு ஒண்ணு பண்றேன்னு ராம் பாலா பாபுவை வைச்சு ‘அமெரிக்கன் பிச்சைக்கார மாப்பிள்ளை’னு ஒரு எபிசோடு எடுத்துருக்காரு. லொள்ளு சபால கடைசியா பாபு பண்ண எபிசோடு அதுதான். அதுக்கப்புறம் ராணுவத்துலயும் அவரால சேர முடியாத நிலைமை வந்துருக்கு. அப்போதான், சரி இனிமேல் நம்ம வாழ்க்கை சினிமாலதான் இருக்கணும்னு சினிமால வாய்ப்புகளை தேட ஆரம்பிச்சிருக்காரு. அந்த நேரங்கள்ல எக்கச்சக்கமான அவமானங்களை சந்திச்சிருக்காரு. ஆனால், பட்ட அவமானங்களை எந்த இடத்துலயும் மனுஷன் தப்பித்தவறிகூட சொன்னதே இல்லை. ஒரேஒரு இடத்துல மட்டும் நான் பட்ட கஷ்டங்கள் என்னோட செருப்புக்கு மட்டும்தான் தெரியும். ஏன்னா, நிறைய இடங்கள்ல வாய்ப்பு கேட்க போகும்போது செருப்பு போடுற இடத்துலதான் என்னை நிக்க வைச்சிருக்காங்கனு சொல்லிருப்பாரு. ஆனால், அன்னைக்கு நான் கஷ்டப்பட்டதுக்குதான் இன்னைக்கு பலனை அனுபவிக்கிறேன்னும் சொல்லுவாரு.
சுப்பிரமணியன் சிவாதான் பாபுவுக்கு முதல் வாய்ப்பை கொடுக்குறாரு. அந்தப் படம் அவரோட பெயர்ல சேருற அளவுக்கு அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்துச்சு. அதுக்கப்புறம்தான் யோகி பாபுவா மாறுனாரு. அதுக்கப்புறம் பையா, வேலாயுதம், வீரம், மான் கராத்தே படங்கள்ல சின்ன சின்ன கேரக்டர்கள் பண்ணி கொஞ்சம் கொஞ்சமா மக்கள் மனசுல இடம் பிடிக்க ஆரம்பிச்சாரு. முதல் தடவை மக்கள் மத்தில இவரைப் பத்தி அதிகமா பேச வைச்ச கேரக்டர்னா ‘யாமிருக்க பயமேன்’ படத்துல வந்த ‘பன்னி மூஞ்சு வாயா’ன்ற கேரக்டர்தான். ரசிக்க வைச்ச அதேநேரத்துல ஒருத்தர பத்தி கேலிக்குரிய வகையில் கேரக்டரை இப்படி வைக்கலாமானும் காரசாரமா விமர்சனங்கள் நடந்துச்சு. தன்னைத் தாழ்த்தி பிறரை சிரிக்க வைக்கிற கலைஞர்கள் கிடைக்கிறதுலாம் வரம். அந்த வகையில், யோகி பாபு கிடைச்சது தமிழ் சினிமாவுக்கு வரம் அப்டினும் நிறைய பேர் அவரை பாராட்ட ஆரம்பிச்சாங்க. அப்புறம் காக்கா முட்டை, நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் படங்கள்லயெல்லாம் அவரோட கேரக்டர் குறிப்பிட்டு சொல்லும்படி இருந்தது.
கோலிவுட் மொத்தமும் ஷாக்கான விஷயம், நயன்தாராவுக்கு ஜோடியா யோகி பாபு நடிக்கிறாருன்றதுதான். ஒருநாள் சிவகார்த்திகேயன், சீம ராஜா ஷூட்டிங் அப்போ யோகி பாபுக்கிட்ட, “என் ஃப்ரெண்டு படம் ஒண்ணு பண்றாரு. நீங்க பண்ணுங்க”னு சொல்லியிருக்காரு. வழக்கம்போல காமெடி கேரக்டர்னு நினைச்சுட்டு யோகி பாபு, சிவாக்கிட்ட, “என்ன மாதிரியான கேரக்டர்?”னு கேட்ருக்காரு. “படம் முழுக்க டிராவல் ஆகுற கேரக்டர். யாரு உங்க பேர் தெரியுமா?”னு சிவா கேட்க, “யாரு?”னு யோகி பாபு திரும்ப கேட்க, “நயன்தாரா”னு சிவா சொன்னதும், “என்ன விளையாடுறீங்களா? இந்த விஷயம் அவங்களுக்கு தெரியுமா?”னு கேட்ருக்காரு. அவங்க அக்சப்ட் பண்ணிதான் உங்கக்கிட்ட பேச சொன்னாங்கனு சொல்லி ஷூட்டிங்லாம் ஸ்டார்ட் ஆகி போய்ட்டு இருந்துருக்கு. ஒருநாள் அனிருத் ஸ்டுடியோல இருந்து நெல்சன் ஃபோன் பண்ணி “வாட்ஸ் அப்ல பாட்டு ஒண்ணு அனுப்பிருக்கேன்”னு சொல்லிருக்காரு. பாட்டைக் கேட்டுட்டு, “நல்லாருக்கு. யாருக்கு?னு கேட்ருக்காரு. இந்தப் பாட்டுக்குதான் நீங்களும் நயன்தாராவும் ஆட போறீங்கனு நெல்சன் சொல்லிருக்காரு.
Also Read: இந்தப் பாட்டுலாம் இவங்க பாடுனதா… ரஞ்சிதமே ‘மானசி’யின் இன்ட்ரஸ்டிங் ஜர்னி!
கோலமாவு கோகிலா படம் முழுக்கவே யோகி பாபு காமெடி வேறலெவல்ல இருக்கும். யோகி பாபுவை இன்னொரு ஆங்கிள்ல காமிச்ச படம் ஆண்டவன் கட்டளைதான். ஃபாரீன் போய்ட்டு ரிட்டர்ன் வர்றவங்க வாழ்க்கை ஒண்ணு இருக்கும்ல அதை அப்படியே தன்னோட நடிப்புல காமிச்சிருப்பாரு. அப்பவும் பஸ்ஸ மாத்தி ஏத்திவிட்டீங்களேடானு கவுண்டர் போட்டு அப்ளாஸ் வாங்கிருப்பாரு. யோகி பாபு சீரியஸான கேரக்டர் ஆர்டிஸ்ட்னு நிரூபிச்ச படம் பரியேறும் பெருமாள். இங்கிலீஷ் தெரியாது, கவுன்சிலர் பையன்னு சொல்றதுல இருந்து சீரியஸா பரியன்கிட்ட பேசுறது வரைக்கும் அட்டகாசம் பண்ணியிருப்பாரு. அப்புறம், கர்ணன். தனுஷ்கூட வம்புக்குப் போற சீன்லாம் அல்டிமேட்டா இருக்கும். யோகி பாபு கரியர்ல மிக மிக முக்கியமான படம் மண்டேலா. “இந்த யோகி பாபுவை இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டோம்”னு நினைக்க வைச்ச படம். அடையாளம் இல்லாத ஒருவன்ல இருந்து அடையாளம் கிடைக்கிற ஒருத்தனா மாறும்போது அவன் என்னலாம் கஷ்டப்படுறான், அந்த ஒரு ஓட்டை வைச்சு எப்படிலாம் பிளே பண்றான்ன்றதுலாம் அவ்வளவு இயல்பா நடிச்சிருப்பாரு. யானை படத்துலகூட அவ்வளவு நல்ல ரோல் பண்ணிருப்பாரு.
கோமாளி, தர்பார், பிகில், கூர்கா, நான் சிரித்தால், டாக்டர், நானே வருவேன்னு யோகி பாபு தரமான கேரக்டர்கள் பண்ண படங்களை இன்னும் குறிப்பிட்டு சொல்லிட்டே போகலாம். சில நேரங்கள்ல, பெரிய நடிகர்கள் மிஸ் பண்ற இடங்களை கேட்ச் பண்ணி நம்மள சிரிக்க வைக்கிற மேஜிக் யோகி பாபுவுக்கு தெரிஞ்சுருக்கு. வடிவேலுக்கு அடுத்த காமெடிலயும் கேரக்டர் ரோல்லயும் கலக்குற கலைஞனா நமக்கு டக்னு நியாபகம் வர்றது யோகி பாபுதான். இதேமாதிரி இன்னும் நிறைய தரமான சம்பவங்களை யோகி பாபு பண்ணுவாரு. வெயிட் பண்ணுவோம்.