தமிழ் சினிமாவில் அடுத்து இவர் இந்த இயக்குநருடன்தான் இணையப்போகிறார் என கொஞ்சம்கூட யூகிக்கமுடியாத ஒரு நடிகரென்றால் அது `தல’ அஜித்தான். திடீரென ‘சென்னை 28’, `சரோஜா’, மாதிரியான சின்னப் பையன்களை வைத்து படமெடுத்துக்கொண்டிருந்த வெங்கட் பிரபுவுக்கு ‘மங்காத்தா’ படமும் தருவார். நடன இயக்குநரான ராஜூ சுந்தரத்துக்கு ‘ஏகன்’ பட வாய்ப்பும் தருவார். இதுதான் அஜித்தின் ஸ்டைல். இதில் சில முயற்சிகள் வேலைக்கு ஆகியிருக்கலாம், சில முயற்சிகள் அவரது கரியரையே ஆட்டிப் பார்த்திருக்கலாம் ஆனால் அஜித் தன் ஸ்டைலை மட்டும் மாற்றிக்கொண்டதேயில்லை.
இவ்வாறு யாருமே எதிர்பார்க்காதவகையில் 2014-இல் இயக்குநர் சிவாவுடன் இணைந்து அஜித் தந்த படம்தான் ‘வீரம்’. அடிப்படையில் ஒரு ஒளிப்பதிவாளரான சிவா, தமிழில் ‘சார்லி சாப்ளின்’ ‘மனதை திருடிவிட்டாய்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், தெலுங்கில் 2008-ல் வெளிவந்த ‘சௌர்யம்’ என்ற படம் மூலம் இயக்குநராகி அதைத் தொடர்ந்து ‘சிறுத்தை’ படம் மூலம் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்தார்.
‘சிறுத்தை’ படம் ஒரு ரீமேக் படமாக இருந்தபோதிலும் அவரிடமிருந்த டைரக்ஷன் திறமையையும் மாஸ் ஹீரோயிசத்தையும் மிகச்சரியாக கணித்த அஜித், அவருக்கு `வீரம்’ பட வாய்ப்பைத் தந்தார். ‘வீரம்’ பட ஹிட்டுக்குப் பிறகு அந்தக் கூட்டணி தொடர்ந்து, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ என அடுத்தடுத்து இணைந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதில் குறிப்பாக ‘விவேகம்’ படத் தோல்விக்குப் பிறகு இனி இந்தக் கூட்டணி இணையாது என அனைவரும் ஆருடம் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் மீண்டும் ‘விஸ்வாசம்’ மூலம் சிவாவுடன் இணைந்து ஆச்சர்யத்தைத் தந்தார் அஜித்.
சரி, இந்த அளவுக்கு அஜித்தும் சிவாவும் நெருக்கமானது எப்படி.? அதற்கான பதிலை தொழில், பர்சனல் என இருவகையாக பார்க்கலாம். தொழிலரீதியாக பார்க்கவேண்டுமென்றால், ‘பில்லா’, ‘பில்லா-2’, ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’ என வரிசையாகத் தொடர்ந்து கிரே கேரக்டர்களிலேயே அஜித் நடித்துவந்ததால் அவரது படங்களுக்கு ஃபேமிலி ஆடியன்ஸின் ஈர்ப்பும் பி & சி சென்டர்களில் தியேட்டர் வசூலும் சற்றுக் குறைந்திருந்த நேரமது. இந்த நேரத்தில்தான் சிவா தந்த ‘வீரம்’ படம், ஏறக்குறைய 10 வருடங்களுக்குப் பிறகு அஜித்துக்கு ஃபேமிலி ஆடியன்ஸை மீண்டும் கொண்டுவந்தது. மேலும், இந்தப் படம் கிராமப்புறங்களில்தான் இன்னும் பட்டையைக் கிளப்பியது. தொடர்ந்து இதேரூட்டில் பயணித்து ‘வேதாளம்’ படம் மூலம் கரியரின் அடுத்த லெவலுக்குப் போன அஜித், ‘விஸ்வாசம்’ படம் மூலம் ரஜினிக்கே டஃப் கொடுத்தார். இதற்கெல்லாம் காரணம் சிவாவின் திறமைதான் என்பது அஜித்தின் எண்ணம்.
பர்சனல் கனெக்ட்
இன்னொருபுறம் பர்சனலாக அஜித்துக்கு சிவாவை ரொம்பவேப் பிடிக்கும். பொதுவாக அஜித் தன் ஷூட்டிங் ஸ்பாட் ஒரு பாசிட்டிவ் சூழலில் இருக்கவேண்டுமென்று விரும்புவார். அதைச் சரியாக மெயிண்டெய்ன் செய்யக்கூடியவர் சிவா. அவரது அதிர்ந்து பேசாத குணம், உதவி இயக்குநர்களிடம் நட்புறவாக பழகுவது, ஸ்பாட்டில் யார் எந்த கரெக்சன் சொன்னாலும் காது கொடுத்துக் கேட்பது, சாய் பாபா மீதான தீவிர பக்தி இதெல்லாம்தான் அஜித்துக்கு சிவாமீது பெரிய மதிப்பைப் பெற்றுத் தந்திருக்கிறது. சமீபத்தில் அஜித்துடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர்களிலேயே சிவா அளவுக்கு அவருடன் யாரும் நட்பாகவில்லை என்றுதான் சொல்லமுடியும். எந்த அளவுக்கென்றால் ஷூட்டிங் பிரேக்கில் ஒரே கட்டிலில் ஏதோ மேன்சன் ரூம் மேட்ஸ் போல அஜித்தும் சிவாவும் படுத்து சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் காட்சியை அடிக்கடி ஸ்பாட்டில் காணமுடியுமாம்.
‘வேதாளம்’ பட சமயத்தில் சிவா அஜித்திடம் சொல்லியிருக்கிறார், சார் நான் இன்னும் அஞ்சு, ஆறு படம்தான் பண்ணுவேன். அதுக்கப்புறம் அமெரிக்கா போய் குடும்பத்தோட செட்டிலாகிடலாம்னு இருக்கேன்” என கேஷூவலாக சொல்ல, அந்த அஞ்சு படத்தையும் எனக்கே பண்ணுங்க” என அப்போதே சொல்லிவிட்டாராம் அஜித். இடையில் ஒருமுறை சிவகார்த்திகேயனை அழைத்து சந்தித்த அஜித், “நீங்க சிவாவோட ஒரு படம் கண்டிப்பா பண்ணனும்” என சொல்லியிருக்கிறார். ஆனால், அதுவே அஜித், வேறு ஏதாவது படத்தில் பிஸியாக இருந்து இயக்குநர் சிவா ஃப்ரீயாக இருந்தால் மட்டுமே நடக்கும் என சொல்கிறார்கள். அந்த அளவுக்கு அஜித், சிவாவுடன் மீண்டும் இணைந்து படம் பண்ண ஆர்வமாக இருக்கிறாராம்.
ஸோ, விரைவில் இந்தக் கூட்டணி மீண்டு இணைவது நிச்சயம்.
Also Read – 25 ஆண்டுகள்… 23 படங்கள்… ஒன்பதே இயக்குநர்கள்..! ரஜினியின் safe game ரகசியம்