கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரிலுள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி இறந்த விவகாரத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது… என்ன நடந்தது?
தனியார் மெட்ரிக் பள்ளி
கனியாமூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 4,000-த்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த கடலூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த 13-ம் தேதி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக முதலில் பெற்றோரைத் தொடர்புகொண்ட பள்ளி நிர்வாகம், அவர்களது மகள் மாடியில் இருந்து குதித்து விட்டதாகத் தகவல் தெரிவித்ததாகத் தெரிகிறது. பின்னர், அவர் இறந்துவிட்டதாகச் சொல்லியதாகக் கூறப்படுகிறது.
மாடியில் இருந்து குதித்திருந்தால், தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்கும், ஆனால் அப்படி தலையில் காயங்கள் எதுவும் இல்லை என்று கூறி தங்கள் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டினர். தங்கள் மகளின் மரணத்துக்கு நீதி வேண்டி பள்ளி முன்பும், கடலூரில் தங்கள் சொந்த கிராமத்திலும் போராட்டங்களை நடத்தினர்.
வாட்ஸ் அப் அழைப்பு
இதற்கிடையில், மாணவியின் புகைப்படத்தோடு அவரின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கேட்டு சமூக வலைதளங்களில் புதிதாக ஹேஷ்டேக்குகளும் உருவாக்கப்பட்டு வைரலாகின. அதேபோல், மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு பள்ளி முன்பாக 17-ம் தேதி காலையில் போராட்டம் நடத்த இருப்பதாக உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்களில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தநிலையில், பள்ளி முன்பாக 17-ம் தேதி காலை முதலே மக்கள் கூடத் தொடங்கினர். 10 மணிக்கு முன்பாகவே பல நூறு பேர் கூடிய நிலையில், போராட்டம் தீவிரமடையத் தொடங்கியது. மக்கள் பெரிய அளவில் கூடுவார்கள் என்பதை போலீஸார் கணிக்கத் தவறியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், குறைந்த எண்ணிக்கையில் இருந்த போலீஸாரால் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. திடீரென பள்ளியின் சுவற்றில் ஏறிய போராட்டக்காரர்களில் சிலர், அதை சேதப்படுத்தத் தொடங்கினர்.
அதேநேரம், போலீஸின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தவர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் அடித்து, உடைக்கத் தொடங்கினர். பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி வாகனங்கள், பள்ளி கட்டடத்துக்கும் தீ வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். போலீஸாருக்கும் கலவரக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இருதரப்பையும் சேர்ந்த பலர் காயமடைந்திருக்கிறார்கள். கல்வீச்சு சம்பவத்தில் போலீஸார் சிலர் கடுமையாகக் காயமடைந்திருக்கிறார்கள். வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஒரு கட்டத்தில் பள்ளிக்குள் புகுந்து, அங்கிருந்த மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களையும் எரித்திருக்கிறார்கள்.
கட்டுக்குள் வந்த கலவரம்
இந்த சம்பவத்தை அடுத்து கடலூர் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார். அதேபோல், சம்பவம் தொடர்பாக பள்ளியின் முதல்வர், தாளாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், வன்முறையில் ஈடுபட்டவர்களை வீடியோ மூலம் அடையாளம் கண்டு கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதுதொடர்பாக இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், பள்ளியின் வேதியியல் மற்றும் கணித ஆசிரியர்களையும் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
மறுபிரேத பரிசோதனை
இதுதொடர்பாக மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது திட்டமிட்ட சதி என்று கருத்து தெரிவித்த நீதிமன்றம், மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை நடத்தவும் உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.