அரசுப் பேருந்து

பெண்களுக்கு இலவசம்; ஆண்களிடம் இரு மடங்கு கட்டணம்… அரசுப் பேருந்து சர்ச்சை!

அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சில போக்குவரத்துக் கழகங்கள் ஆண் பயணிகளிடம் இருமடங்கு கட்டணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. என்ன நடந்தது?

அனைத்து பெண்களும் சாதாரண கட்டண அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என தி.மு.க தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு கடந்த மே 7-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டது. இதையடுத்து, முதலமைச்சராக ஸ்டாலின் கையெழுத்திட்ட முதல் 5 கோப்புகளில் பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டமும் இருந்தது. இதையடுத்து நகரப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளில் அனைத்து வகையான பெண்களும் கட்டணம் ஏதுமின்றி இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என்று போக்குவரத்துத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் சாதாரண கட்டணப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5, புறநகர்ப் பேருந்துகளில் ரூ.10-ம் வசூலிக்கப்படுகிறது. பெண்களுக்கு இலவசப் பயணம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆண்களிடம் விதிகளை மீறி சாதாரண கட்டணப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ஐந்து ரூபாய்க்குப் பதிலாக பத்து ரூபாய் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்திருக்கிறது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெண்களை இலவசமாகப் பயணம் செய்ய அனுமதித்துவிட்டு ஆண்களிடம் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தெரிகிறது.

அரசுப் பேருந்து
அரசுப் பேருந்து

நகர்ப்புறங்களில் சாதாரணக் கட்டணத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் மட்டுமே பெண்களுக்கு இலவசப் பயணம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஆண்களிடம் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நகர்ப்புறப் பேருந்துகளைவிட புறநகர்ப் பேருந்துகளில் கட்டணம் அதிகம் என்றும், நகர்ப்புறப் பேருந்துகளில் மட்டும்தான் இலவசப் பயணம் அனுமதிக்கப்படுகிறது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர்ப் பேருந்துகளில் ‘மகளிர் இலவசம்’ என்ற பலகை வைக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும், ஆனால், ஆண்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் என்பதற்குப் பதிலாக 10 ரூபாய் என்று வசூலிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலவச மகளிர் பயணத்தை அனுமதிக்கும் பேருந்துகள் நகர்ப்புற பேருந்துகள் என்கின்ற போதும், ஆண்களிடம் குறைந்தபட்சக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்றும், இதுபோன்ற விதிமீறல்கள் சர்வ சாதாரணமாக திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ராமச்சேரி, காஞ்சிப்பாடி, திருவாலங்காடு மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழித்தடங்களில் நடைபெறுவதாகவும் புகார் எழுந்துள்ளது. மகளிருக்கு இலவசப் பயணம் என்று அறிவித்துவிட்டு, அந்த இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கான புதிய உத்திகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடைப்பிடிப்பது அரசாணைக்கு எதிரான செயல். இது அரசாங்கத்துக்கு ஆட்சியாளர்களுக்குத் தெரிந்து நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என்று தெரியவில்லை. இதுபோன்ற கட்டண வசூல் மிகவும் கண்டிக்கத்தக்கது’’ என்று அவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Also Read – ஒலிம்பிக்கில் இரண்டாவது பதக்கம்… வெண்கலம் வென்ற பி.வி.சிந்து – கடந்துவந்த பாதை!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top