இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட் களத்தில் ரசிகர்களின் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல பலரின் ஸ்டைல் ஐகானும் கூட. விராட் கோலியின் தீவிரமான ரசிகர்கள் அவரது ஹேர் ஸ்டைல் மற்றும் தாடி ஸ்டைலை பின்பற்ற முயற்சி செய்து வருகின்றனர். விராட் கோலியின் புதிய லுக் புகைப்படங்கள் வெளியே வரும் போதெல்லாம் அந்த புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாவது உண்டு. அந்த வகையில் ஒருசில தினங்களுக்கு முன்பு வெளியான விராட் கோலியின் லுக் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
விராட் கோலி, மஞ்சள் நிற டீ ஷர்ட் அணிந்து அதிக முடி மற்றும் தாடியுடன் இருக்கும் புதிய லுக்கை பலரும் `மனி ஹெய்ஸ்ட்’ என்ற ஸ்பானிஷ் சீரிஸில் வரும் புரொஃபசர் லுக் உடன் கம்பேர் செய்து சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்து வருகின்றனர். சிலரோ கபீர் சிங் திரைப்படத்தில் வரும் ஷாகித் கபூர் கேரக்டருடன் ஒப்பிட்டு வருகின்றனர். எது எப்படியோ சமூக வலைதளங்களில் விராட் கோலியின் லுக் செம வைரல்.
கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதன் காரணமாக ஐ.பி.எல் சீசன் 14 போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டன. இதனையடுத்து கோலி மும்பையில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார். இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவுவதற்காக தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து நிதி திரட்டும் பணியில் இறங்கினார். இதுதொடர்பான புரொமோஷன் வீடியோக்களில் அவ்வபோது தோன்றினார். இந்த வீடியோக்கள் வெளியாகி குறிப்பிட்ட சில நாள்களுக்கு பின் தோன்றிய வீடியோவில்தான் நீண்ட தலைமுடி, அடர்த்தியான தாடி மற்றும் கண்ணாடி அணிந்து கோலி இருக்கும் புகைப்படம் வெளியானது.
இளைஞர்கள் பலரின் ஃபேவரைட் கிரிக்கெட்டரான கோலி குறுகிய நாட்களில் எவ்வாறு இவ்வளவு முடி மற்றும் தாடியை வளர்க்க முடிந்தது என பலரும் யோசிக்க தொடங்கினர். விராட் கோலியின் இந்த லுக்கின் ரகசியம் என்ன என்றும் பலரும் கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த சில நெட்டிசன்கள் பெரிய ரகசியம் எல்லாம் ஒன்றும் இல்லை. வெறும் லாக்டௌன் எஃபெக்ட்தான் என்றனர். ஆனால், கோலியின் இந்தப்படம் எங்கிருந்து லீக் ஆனது என்று பலரும் அலச தொடங்கினர். கோலியின் ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கோலியின் புகைப்படம் காணவில்லை என்பதால் பலரும் இது போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் என முடிவுக்கு வந்தனர்.
நிதி திரட்டுவதில் பங்களித்தவர்களுக்காக நன்றி தெரிவிக்கும் வீடியோ ஒன்றை கோலி மற்றும் அனுஷ்கா ஜோடி கடந்த மே 14-ம் தேதி வெளியிட்டனர். இதில் உள்ள கோலியின் தோற்றத்தையும் சமூக வலைதளங்களில் தற்போது பரவும் கோலியின் தோற்றத்தையும் ஒப்பிடும்போது இவ்வளவு தூரம் குறுகிய நாள்களில் முடி வளர்ப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்று பலரும் கூறுகின்றனர். இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அமைத்த டீமில் சேருவதற்கு முன்னதாக கோலி மும்பையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருந்து வருகிறார். இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்காகவும் ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காவும் ஜூன் மாதம் 2-ம் தேதி இந்திய அணி இங்கிலாந்துக்கு செல்கிறது.
Also Read : பீக்கி பிளைண்டர்ஸ் ஃபேமஸ் சிலியன் மர்பி பற்றிய 7 சுவாரஸ்யத் தகவல்கள்!