இ-ருபி

`இ-ருபி’ டிஜிட்டல் கட்டண முறை… என்ன ஸ்பெஷல்?

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு டிஜிட்டல் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், பிரதமர் மோடி தற்போது இ-ருபி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். பணபரிவர்த்தனையை மிகவும் எளிதாக மாற்றும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இ-ருபி வசதியின் வழியே பணத்தை முன்னரே செலுத்திவிட்டு அதற்கான ரசீதுகளை பயனாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்த ரசீதானது மின்னணு ரசீது அல்லது கூப்பனாக வழங்கப்படுகிறது. எளிதாக, இதனைக்கூற வேண்டும் என்றால் க்யூஆர் கோட் அல்லது எஸ்.எம்.எஸ் அடிப்படையில் மின்னணு ரசீது வழங்கப்படுகிறது. பணப்பரிவர்த்தனைகளை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டதும் கவனிக்கத்தக்கது.

இ-ருபி

இ-ருபி கூப்பன்களை நிதி சேவைகள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உருவாக்கியுள்ளது. பயனாளிகள் முன்கூட்டியே பணத்தை செலுத்தி கூப்பன்களைப் பெற்றுக்கொள்ளலாம். முன்னதாக, பயனாளிகளின் மொபைல் எண் போன்றவை தொடர்பான விபரங்கள் சரிபார்க்கப்படும். இந்த இ-ருபியை பயன்படுத்துவதற்கு மொபைல் பேங்கிங் மற்றும் பிற ஆப்கள் தேவையில்லை. சாதாரண மொபைல் போன்கள் வைத்திருப்பவர்கள்கூட இந்த சேவையை எளிதாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூப்பன் விபரங்கள் அடங்கிய எஸ்.எம்.எஸ் அல்லது க்யூஆர் கோடினை தேவையான இடத்தில் காண்பித்தால் சேவைக்கான பணம் எடுத்துக்கொள்ளப்படும்.

பணம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, மொபைல் ஆப் என எதுவும் இல்லை என்றாலும் வெறும் ரசீது எண்ணை மட்டும் பயன்படுத்தியே பணத்தை செலுத்திவிட முடியும். சேவை வழங்குபவர்களையும் சேவை பெறுபவர்களையும் மின்னணு முறையில் இணைப்பதே இதன் கோர் ஐடியாவாக இருக்கிறது. இடைத்தரகர்கள் இதன் மத்தியில் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இந்த சேவையை தற்போது வழங்கி வருகின்றன. மேற்குறிப்பிட்ட வங்கிகளில் சேவையை பெற்றுக்கொள்ளவும் பயன்படுத்தவும் முடியும். கனரா வங்கி, இன்டஸ்இண்ட் வங்கி, இந்தியன் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளில் கூப்பன்களைப் பெற முடியும். ஆனால், சேவைகளைப் பெற முடியாது.

கொரோனா பரவல் காரணமாக தற்போது ஆன்லைன் வழியாக பணபரிவர்த்தனைகள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. அரசு ஏற்கெனவே, யுபிஐ என்ற இணையவழி பணப் பரிவர்த்தணையை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதேபோல `பீம்’ என்ற பணப் பரிவர்த்தனைக்கான செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது `இ-ருபி’ திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “இந்த 21-வது நூற்றாண்டில் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு இந்தியா மக்களை எவ்வாறு ஒன்றிணைக்கிறது என்பதற்கும் வளர்ச்சியை நோக்கி எவ்வாறு செல்கிறது என்பதற்கும் இ-ருபி உதாரணமாக இருக்கிறது. இந்தியா சுதந்திரமடைந்து 75 வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அரசு மட்டுமல்ல, அரசு சாரா நிறுவனங்களும் இ-ருபி வழியாக உதவிகளை செய்யலாம். அப்போது, அவர்கள் செலவிடப்படுவது உறுதி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

Also Read : பெண்களுக்கு இலவசம்; ஆண்களிடம் இரு மடங்கு கட்டணம்… அரசுப் பேருந்து சர்ச்சை!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top