மைக்கேல் மதன காமராஜன் (எ) சிரிப்பு ரோலர் கோஸ்டர்!

Jolly Jag Jeevan Ram இந்த டைட்டில்தான் முதலில் இந்த படத்துக்கு வைக்கப்பட்டது. இது யாருக்கும் பிடிக்காத நிலையில் படத்தின் டைட்டில் மைக்கேல் மதன காமராஜன் என வைக்கப்பட்டது. இதை வைத்தவர் கிரேஸி மோகன். 

திரைக்கதை  

ஒரு கமலை ஒட்டிதான் இன்னொரு கமலுக்கான லீடு இருக்கும். மைக்கேல் ஏற்படுத்துன தீ விபத்துனாலதான் ராஜு வருவார், ராஜு அவர் வட்டிக்கு வாங்கிய பணத்தை பைசல் செய்ய வாக்குவாதம் நடந்து கருவாடு பறக்கும்போதுதான் காமேஷ்வரன் வருவார். மதன் இங்கிருந்து கிளம்பி பெங்களூர் வரும் வழியில் ரயில்வே கேட் மூடும்போதுதான் மீண்டும் காமேஷ்வரன் ஸ்கூட்டரில் வருவார். இந்த குழப்பம் எல்லாம் நடந்து ஒருவரை ஒருவர் மீட் செய்த பிறகும் அவர்களை ஒன்றியே திரைக்கதை நகரும். இன்னும் சிம்பிளா சொல்லணும்னா. கிளைமாக்ஸ் முன்னாடி பேர் வெச்சாலும் பாட்டுல மூணு கமலும் எப்படி எல்லாம் லூட்டி பண்ணுவாங்க அந்த மாதிரிதான் படம் முழுக்கவே நடக்கும். 

கேரக்டர் ஆர்க்

மைக்கேல் : ஆரம்பத்துல அந்த நாலு குழந்தையையும் அங்க அங்கனு பிரிச்சு வெச்ச சந்தான பாரதியும் ஒரு குழந்தையை எடுத்துக்குவார். அவர் ரௌடிங்கிறதால மைக்கேலும் ரௌடியாதான் வளர்வார். அந்த கரகர குரல் ஃபங்க் வெச்ச முடி அப்பாவை வாயா போயானு பேசுறது இப்படிதான் அந்த கேரக்டரும் இருக்கும். அதே மாதிரி நிஜ அப்பாவை பார்த்த அப்புறம் சந்தான பாரதி யப்பா யப்பா என்னை விட்டுட மாட்டல்லனு கேட்பார். அதற்கும் இறுக்கம் நிறைந்த பாசத்தையே வெளிப்படுத்தியிருப்பார். 

மதன் : முன்னாடியே சொன்னது போல் தந்தைக்கு தெரியாது தன் பிள்ளை தன் கையில் என்று முறையில் தனது தந்தையிடமே வளர்ப்பு மகனாக வளர்ந்து லண்டனில் படித்த பட்டதாரியாக ரிட்டர்ன் வருவார். பேசும் தமிழுக்கு இடையே சிறிது இங்கிலீஷும் பேசுவார். லண்டனில் படித்தவர் என்பதால் பிரிட்டிஷ் accent-ல் தான் பேசுவார். அதேபோக் ரெகுலராக specs அணிபவர் என்பதால் ராஜுவை சந்திக்கும் ஒரு காட்சியில் டீயை எடுப்பதற்குக் கூட தடுமாறுவார். இம்புட்டூண்டு சீனுக்கு அந்த டீடெயிலிங் வேணுமா என்றால் அதையும் செய்வார் கமல். 

ராஜு : அம்மா அப்பா இன்றி அனாதையாக வளர்பவர் ராஜு. இதனால்தான் தீயணைக்க வரும்போது குஷ்புவை பார்த்த உடனே பிடித்துவிடும். அவருடைய சிரிப்பில் கூட ஒரு தனித்துவத்தை மெயின்டெயின் செய்திருப்பார். இது மட்டுமில்லாம சென்னை பாஷையை பிசிறே இல்லாம பேசுனதும் இதுக்கு கூடுதல் ஸ்பெஷல்.

காமேஷ்வரன் : திருபுரசுந்தரி விஷம் குடிக்கிறேன் என சொல்லி ஒவ்வொரு டப்பாவாக அதை தேடிக்கொண்டிருப்பார். அப்போது காலி டப்பாவை திறந்து வைத்து பதற்றத்தில் ஊர்வசி கமலிடம் பேசுவார். அப்போது அது காலி எனச் சொல்வார். அந்தளவுக்கு வெள்ளந்தியான ஒரு கேரக்டர் காமேஷ். `எனக்கு தெரிஞ்சதெல்லாம் அப்பா, சமையல் கட்டு, புகை, வரதுக்குட்டி, இப்ப மளிகைக் கடை அவ்வளவுதான். நான் ஸ்கூட்டர்ல போயின்டு இருக்கும்போது திருப்பு திருப்புன்னான். நான் ஸ்கூட்டரையாக்கும் சொல்றாரானு நெனச்சு திருப்பி ஆட்டோரிக்‌ஷாவுல இடிச்சு என்று சொல்லி தொடையை தூக்கி காட்டுவார். அவ்வளவு வெள்ளந்தித்தனமும் கியூட்னெஸும் இருக்கும்.

வசனங்கள் : 

* நானே 8 பொண்ணுங்களை பெத்துட்டு ரத்தமில்லாம சுண்டி போயிருக்கேன். எந்த இடத்துல ரத்த தானம் கிடைக்குமோ அந்த இடத்துல அட்டை மாதிரி ஒட்டிப்பான்
* நீங்க அடிச்சது அதானே வரும்நான் அடிச்சது சொல்லலை நீங்க என் அப்பாகிட்ட அடிச்சதை சொன்னேன்
* கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டுதான் யா கொடுக்கும்
* ஆஹா அரிசியில ஆர்ட்டு… கலையரிசிங்க..!
* மீன் காமெடி – ராஜு வெச்சிருந்த கருவாடு காமேஷ்வரன்கிட்ட வந்துடும். அந்த தவ்ளூண்டு மீனை வைத்துக்கொண்டு ஒரு காமெடி ப்ளேவே நடந்திருக்கும். மீன் பிடிக்க தெரிஞ்ச யாரையாவது கூப்பிடலாமா, மீன் நீந்தர்து, மீன் பிடிக்கிற கரண்டி எதாவது இருந்தா கொடுங்கோ என டெல்லி கணேஷ் சொன்னவுடன் அமைதியா பேசுடா சம்பந்தி காதுல விழுந்துட போகுது என அவர் சொல்வதற்கு சாம்பார்லே விழுந்துடுத்து காதுல விழுந்தா என்ன என்று சொல்வார், பின் பந்தியில் . கிடைக்கும் சின்ன சின்ன கேப்களில் கூட மீன் காமெடிகளை தெளித்துவிட்டிருப்பார் கிரேஸி மோகன். இது இல்லாமல் வெளியே ஆங்கிலத்தில் இங்கிலீஷ் mean காமெடியை வைத்து சின்ன காட்சி அரங்கேறும். இப்படி திரும்பும் இடங்களில் எல்லாம் அந்த நகைச்சுவையான பரபரப்பை வைத்து வசனங்கள் எழுதப்பட்டிருக்கும். 
* கிராமமும் குக்கு நீங்களும் குக்கா?
* திருப்பி வெச்சாலும் நிமிர்த்து வெச்சாலும் திருட்டு திருட்டுதான்.

மியூசிக் rally :

இந்தப் படத்தின் முதல் காட்சியும் அதில் பாடிய இளையராஜாவின் பாடலும் பெரிதும் ஞாபகத்தில் இருக்காத ஒன்று. காலம் செல்ல செல்ல படத்தின் இன்ட்ரோ பாடல் பெரிதும் ஈர்த்தது. படத்தின் கதைதான் அந்த இன்ட்ரோ பாடலில் ராஜா பாடியிருப்பார். அதுவும் வாலியின் வரிகளில் பாடல் தரும் அர்த்தம் சிறப்போ சிறப்பு. திசைக்கு ஒன்றென மைக்கேல், மதன், காமேஷ்வரன், ராஜா நால்வரும் பிரிந்துவிடுவார்கள், ஒவ்வொரு சூழலில் வாழ்வார்கள். அதில் எதிர்பாராத திருப்பமாக மதன் கமல் அவரது நிஜ அப்பாவிடமே வளர்ப்பு மகனாக வருவார். தந்தைக்கு தெரியாது தன் பிள்ளை தன் கையில், விதி செய்யும் கோலங்கள் யாருக்கும் தெரியாது என்று வாலி எழுதியிருப்பார். சரி பாடல் ஒரு பக்கம் கவர்கிறது என்று பார்த்தால், பாடலின் விஷுவலும் சாப்ளின்சிக் முறையில் இடம்பெற்றிருக்கும். சார்லி சாப்ளினின் படங்களை நாம் பார்த்திருப்போம். அதே பாணியில்தான் இந்த பாடலின் விஷுவலும் அமைந்திருக்கும். 
இசையில் டீடெய்லிங்கும் இந்தப் படத்தில் நாம் பார்க்க முடியும். பாடி மூவ்மென்ட் ஒரு பக்கம் திரையை ஆக்கிரமித்தாலும் அதோடு ஒன்றின இசைதான் ஒரு காட்சியின் உயிரோட்டத்தை தீர்மானிக்கிறது பார்க்கும் நமக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் எஸ்.என்.லக்‌ஷ்மி எனும் திருட்டு பாட்டி காமேஷ்வரன் பணியாற்றும் கல்யாண வீட்டில் சின்ன சின்ன பொருட்களை திருடுவார். அப்போது சின்னதாக காமிக்கல் ஸ்டைலில் ஒரு BGM ஒலிக்கும். அடுத்தது திருப்புவும் காமேஷ்வரனும் கட்டிண்டு இருக்கும்போது இயல்பு நிலையறிந்து சடாரென விலகுவார்கள் அப்போது வரும் ஒரு பிஜிஎம்.  
இந்தப் படத்திற்கு மிக முக்கியமான ஒரு பெருமை உண்டு. இன்ட்ரோ பாடலை முன்பே சொன்னது போல் பாடியவர் இளையராஜா. அதே போல் இந்த படத்தில் எஸ்.பி.பி-ல் ஆரம்பித்து மலேசியா வாசுதேவன், சித்ரா, மனோ, ஜானகி, கமல் என legend-கள் பாடல்கள் பாடியிருப்பார்கள். 

Also Read – `மாயக்குரலோன்’ மலேசியா வாசுதேவன் ரசிகர்களே… உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட் #Quiz

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top