பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் இருக்கும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சியில் அவருக்கு எதிராக சிலர் குழு ஒன்றைத் திரட்டியதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து மூத்த தலைவர்கள் பலரும் அவரது தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பி.டி.ஐ-யின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜகாங்கீர் கான் தரீன், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தனது இல்லத்தில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கௌரவிக்கும் விதத்தில் விருந்தளித்தார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நாடாளுமன்றத்தில் தரீனுக்காக குரல் கொடுப்பார்கள் என்று முடிவு செய்யப்பட்டது.
தரீன் விருந்தளித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் விசுவாசிகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #IstandWithImranKhan, #BehindYouSkipper’ போன்ற ஹேஷ்டேக்குகள் மூலம் இம்ரான் கானுக்கு ஆதரவாகப் பதிவிட்டு வருகிறார்கள். இந்த ஹேஷ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கிலும் இடம் பிடித்தது. பி.டி.ஐ கட்சியின் துணைத் தலைவரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா மஹ்மூத் குரேஷி,கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும். கட்சியின் விதிமுறைகளை மீறுவது அவர்களை பாதிக்கும்” என்று எச்சரிக்கை விடுத்தார். பிரதமர் மீது நம்பிக்கை வைக்காதவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், இம்ரான் கானைத் தங்கள் தலைவராகக் கருதுகிறார்களா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இம்ரான் கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இல்லாவிட்டால் இவர்கள் நாடாளுமன்றத்துக்குள் வந்திருக்க முடியாது. அந்நாட்டின் தகவல்துறை அமைச்சர் ஃபவாத் சௌத்ரி, “இம்ரான் கான் நாட்டின் தலைவர் மட்டும் அல்ல. அவர் கட்சியின் தலைவரும்கூட. பி.டி.ஐ அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மீதமுள்ள பதவிக்காலத்தையும் பி.டி.ஐ அரசு நிறைவு செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.
சர்ச்சைகளுக்கு விளக்கமளிக்கும் விதமாக உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத், “பட்ஜெட் மீதான வாக்கெடுப்பில் தரீன் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவாக வாக்களிப்பார். கட்சியில் அவ்வப்போது கூட்டம் நடத்துவது வழக்கமான ஒன்றுதான்” என்று பேசினார்.
Also Read : பாலபாரதிக்கும் ஷைலஜாவுக்கும் நடந்தது என்ன… கேரளா – தமிழ்நாடு ஒப்பீடு!