மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சியைப் பிடித்து ஒரு மாதம் முடிந்துவிட்டது. மியான்மரில் என்ன நடக்கிறது?
மியான்மர் ராணுவ சர்வாதிகாரியான மின் ஆங் ஹிலைங் தலைமையில், ராணுவம் ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தைக் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி பிடித்தது. தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி அடுத்த ஓராண்டுக்கு அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.
யார் இந்த மின் ஆங் ஹிலைங்?
தட்மடாவ் (Tatmadaw) என்றழைக்கப்படும் மியான்மர் ராணுவத்தின் தற்போதைய ஒரே அதிகார மையம் இந்த மின் ஆங் ஹிலைங். மியான்மரின் கிழக்கு எல்லையில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரிலேயே தனது பெரும்பாலான நாட்களைக் கழித்த மின் ஆங் ஹிலைங், ராணுவ பயிற்சி மையத்தில் சராசரி மாணவராகவே திகழ்ந்ததாகச் சொல்கிறார்கள் அவருடன் பயின்றவர்கள். பதவி உயர்வையும் மிகவும் மெதுவாகவே பெற்றதாகவும், வாழ்நாளின் பெரும்பகுதியை ராணுவத்திலேயே கழித்தவர் மின் ஆங் ஹிலைங் என்கிறார்கள். பல்வேறு வெளிநாட்டுத் தூதர்கள், அதிகாரிகளை நேரில் சந்தித்து கைகுலுக்குவது போன்ற புகைப்படங்களால் நிறைந்திருக்கிறது அவரது ஃபேஸ்புக் பக்கம்.
மியான்மரில் நீண்டநாள் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயகம் மலரத் தொடங்கிய 2015ம் ஆண்டு வாக்கில் பிபிசிக்கு அளித்த பேட்டியில், “ஜனநாயக ஆட்சி மலர 5 ஆண்டுகளோ அல்லது முழுமையாக 10 ஆண்டுகளோ ஆகலாம். இதற்கென தனி கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை’’ என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருந்தார் மின் ஆங் ஹிலைங்.
மியான்மர் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பு – ஒரு டைம் லைன்
பிப்ரவரி 1, 2021
ஆங் சாங் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட தேசிய ஜனநாயக லீக் கட்சியின் முக்கியத் தலைவர்களை மியான்மர் ராணுவம் அதிகாலை ரெய்டில் கைது செய்தது.
கடந்த நவம்பரில் நடந்து முடிந்த தேர்தல்களில் முறைகேடு செய்யப்பட்டதாக அறிவித்த ராணுவம், மியான்மரில் ஒரு வருடத்துக்கு அவசர நிலையைப் பிரகடனம் செய்தது. ராணுவ ஜெனரலான மின் ஆங் ஹிலைங் முழு அதிகாரம் படைத்த சர்வாதிகாரியானார். ராணுவ அதிகாரிகள் அடங்கிய ஜுன்டா (The Junta) குழு 24 அமைச்சர்களின் பதவிகளையும் பறித்ததோடு, 11 பேர் கொண்ட மாற்று நிர்வாகிகளையும் நியமித்தது.
பிப்ரவரி 3:
ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் 70 மருத்துவமனைகள் மற்றும் மருத்துவத் துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினர். மற்றவர்கள், தங்கள் கைகளில் சிவப்பு நிற ரிப்பனைக் கட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் இருக்கும் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டு, ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஆங் சாங் சூகி மீது மியான்மர் போலீஸால் கூறப்பட்ட குற்றங்கள் குறித்த தகவல்கள் கசிந்தன. ராணுவம் அந்நாட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களின்படி, ஆங் சாங் சூகியின் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சாட்டிலைட் தொடர்புக் கருவிகளைக் கைப்பற்றியதாகக் கூறப்பட்டிருந்தது. அவை முறையான அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
பிப்ரவரி 4:
மியான்மரின் மாண்டலே பகுதியில் ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக பேனர்களுடன் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதான், ராணுவத்துக்கு எதிராக மியான்மர் வீதிகளில் தொடங்கப்பட்ட முதல் போராட்டம்.
பிப்ரவரி 6:
போராட்டங்கள் தொடர்பான தகவல்கள் பகிரப்படுவதால் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதோடு, இணையதள சேவைகளும் முடக்கப்பட்டன.
பிப்ரவரி 7:
ராணுவத்துக்கு எதிரான போராட்டங்கள் மியான்மர் முழுவதும் பரவின. ஜனநாயக ஆட்சி மலருவதற்கான அடிப்படைக் காரணிகளில் ஒன்றாக இருந்த 2007ம் ஆண்டு போராட்டங்களுக்குப் பின்னர் பொதுமக்கள் பெரிய அளவில் ஆதரவளித்த போராட்டங்கள் இவைதாம்.
இணையதள சேவைகளுக்கான தடை நீக்கப்பட்டது. ஆனால், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கான தடை தொடர்ந்தது.
பிப்ரவரி 9 :
மியான்மர் தலைநகர் நேபிடாவில் கூடிய போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பெரும்பாலும் வானத்தை நோக்கிய போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், ஒரு பெண்ணுக்கு தலையில் குண்டு பாய்ந்து, மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிப்ரவரி 16:
மியான்மரின் தேசிய பேரிடர் சட்டத்தை மீறியதாக ஆங் சாங் சூகி மீது மற்றொரு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
பிப்ரவரி 19:
போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சைபெற்று வந்த பெண், 10 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்தார்.
பிப்ரவரி 21:
மாண்டலே பகுதியில் போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
பிப்ரவரி 25:
மியான்மர் ராணுவம் தொடர்பான கணக்குகளை ஃபேஸ்புக் முடக்கியது. உடனடியாக இது அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 26:
ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பை முறியடிக்க உதவுமாறு ஐக்கிய நாடுகள் அவைக்கு மியான்மருக்கான ஐ.நா பிரதிநிதி சிறப்பு வேண்டுகோள் விடுத்தார். அதற்கடுத்த நாள் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பிப்ரவரி 28:
போராட்டக்காரர்கள் மீது மியான்மர் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் கொல்லப்பட்டதாம ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையத்தின் தகவல் சொல்லியது. மியான்மரில் நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளிலும் போராட்டம் நடைபெற்றது.