யங் மேஸ்ட்ரோ… யுவன் சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம்!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 1997 ஆம் ஆண்டு வெளிவந்த அரவிந்தன் படம் மூலம் தமிழ் திரையிசை உலகில் அடியெடுத்து வைத்து 25 வருடங்கள் ஆகிறது. தமிழின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இளசுகளின் மன ஓட்டம் அறிந்து குத்தாட்டம் போட வைக்கும், தனிமையில் ரசிக்க வைக்கும், கவலைகளில் இருந்து தேற்றும் பல பாடல்களைக் கொடுத்திருக்கிறார் யுவன். இன்றும் பின்னணி இசையின் கிங்காக வலம் வரும் யுவனுக்கு அதிதீவிர ரசிகர்கள் கோடிக்கணக்கில் உண்டு. இசைஞானி, இசைப்புயல் வரிசையில் எந்தப் பட்டங்களையும் தன் பெயருக்குப் பின்னால் போடாமல் தவிர்த்து வந்த யுவன் விரைவில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்று டாக்டர். யுவன் ஆகப்போகிறார்.

சென்னையில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழா வரும் செப்டம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் மரிய ஜான்சன் ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த பட்டமளிப்பு விழாவில் 2666 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளது. இதில் 143 பி.ஹெச்.டி மாணவர்கள் டாக்டர் பட்டம் பெறப்போகின்றனர். பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கம். அந்த வகையில் இசைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது சத்யபாமா பல்கலைக்கழகம்.

Sathya Bhama

ஏற்கனவே மன அழுத்தம் குறைக்கும் மருந்தாக பாடல்களைக் கொடுத்து இசை சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும் யுவனுக்கு இந்த டாக்டர் பட்டம் கௌரவம் சேர்ப்பதாக அவருடைய ரசிகர்கள் இந்த அறிவிப்பைக் கொண்டாடுகிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top