“1996-99 காலகட்டத்தில் மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசு அமையும் சூழல் ஏற்பட்டபோது, பிரதமராக வி.பி.சிங், ஜோதிபாசு இருவரில் ஒருவரைத் தேர்வு செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் பதவி ஏற்கமுடியாத நிலையில், ஜி.கே.மூப்பனாரைத் தேர்வு செய்தனர். இந்த செய்தியை அவரிடம் நான்தான் கொண்டு சென்றேன். அப்போது அவர், `சாகும் வரை மக்களுடன் இருக்கவே ஆசைப்படுகிறேன். ஆகவே என்னை வற்புறுத்தாதீர்கள்’ என்று கூறி பிரதமர் பதவியை நிராகரித்தார்’ – கும்பகோணத்தில் ஜி.கே.மூப்பனார் வெண்கலச் சிலை திறப்பு விழாவில் அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்ட சம்பவம் இது. டெல்டாவில் பிறந்த ஜி.கே.மூப்பனார், தமிழ்நாடு மட்டுமல்லாது தேசிய அளவில் காங்கிரஸின் கிங் மேக்கராகவும் பிரச்னைகள் எழும்போது Crisis Manager-ஆகவும் இருந்தவர். ஜி.கே.மூப்பனார் பொலிட்டிக்கல் கரியர்ல பண்ண தரமான சில சம்பவங்களைத் தெரிஞ்சுக்கலாமா?
காமராஜர் தொடங்கி இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என காங்கிரஸின் பல தலைமுறைகள் தொடங்கி கருணாநிதி, ஜெயலலிதா வரையில் பல்வேறு கட்சித் தலைவர்களோடு பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஜி.கே.மூப்பனார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தேய்ந்துகொண்டிருந்த சமயம் தஞ்சாவூரில் கட்சியை வலுப்படுத்த காமராஜரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். திமுக முதல்முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறிய 1967 தேர்தலிலும் தஞ்சை மாவட்டத்தில் 6 தொகுதிகளை வென்று காங்கிரஸ் தலைமை தன் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் காப்பாற்றியவர். மூப்பனாரின் களப்பணியை அண்ணாவே பாராட்டிய சம்பவமும் அப்போது நடந்தது.
காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளராக இவர் பதவி வகித்த சமயத்தில் எந்த மாநிலத்திலாவது கட்சிரீதியாகவோ, கோஷ்டி மோதல் பிரச்னை என்றால் தலமை இவரைத்தான் அனுப்பி வைக்குமாம். தீர்க்கமான முடிவுகளால் அதை நேர்த்தியாக முடித்து வைப்பதானாலேயே இவரை Crisis Manager-னு காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்வாங்களாம். ஒருமுறை காங்கிரஸ் ஹெட்குவார்ட்டர்ஸான டெல்லி அக்பர் ரோடு ஆபிஸுக்கே பிரச்னை வந்தப்போ, அரசாங்கத்துகிட்ட இருந்து அந்த இடத்தை லீஸுக்கு எடுத்து மறுபடியும் ஆபிஸ் வொர்க் ஆகுறதுக்கு உதவி பண்ணியவர்.
1996 தேர்தல் சமயம் அப்போதைய காங்கிரஸ் தலைமை அதிமுகவோட கூட்டணி வைப்பதை மூப்பனார் கடுமையா எதிர்த்தார். `மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் ஊர் ஊராகச் சென்று வேலை பார்ப்பேன்’ என்று அப்போது ரஜினி சொன்னார். ஆனால், அதையும் மீறி கூட்டணி வைத்ததால், கட்சியிலிருந்து வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்கிற தனிக்கட்சியைத் தொடங்கினார். அந்த டைமில் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சோனியாவின் வீட்டுக்குத் தனது கட்சியில் 20 எம்.பிக்களையும் நேரடியாக அழைத்துச் சென்றவர். காங்கிரஸில் இருந்து விலகினாலும் இறுதிவரை காங்கிரஸ்காரராகவே செயல்பட்டவர். 1999-ல் நடந்த சம்பவத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அப்போதைய வாஜ்பாய் அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாம தமாகா எம்பிக்கள் 3 பேர் வாக்களிக்கணும்னு சோனியா ரெக்வெஸ்ட் பண்ணாங்க. அதை ஏற்று தமாகாவினர் வாக்களிக்கவே வாஜ்பாய் அரசு கலைந்தது.
தீண்டாமையை எல்லாவகையிலும் கடுமையாக எதிர்த்தவர் ஜி.கே.மூப்பனார். நெய்வேலி கூட்டத்தில் அவர் பேசியதை சமீபத்தில் மறைந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யா தீக்கதிரில் நினைவு கூர்ந்திருப்பார். `நீங்க எல்லாரும் தியேட்டர்ல ஒண்ணா உக்காந்துதான் படம் பாக்குறீங்க. பஸ்ல போகும்போதும் ஒண்ணாதான் போறீங்க. வேலை பாக்குற இடத்துல கூட எந்தவொரு வித்தியாசமும் காட்டாமத்தான் வேலை பாக்குறீங்க. ஆனா, உங்க ஊர்களுக்குப் போனபிறகு ஜாதி பேரு நினைவுக்கு வருது. வெறுப்பைக் கக்கி ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிக்கிறீங்க. இது சரியானு நீங்க நினைச்சுப் பார்க்கணும்’னு ஜி.கே.மூப்பனார் பேசியிருப்பார். இன்னொரு சமயம் ராஜபாளையத்தில் சாதிக் கலவரம் நடந்த இடத்துக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசிய அவர், மற்றொரு தரப்பினரிடமும் பேசி பிரச்னையை சுமூகமாக முடித்து வைத்தார்.
Also Read – தமிழ்நாடு சந்தித்த இடைத்தேர்தல்-கள்… இந்த சம்பவங்கள்லாம் தெரியுமா?
சிதம்பரம் தொகுதி எம்பியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை 1999-ல் நேரடி அரசியலுக்கு அழைத்து வந்தது ஜி.கே.மூப்பனார்தான். அதற்கு முன்பு வரை தேர்தல் புறக்கணிப்பு அரசியலைத்தான் திருமாவளவன் முன்னெடுத்து வந்தார். `உங்கள் பின்னால் பெரும்படையே இருக்கிறது. தேர்தல் அரசியலில் இறங்கினால் பெரும் வெற்றி கிடைக்கும்’ என்று மூப்பனார் சொல்லவே தமாகாவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தார் திருமாவளவன். அப்போது அதற்கு எதிராக ராமதாஸ் செயல்பட்டார். அதேபோல புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் நேரடி அரசியலுக்கு வர ஜி.கே.மூப்பனாரே காரணம்.
ஜி.கே.மூப்பனார்னு சொன்னதும் உங்களுக்கு நினைவுக்கு வர்ற விஷயம் எது… அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.