உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளின் விலை அதிகமாகவே எப்போது இருக்கும்.. இதற்குப் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?
ஆப்பிள் போன்கள்
அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் தங்களது விலை குறைவான ஸ்மார்ட்போன் மாடல் SE 2022 (SE 3)-ஐ மார்ச் 8-ம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டது. இந்த மாடலை ரூ.43,900 என்ற ஆரம்ப விலையில் மார்ச் 18-ம் தேதி முதல் விற்பனைக்கும் வந்திருக்கிறது. அதேநேரம், அமெரிக்காவில் இந்த மாடல் போனின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 32,000. இது இந்திய விலையை விட ரூ.10,000-த்துக்கும் மேல் குறைவு. இதற்கான காரணம், இறக்குமதி வரி, 18% ஜி.எஸ்.டி, இதர கட்டணங்கள், ஆப்பிள் நிறுவனம் நிர்ணயிக்கும் லாபம் உள்ளிட்டவைகளே என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.
ஆப்பிள் தயாரிப்புகளைப் பொறுத்தவரை இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே இருக்கும் விலை வித்தியாசம் ரொம்பவே அதிகம். உதாரணமாக, ஐபோன் 12 மினி மாடலின் ஆரம்ப விலை இந்தியாவில் ரூ.69,900. இதுவே அமெரிக்காவில் ரூ.51,287 ($699). விலை வித்தியாசம் 18,620 ரூபாய் (37%). ஆப்பிள் போன்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்தால் இந்த விலை வித்தியாசம் குறையுமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அதற்குமே சாத்தியம் குறைவு என்பதுதான் நிதர்சனம். OEMs (original equipment manufacturers) எனப்படும் உண்மையான தயாரிப்பாளர்கள் அதிக இறக்குமதி வரி கொடுத்தே ஆப்பிள் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டி வரும். இந்த செலவு வாடிக்கையாளர்கள் மீதே விழும்.
ஆப்பிள் போன்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் PCBA (printed circuit board assembly)-க்களுக்கு 20% இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. அதுபோலவே, ஆப்பிள் போன்களின் சார்ஜர்களுக்கும் 20% வரி கட்ட வேண்டி இருக்கிறது. இறக்குமதி வரி தவிர்த்து 18% ஜி.எஸ்.டி வரியும் இந்தப் பொருட்களுக்கு விதிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி விற்பனை மையங்கள் இல்லை. அதன் பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்ய பிற நிறுவனங்களையே அது சார்ந்திருக்கிறது. இப்படி இடையில் இருப்பவர்களும் லாபம் பார்க்க வேண்டும் என்பதும் ஆப்பிள் போன்களின் விலை இந்தியாவில் அதிகமாக இருக்க ஒரு காரணம்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதும் ஆப்பிள் பொருட்கள் விலை இந்தியாவில் அதிகமாக இருக்க ஒரு காரணம். துபாய், ஜப்பான் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் ஆப்பிள் போன்களின் விலை ரொம்பவே அதிகம். உக்ரைன் போர் தொடங்கிய பிறகு மட்டுமே இந்திய ரூபாயின் மதிப்பு 3.5% அளவுக்குக் குறைந்திருக்கிறது. தற்போதைய சூழலில் ஆப்பிளின் ஐபோன் 12 மற்றும் 13 ஆகிய மாடல்கள் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் அசெம்பிள் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல், ஐபோன் SE மற்றும் 7 ஆகிய மாடல்கள் பெங்களூரின் விஸ்ட்ரான் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படுகின்றன.
Also Read – இன்வெர்ட்டர் ஏசி Vs நார்மல் ஏசி.. வித்தியாசம் என்ன… எது பெட்டர்… ஏன்?