மேற்குவங்கத்தைச் சேர்ந்த கடலை வியாபாரி ஒருவர் தெருவோரம் விற்பனையின்போது பாடிய Kacha Badam பாடல் உலக அளவில் மியூசிக் ரசிகர்களின் ஆதர்ஸமாக மாறியது எப்படி… வைரலாகி லட்சக்கணக்கான இன்ஸ்டா ரீல்களானது எப்படி?
Kacha Badam
மேற்குவங்க மாநிலம் குரல்ஜூரி கிராமத்தைச் சேர்ந்தவர் பூபன் பத்யாகர் (Bhuban badyakar). அருகிலிருக்கும் கிராமங்களில் தனது பழைய மோட்டார் சைக்கிளோடு இணைக்கப்பட்ட கடை மூலம் கடலை, பொரி வியாபாரம் செய்து வரும் தினக்கூலி தொழிலாளர் இவர். நம்மூர் பேரிச்சம்பழ விற்பனையைப் போலவே, பழைய பொருட்களைப் பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாகக் கடலை, பொரி, பாதாம் பருப்பு போன்றவற்றை விற்பது இவரது வாடிக்கை. தெருவில் கடலை, பொரி விற்கும்போது வாடிக்கையாளர்களை ஈர்க்க இவர் நாட்டுப்புறப் பாடல்கள் பாடுவதுண்டு. அப்படியான ஒரு பாடல்தான் Kacha Badam பாடல். ஒவ்வொரு ஊருக்கும் விசிட் அடிக்கும்போதும் தனது வருகையை கச்சா பதாம் பாடலோடுதான் என்ட்ரி கொடுப்பாராம். கணீர் குரலில் இவர் பாடும் கச்சா பதாம் பாடலுக்கு அப்பகுதியில் இளம் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். அப்படி ஒரு இளைஞர் இவர் வியாபாரத்தின்போது பாடுவதை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவு செய்திருக்கிறார்.
திறமைகளை எங்கு கண்டுகொண்டாலும் இன்ஸ்டண்ட் அங்கீகாரம் கொடுக்கும் இணைய வெளி பூபனின் கச்சா பதாம் பாடலுக்கு உலகளாவிய வரவேற்பைக் கொடுத்திருக்கிறது. வெளிநாட்டுப் பிரபலங்கள் தொடங்கி பாலிவுட், மல்லுவுட் முதல் சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் வரை இன்ஸ்டா, யூடியூப், ஃபேஸ்புக்கில் வீடியோக்கள் மூலம் ஃபயர் விடத் தொடங்கியிருக்கிறார்கள்.
இன்ஸ்டா ரீல்
குறிப்பாக இன்ஸ்டா ரீல்கள் மட்டுமே, 3.5 லட்சத்துக்கும் மேல் இந்தப் பாடலை வைத்து உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. பதாம் பதாம் கச்சா பதாம்’ என பூபனின் வித்தியாசமான குரலில் தொடங்கும் இந்தப் பாடல் வைரல் ஹிட்டான விஷயம் அவருக்கு ரொம்பத் தாமதமாகவே தெரியவந்திருக்கிறது.
பாட்டைப் பத்தி தெரிஞ்சுக்குறதுலதான் எல்லாருக்கும் ஆர்வம் இருக்கு. ஆனால், வாழ்க்கையில நானும் என் குடும்பத்தாரும் எவ்வளவு கஷ்டப்படுறோம்னு யாரும் கவலைப்படுறதில்லை. அரசாங்கம் என் குடும்பத்துக்கு உதவி செஞ்சா நல்லா இருக்கும்’ என்று அப்பாவியாக வருத்தப்பட்டிருக்கிறார் பூபன். அத்தோடு, விளாக்கர்ஸ், சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் என பலர் தன்னோட பாடல் மூலம் சட்டவிரோதமாக வருமானம் ஈட்டி வருவதை அறிந்த அவர், இதுபற்றி அருகிலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் புகாரும் கொடுத்திருக்கிறார்.
கச்சா பதாம் பாடலுக்கு வித்தியாச வித்தியாசமான டான்ஸ் ஸ்டெப்களோடு சோசியல் மீடியா முழுவதும் வீடியோக்கள் பரவிக் கிடக்கின்றன. பாடல் ஹிட்டடித்த பிறகு பூபனும் அவரது கடலை,பொறி வியாபாரமும் மக்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கியிருக்கின்றன. வியாபாரமும் ஓரளவுக்கு அதிகமாகியிருப்பதாகச் சொல்கிறார் பூபன். அவருக்கு உதவும் வகையில் இசையமைப்பாளர் Nazmu Reachat, Kacha Badam பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷனை ஷூட் செய்து யூடியூபில் வெளியிட்டிருக்கிறார். 30 மில்லியனுக்கு மேலான வியூஸ்களை அந்த வீடியோ பெற்று டிரெண்டாகி வருகிறது.
நீங்க Kacha Badam Trend பத்தி என்ன நினைக்கிறீங்க.. கமெண்ட்ல சொல்லுங்க..!
Also Read – `உன்னைப் பார்த்த பின்பு முதல் ஓ சோனா வரை..!’ – அஜித்தின் 9 எவர்கிரீன் 90ஸ் லவ் சாங்ஸ்..!