School Students

90ஸ் கிட்ஸ்… ஸ்கூல் டேஸ் Vs லீவ் டேஸ் அலப்பறைகள்!

தொழில்நுட்ப வளர்ச்சியை வாசலில் நின்று வரவேற்று முதல் ரிவ்யூ கொடுத்த 90ஸ் கிட்ஸின் ஒருநாள் என்பது அலாதியானது. பெரும்பாலான 90ஸ் கிட்ஸின் ஒரு நாள் என்பது பெரும்பாலும் காலை 7 மணிக்கு முன்பே தொடங்கிவிடும்.

பள்ளி நாட்களில் கோடை காலமாக இருந்தால் விளையாட்டுக்காகவும், மழை காலங்களில் கிணறு, கண்மாய்களில் குளியலுக்காகவும் சீக்கிரமே எழுந்துவிட வேண்டும். தனியாகக் கிணற்றுக்குக் குளிக்கப் போக முதலில் நீச்சல் கற்றிருக்க வேண்டும். தண்ணீர் நிரம்பி வழியும் கிணற்றில் பெரிய சுரக்காயின் காய்ந்த ஓடு (சுரக்குடுக்கை), மண்ணெண்ணெய் கேனில் கயிற்றைக் கட்டி நீச்சல் பழகி, அதில் சித்தப்பா, பெரியப்பா வகையறாக்களிடமோ அல்லது அண்ணன், மாமா வகையறாக்களிடமோ பாஸ் மார்க் வாங்கினால்தான் தனியாகக் குளிக்கப் போக கேட் பாஸ் வீட்டில் கிடைக்கும்.

கண்கள் சிவக்க பல மணிநேரக் குளியலுக்குப் பிறகு அரக்கப் பறக்க வீட்டுக்கு ஓடி வந்து பள்ளிக்கூடப் பையைத் தேடிப்பிடித்து ஸ்கூலுக்குப் போனால், அங்கு முதல் பீரியட் தொடங்கியபிறகு தான் இங்கிலீஷ் நோட்டை வீட்டிலேயே வைத்து விட்டு வந்திருப்பது நினைவுக்கு வரும். முதல் பீரியட் கிளாஸ் டீச்சரின் வகுப்பு என்பதால், கணிதம், ஆங்கிலம் போன்ற பாடவேளைகளுடனே பெரும்பாலும் தொடங்கும். முதல் பீரியட் முடிவதற்குள் கிணற்றில் ஆடிய ஆட்டம் பசியைத் தூண்டிவிடும். எப்போடா செகண்ட் பீரியட் முடியும் இண்டர்வெல் வருமென காத்திருக்கும் அந்த நேரம் ரொம்பவே கொடியது.

அரசுப் பள்ளி (Representational Image)

இண்டர்வெல்லில் பள்ளி வாசலுக்கு ஓடிப்போய் கொய்யாக்காய், இலந்தைப் பழ வடை, பென்னி ஐஸ் வாங்கி சாப்பிட்ட பிறகு கண்கள் இயல்பு நிலைக்கு வரும். பத்து நிமிட இடைவெளியில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மூன்றாவது பீரியடுக்காக பயந்துகொண்டே வகுப்புக்குத் திரும்புவோம். அந்த 10 நிமிஷம்தான் அடுத்த 45 நிமிடங்கள் இங்கிலீஷ் பீரியடை எதிர்க்கொள்ள தெம்பு கொடுத்திருக்கும். `பீட்டர் வாஸ் எ ஸ்மால் பாய்’ என ஆசிரியர் தொடங்கியதும் நமக்குக் கண்கள் சுற்றும். ஒருவழியாக இங்கிலீஷுக்குப் பாய் சொல்லி அப்பாடா என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், அடுத்ததாக கணக்கு அல்லது அறிவியல் பாடம் பாடாய்ப்படுத்தும்.

ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் செல்லப்பிள்ளைகள் மாறுபடலாம். ஆனால், வகுப்பில் நல்ல மார்க் வாங்கும் முதல் மூன்று ரேங்க் வாங்கும் மாணவர்கள் எல்லாருக்குமான செல்லப்பிள்ளைகள் குட்புக்கில் இருப்பார்கள். நான்காவது பீரியடை முடிந்து எப்போடா மணியடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடனே அந்த 45 நிமிடங்கள் கழியும். ஒருவழியாக மதியச் சாப்பாட்டு மணியடிக்கும்போது, ஒரு பெரிய கூட்டம் சத்துணவுக் கூடத்தை நோக்கி ஓடுவோம். `வேகமா ஓடுங்கடா முன்னால போறவனுக்குத்தான் உடையாத நல்ல முட்டை கிடைக்கும். சாம்பாரும் தண்ணியில்லாம கிடைக்கும்’ என்ற குரல் மதிய உணவுடன் முட்டை விநியோகிக்கும் நாட்களிலெல்லாம் தவறாமல் கேட்கும். இன்னும் சிலர் வீடுகளுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டுத் திரும்புவர்.

(Representational Image)

உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்பது போல மதியத்துக்குப் பிறகான முதல் பாடவேளை பெரும்பாலும் அறிவியலாகவே வந்து வாய்க்கும். ஆறாவது முதல் பத்தாவது வரை இந்த சோதனை என்றால், பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்புகளில் சயின்ஸ் குரூப், மேத்ஸ் குரூப் எடுத்தவர்களுக்கு விலங்கியலோடோ அல்லது தாவரவியலோடோ தொடங்கும். பத்தாவது டு பதினொன்றாவது மாறுவதற்குள் அரைக்கால் சட்டை முழு பேண்டாவதோடு மட்டுமல்லாமல், வேதியியல், இயற்பியல், விலங்கியல் ஆய்வகங்களும் அச்சமூட்டும் வகையில் நம்மை வரவேற்கும். இப்படியாக மதியத்தின் முதல் பாடவேளைக்குத் தாக்குப்பிடித்தால், வாரத்தில் இரண்டு நாட்கள் P.E.T எனப்படும் விளையாட்டுப் பாடவேளை நம்மை வரவேற்கும்.

அதுவும் உடற்கல்வி ஆசியர்களைப் பொறுத்து நாம் விளையாடும் விளையாட்டுகளும் மாறுபடும். பேட்டைப் பிடித்தாலே சச்சினாக நம்மைப் பாவித்துக்கொண்டு வாழ்ந்த சூழலில் கிரிக்கெட் பிடிக்காத உடற்கல்வி ஆசிரியர்கள் வாய்ப்பதெல்லாம் சாபம் பெற்ற மனோநிலைக்குத் தள்ளிவிடும். வாலிபாலையும், தடகள பயிற்சிகளையும், கோகோ விளையாட்டுகளை ஒப்புக்கு விளையாடிவிட்டு அயற்சியோடு நாளின் கடைசி பாடவேளைக்கு வருவோம். தமிழ் பாட வகுப்புகள் பெரும்பாலும் மதிய இடைவேளைக்கு முந்தைய வகுப்பாகவோ அல்லது 7வது பாடவேளையாகவோ ஒரு நாளில் இருக்கும். தமிழாசிரியர்களை அய்யா, அம்மா என்றழைக்கும் வழக்கம் அப்போது இருந்தது. ஒருவழியாகப் பள்ளி முடிந்து நடந்தோ, சைக்கிளிலோ சில, பல கிலோமீட்டர்களைக் கடந்து வீட்டுக்கு வர வேண்டும்.

காலையில் பள்ளிக்குச் செல்லும் பயணமும், மாலையில் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் பயணமும் ஏறக்குறைய எல்லா கலந்தாலோசனைகளும் நடைபெறும் இடமாகவே இருக்கும். அதுவும் வெள்ளிக்கிழமை மாலைகள் அவ்வளவு சுகந்தம் தருபவையாகவே கடந்துபோகும். அடுத்த இரண்டு நாட்கள் ஊர்சுற்றும் பிளான், திரைப்படங்கள், ஞாயிறுகள் தோறும் காலை 11 மணிக்கு தூர்தர்ஷனில் வரப்போகும் சக்திமான் தரிசனம் என இவற்றைப் பற்றியே இருக்கும் பேச்சுகள். இந்த பேச்சுகளுடன் வீடு வந்து பையைத் தூக்கியெறிந்தால், டியூஷனை நினைவுபடுத்தி வெறியேற்றுவார்கள் வீட்டில். டீ குடித்து, சில, பல பதார்த்தங்களை உள்ளே அனுப்பிவிட்டு டியூஷனிலும் கடமையாற்ற வேண்டும். அதன்பின்னர் வீடு வந்து பையை உதறிவிட்டு இரவில் திருடன் – போலீஸ், கேரம்போர்டு, ஒன் பிட்ச் கேட்ச் கிரிக்கெட் என பல அலுவல்களையும் முடிக்க நேரம் போதாது. நேரம் செல்ல செல்ல வீட்டிலிருந்து தேடி வரத் தொடங்கியிருப்பார்கள். ஒருவழியாக அன்றைய நாளுக்கு குட்பை சொல்லிவிட்டு பிரியாவிடை பெற்று வீடு திரும்புவோம்.

இப்படியாக பள்ளிக்கூட நாட்கள் கடந்துபோக வார விடுமுறை, தேர்வு விடுமுறைகளில் ஒருநாளைக்கான ஷெட்யூலே வேறு மாதிரியாக இருக்கும். லீவ் நாட்களில் காலையில் சீக்கிரமாகவே எழுந்து 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ஃபேவரிட் அனிமேஷன் ஷோவான டிமோன் அண்ட் பும்பாவைப் பார்ப்பதா இல்லை கிரவுண்டுக்குப் போய் இடம்பிடிப்பதா என்ற குழப்பம் வரும். டிமோன் அண்ட் பும்பாவை மாலையில் கூட பார்த்துக் கொள்ளலாம், முதல்ல கிரவுண்டுக்குப் போய் இடம் பிடிப்போம் என்ற எண்ணமே மேலோங்கும். ஒருவழியாக கேங்கைத் திரட்டிக்கொண்டு 7 மணிக்கெல்லாம் டாஸ் போட்டு 15 ஓவர் மேட்சைத் தொடங்கி நடத்தினால், செகண்ட் பேட்டிங்கின் கடைசிக் கட்டத்தில் பெரியண்ணன்கள் கோஷ்டி வந்து முறைக்கும். `அண்ணே அண்ணே இன்னும் ரெண்டு ஓவர்ணே’ என்று கிரேஸ் டைம் வாங்கி மேட்சை முடிப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். இடையில் நேரமிருந்தால் கிட்டி மேட்ச்சும் சில சமயம் நடப்பதுண்டு.

மேட்சை முடித்த கையோடு கிணற்றுக்கு சைக்கிளை விட்டால், அங்கு நமக்கு முன்னாடியே பெரிய கூட்டம் சேர்ந்திருக்கும். சட்டையைக் கழற்றி கிணற்று மேட்டில் வீசிவிட்டு டவுசரோடு கிணற்றுக்குள் குதித்தால், அப்போதான் காலுக்குக் கீழே இருந்து இன்னொரு அண்ணன் எட்டிப்பார்ப்பார். `அய்யய்யோ தலையில லேண்ட் ஆகிட்டோமா’னு நம்ம மனசுக்குள்ள கேள்வி எழும் அதேநேரத்தில் மண்டையில் கிர்ரென’ கொட்டு விழும். ஒருவழியாக அதை சமாளித்து ஒன்றிரண்டு மணி நேரக் குளியலைத் தொடர்ந்தால் வயிற்றுக்குள் மணியடிக்கும். அப்படி மணியடித்தால் நேரம் ஒன்றை நெருங்குகிறது என்று தெரிந்துகொள்ளலாம். கிணற்றில் இருந்து அவசர அவசரமாக பெட்டி, படுக்கையைக் கட்டிக்கொண்டு கரையேறி அருகிலிருக்கும் மாந்தோப்பில் லேண்ட் ஆவோம். அங்கு காவலுக்கு இருப்பவரை ஏமாற்றி ஒன்றிரண்டு மாங்காய்களைத் தேத்துவதற்குள் பசியே ஜகா வாங்கிவிடும்.

(Representational Image)

ஒருவழியாக மாங்காய்களை சேகரித்துக் கொண்டு பக்கத்து மோட்டார் ரூமில் உப்பு, மிளகாய்ப்பொடி இருக்கிறதா என்ற சர்ச்சிங்கைப் போட்டு முடிக்க வேண்டும். அதையும் முடித்து கிடைத்த மாங்காயில் கேங்க் மெம்பர்களுக்குப் பங்கு வைக்க வேண்டும். இதெல்லாம் முடிந்து வீடு திரும்பும்போது மணி இரண்டை நெருங்கிக் கொண்டிருக்கும். வீட்டிலிருப்பவர்களின் திட்டுகளை வாங்கிக் கொண்டே மதியச் சாப்பாட்டை முடித்தால், கண்கள் சொக்கும். காலையில் இருந்து ஆடிய ஆட்டம் களைப்பைக் கொடுத்திருக்கும். தூங்கி எழுந்தால் மாலை மணி நான்கைத் தாண்டியிருக்கும்.

மறுபடியும் கேங்கைச் சேர்ந்துகொண்டு ஒன்பிட்ச் கேட்ச் கிரிக்கெட், பம்பரம், கோலி, கபடி, கேரம்போர்டு என மாலைவேளை விளையாட்டுகள் தொடங்கும். ஒருவழியாக முதல் ரவுண்டை முடித்துவிட்டு இரவு சாப்பாட்டுக்கு மீண்டும் வீடு. அதை முடிக்கவே ஏழு, எட்டு மாணியாகிவிடும். அதன்பிறகு பஞ்சாயத்து போர்டு டிவி அல்லது நண்பர்கள் வீட்டு டிவிக்களில் விடுமுறை தின சிறப்புப் படத்தோடு அன்றைய நாள் முடிவுக்கு வரும். காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறைகள் பெரும்பாலும் வெளியூர் பயணங்கள்தான் நமக்கு அமையும்.

இதுல பல நினைவுகளைச் சொல்லாம விட்டிருக்கலாம். நீங்க 90ஸ் கிட்டா இருந்தா உங்க அனுபவங்களையும் கமெண்ட் பண்ணுங்க நண்பர்களே…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top