கிளைமேக்ஸ்

80ஸ் கிட்ஸ் கொண்டாடிய கிளைமாக்ஸ் காட்சிகள்.. 2கே கிட்ஸ் ஏத்துப்பாங்களா?

காலங்கள் மாறும்போது புதிய தலைமுறைகளின் ரசனையும் பார்வையும் கூட மாறும். இந்த மாற்றமும் மாறாத ஒன்று. இதற்கு நாம் கருத்தியல் ரீதியாகவும் அப்டேட் ஆவதும் ஒரு காரணம். ஒரு காலத்தில் அற்புதமானது எனக் கொண்டாடப்பட்ட சினிமா கிளைமாக்ஸ்-கள் இன்றைய 2கே கிட்ஸ்களால் அபத்தமானதாக கழுவியூற்றப்படலாம் அல்லது weird ஆகவும் பார்க்கப்படலாம். அந்த வகையில், அன்றைக்கு தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட 5 ஜாம்பவான்களின் படங்களின் கிளைமாக்ஸ்-களை இப்போது ரீவைண்ட் செய்யப்போகிறோம். அவற்றை இன்றைய தலைமுறையினர் எப்படிப் பார்ப்பார்கள் என்றும் விவாதிக்கப் போகிறோம். வாங்க வீடியோ ஸ்டோரிக்குப் போவோம்.

அந்த 7 நாட்கள் கிளைமாக்ஸ்

முதலில் நாம் பார்க்கப்போவது, இந்திய சினிமாவின் திரைக்கதை ஜாம்பவான் கே.பாக்யராஜின் ‘அந்த 7 நாட்கள்’. 1981-ம் ஆண்டு வெளியான படம். பணக்கார மருத்துவர், ராஜேஷ். அவரது மனைவி இறந்துவிடுகிறார். ஒரு மகளுடன் வாழும் அவரை, மரணப் படுக்கையில் இருக்கும் தாய் வற்புறுத்தலுக்கு இணங்க, இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். அவர்தான் அம்பிகா. திருமணம் பிடிக்காத அம்பிகா தற்கொலைக்கு முயல்கிறார். அப்புறம்தான் அம்பிகாவின் காதல் பற்றிய விவரம் தெரிகிறது. அவரிடம் ராஜேஷ் ஒரு டீல் போடுகிறார்.

“என் அம்மா சில நாட்கள்ல இறந்துடுவாங்க. அதுவரைக்கும் என் மனைவி மாதிரி நீ நடிச்சா போதும். அதுக்குள்ள உன் காதலனைக் கண்டுபிடிச்சு வந்து, அவரோட உன்னை சேர்த்து வெச்சுடுறேன்”-ன்னு வாக்குறுதி தருகிறார். ஃப்ளாஷ்பேக்தான் படமே. பாலக்காட்டு மாதவனான பாக்யராஜ், மியூஸிக் டைரக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் அம்பிகாவின் வீட்டு மாடியில் குடி வருகிறார். கலகலப்புக்குப் பஞ்சம் இல்லாம திரைக்கதை செம்மயா நகருது.

அந்த 7 நாட்கள்
அந்த 7 நாட்கள்

கடைசில பாக்யராஜை ராஜேஷ் கண்டுபிடிச்சு, ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கப் பார்க்கிறார். அப்போ நடக்குற சம்பவம்தான் க்ளைமாக்ஸ். தாலி சென்ட்டிமென்ட்டுக்கு இங்கேதான் அழுத்தமாக பிள்ளையார் சுழி போடப்படுகிறது.

‘எங்கே அந்த தாலியை கழற்றுங்கள், பார்ப்போம்’-னு சொல்லும்போது தமிழ்ப் பண்பாட்டைக் கட்டிக் காக்கும் அந்த நாயகி மறுக்கிறாள்.

அப்போதான் அந்த ஃபேமஸான டயலாகை பாக்யராஜ் பேசுறார்… “எண்ட காதலி உங்களுக்கு மனைவியாயிட்டு வரும். பக்‌ஷே, உங்கள் மனைவி எனக்கு காதலியாயிட்டு வராது!”

தியேட்டர்ல மிரண்டு போய் அப்ளாஸ் அள்ளுச்சு. ஒருவரின் காதலி, இன்னொருவனுக்கு மனைவியாகலாம். ஆனால், ஒருவரின் மனைவி அடுத்தவருக்குக் காதலியாக முடியாது என்று பாரம்பரியும் பண்பாடும் போற்றப்பட்ட அந்த உணர்வுபூர்வ க்ளைமாக்ஸ் காட்சியாலெயே படத்துக்கு வரவேற்பு பிச்சுக்கிட்டு போச்சு.

யோசிச்சுப் பாருங்க. இந்த க்ளைமாக்ஸை இப்ப இருக்கிற 2கே கிட்ஸ். அதுவும் முற்போக்கானவங்க எப்படிப் பார்ப்பாங்க. நிச்சயம் இதை ரொம்ப அபத்தமானதாதான் பார்ப்பாங்க. ரொம்ப ரொம்ப பிற்போக்குத்தனமான ஒரு சம்பவமாதான் பார்ப்பாங்க. “அடேய் நாங்கள்லாம் ‘ஓபன் மேரேஜ்’, ‘ஓபன் ரிலேஷன்ஷிப்’ ரேஞ்சுல திங்க் பண்ணிட்டு இருக்கோம்… நீங்க என்னடான்னா இப்படி இருக்கீங்களேடா…”-ன்னு கலாய்ச்சுட்டுப் போனாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை.

மூன்றாம் பிறை கிளைமாக்ஸ்

பாலு மகேந்திராவின் அற்புதமான படைப்புகளுள் ஒன்று ‘மூன்றாம் பிறை’. 1982-ல் வெளிவந்த இந்தப் படம் கமல்ஹாசன், ஸ்ரீதேவியில் அசாத்திய நடிப்புத் திறமைக்குச் சான்றாக அமைந்த படமும் கூட.

இளம்பெண் ஒருவருக்கு நேர்கிறது. பழைய நினைவுகளை இழக்கிறார். மனதளவில் சிறுமியாகிறார். அவர்தான் ஸ்ரீதேவி. அவரை பாலியல் தொழில் விடுதியிலிருந்து மீட்டு தாயுமானவனாக பார்த்துக்கொள்கிறார் கமல்ஹாசன். திரைக்கதை முழுவதுமே ஒரு கவிதைபோல் நகர்கிறது.

‘கண்ணே கலைமானே’, ‘பூங்காற்று புதிரானது’ மாதிரியான பாடல்களும் காட்சிகளுமே போதுமானது, நாம் கமல்ஹாசன் – ஸ்ரீதேவி கேரக்டர்களைப் புரிந்துகொள்ள.

இறுதியில், ஸ்ரீதேவிக்கு பழைய நினைவுகள் திரும்புகின்றன. கம்ப்ளீட்டா குணமாகுறாங்க. ஆனா, இடையில என்ன நடந்தது? விபத்துக்கு அப்புறம் என்ன ஆனாங்க? கமல்ஹாசன் தன்னை பராமரித்து வந்தது எதுவுமே அவர் நினைவில் இல்லை.

மூன்றாம் பிறை
மூன்றாம் பிறை

ரயிலில் புறப்பட்டுவிட்டார் ஸ்ரீதேவி. அடித்துப் பிடித்துக் கொண்டு கடைசியாகப் பார்த்து தான் யார் என்பதையும், தனக்கும் அவளுக்குமான உறவு குறித்து எடுத்துச் சொல்ல முயல்கிறார் கமல்ஹாசன். ஆனால், ஸ்ரீதேவிக்கு கமலை சுத்தமாக யாரென்றே அடையாளம் தெரியவில்லை.

தான் ஏற்கெனவே செய்து சிரிக்க வைத்த குரங்கு சேஷ்டை எல்லாம் செய்து காட்டியும் பலனில்லாமல் போகிறது. ரயிலும் போய்விடுகிறது. ஸ்ரீதேவியும் போய்விடுகிறார். கமல்தான் அழுது புரண்டு ஏக்கத்தோடு சரிகிறார்.

இதைப் பார்க்குற இன்றைய ஜெனரேஷன் என்ன நினைக்கும்?

“எதுக்கு மேன் இவ்ளோ டிஸ்டர்ப் ஆகுற? அவங்களை கண்டுபிடிச்சு, சிம்பிளா என்ன நடந்துச்சுன்னு சொன்னா அண்டர்ஸ்டாண்ட் பண்ணப் போறாங்க…” – இப்பிடி சிம்பிளா டீல் பண்ணவும் வாய்ப்பு இருக்கு.

மெளன ராகம் கிளைமாக்ஸ்

இயக்குநர் மணிரத்னத்தின் க்ளாஸிக் பட்டியல்களில் முக்கியமானது 1986-ல் வெளிவந்த ‘மெளன ராகம்’. இதுவும் ஆல்மோஸ்ட் ‘அந்த 7 நாட்கள்’ ஒன்லைன் மாதிரிதான். ஆனா, இந்தப் படத்துல காதலர் கார்த்திக் இறந்துவிடுகிறார். மோகனுடன் ரேவதிக்கு திருமணம் ஆகிறது. புது மனிதர், புதிய வாழ்க்கையில் ரேவதிக்கு ஈடுபாடு இல்லை. விவாகரத்துக்கு அப்ளை பண்றாங்க. பிரிவதற்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்று சட்டம் சொல்ல, இருவரும் வேறு வழியின்றி ஒரே வீட்டில் வாழ வேண்டிய சூழல். இந்தக் காலக்கட்டத்தில், இருவருக்குள்ளும் நிகழும் மனமாற்றங்கள், அணுகுமுறைகள்தான் திரைக்கதை. கடைசியில் ரயில்வே ஸ்டேஷனில் ஒன்று சேர்கிறார்கள்.

மெளன ராகம்
மெளன ராகம்

இதுல என்ன பிரச்னை இருக்குன்னு நீங்க கேட்கலாம். அந்தக் காலக்கட்டத்துல மோகன் கதாபாத்திரம் அவ்ளோ கொண்டாடப்பட்டது. ‘வாவ்… வாட் எ ஜெண்டில் மேன்’. இப்படி ஒரு மனுஷனா? என்ன மனுஷன்யா இவரு? – இப்படியெல்லாம் செலிப்ரேட் பண்ணப்பட்டது. இப்பவும் பலரும் அப்படித்தான் அவரைக் கொண்டாடுறாங்க. ஆனா, இப்போ இருக்குற ஜெனரேஷனோட மனநிலைல, உளவியல் ரீதியிலா பார்க்கும்போது, அந்தப் படம் கன்வே பண்ற விஷயமே வேறவிதமா இருக்கலாம்.

அதாவது, யெஸ்… காதலனை இழந்த ரேவதி மன ரீதியிலா இன்னொரு லவ் லைஃபுக்கு தயாராகலை. அதனால, தன்னை கல்யாணம் பண்ணிகிட்ட மோகன் கிட்ட நெருக்கம் காட்டாம வெறுப்போட அணுகுறாங்க. ‘தொட்டாலே கம்பளி பூச்சு ஊர்ற மாதிரி இருக்கு’ன்னு சொல்றாங்க. இதெல்லாம் ஹர்ட் பண்ற விஷயங்கள்தான். ஆனா, அவங்க மீண்டு வர்றதுக்கு டைம் தேவை. அந்த டைம் அவங்களுக்குக் கிடைக்கும்போது கம்ப்ளீட்டா மாறிடுறாங்க. புது வாழ்க்கைக்குத் தயாராகுராங்க.

Also Read – உங்கள் தீவிர ரசிகன் கமல்ஹாசன்.. கே.விஸ்வநாத் எனும் கலைஞனின் பயணம்!

ஆனா, அந்த விஷயம் புரிஞ்சாலும், தன்னோட ஈகோவை வெளியே காட்டிக்காம, படம் ஃபுல்லாவே குத்திக் காட்டுற மாதிரியே பிஹேவ் பண்றது எந்த அளவுக்கு சரி? மோகன் கேரக்டர் கடைசி வரைக்கும் ஒரு மாதிரி சாடிஸம் பிஹேவியரைதான் காட்டிட்டு வர்றார். எந்த அளவுக்கு ஹர்ட் பண்ண முடியுமோ, அந்த அளவுக்கு ஹர்ட் பண்ணி ஊருக்கு அனுப்ப வெச்சுட்டு, கடைசி நிமிஷத்துல ரியலைஸ் பண்ணி ஓடி வந்தா… கிளைமாக்ஸ்-ல உடனே கட்டிப் பிடிச்சி ஏத்துக்கணும்?!

“என்ன சார் இது?”-ன்ற ரேஞ்சுலதான் இப்ப இருக்குற ஜெனரேஷன் இதை பார்ப்பாங்கன்னு தோணுது.

புதிய பாதை

பார்த்திபன் இயக்கி நடித்து 1989-ல் வெளிவந்த படம் ‘புதிய பாதை’. பொதுவாக, அப்போதெல்லாம் ஒரு பெண்ணை யாராவது பாலியல் வன்கொடுமை செய்துவிட்டால், அந்தப் பெண்ணை அந்த நபருக்கே பஞ்சாயத்து மூலம் திருமணம் செய்து வைப்பது தமிழ் சினிமாவில் வழக்கமாக இருந்தது. அதை உடைத்து புதிய பாதை ஒன்றைக் காட்டியது இந்தப் படம். ஆம், தன்னை காசுக்காக பாலியல் வன்கொடுமை செய்த ரவுடியான பார்த்திபனை பல சாகசங்கள் மூலம் திருத்தி திருமணம் செய்துகொள்கிறார் சீதா.

புதிய பாதை
புதிய பாதை

அந்நாளில் மிகப் பெரிய வரவேற்பை மட்டுமின்றி, விருதுகளையும் குவித்த இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த கான்சப்டையே இன்றைய தலைமுறை ஏற்றுக்கொள்வது சந்தேகம்தான். ஒரு குழந்தை அனாதையாகி, தவறான பாதைக்குச் செல்வதற்குக் காரணமே இந்த சமூகம்தான் என்பதை அழுத்தமாகச் சொல்ல முற்பட்டாலும், ‘புதிய பாதை’யின் கதை சொல்லப்பட்ட விதம் பழைய பாதையை விட டேஞ்சரானது என்பதுதான் இன்றைய தலைமுறையினரின் பார்வையாக இருக்கலாம்.

ஒரு பெண்ணை கொடூரமாக ரேப் செய்யும் ஒருவனுக்கு சரியான தண்டனையைப் பெற்றுத் தராமல், பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணே அவனைப் போராடி திருத்தி திருமணம் செய்துகொள்வது அபத்தத்தின் உச்சமாகவே சிந்தனையின் அப்டேட் ஆன இந்த தலைமுறையின் கருத்தாகவே இருக்கக் கூடும்.

கல்கி

அடுத்து தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான் கே.பாலச்சந்தர் இயக்கி 1996-ல் வெளிவந்த ‘கல்கி’. பாலச்சந்தர் செதுக்கிய பல புரட்சிப் பெண்களில் ஒருவர்தான் இந்த கல்கி. கல்கியாக நடித்திருக்கும் ஸ்ருதி தன்னைத் தானே செதுக்கிக்கொள்வதுபோல் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கும்.

கல்கியின் சிந்தனை மிகவும் புதுமையானதாகவும் தைரியமானதாகவும் காட்டப்பட்டிருக்கும். கற்பு என்பது உடம்பு சம்பந்தப்பட்டது அல்ல; அது மனதில் இருப்பது என்பது கல்கியின் வாதம்.

படத்தின் கதைப்படி கீதா, ரேணுகா ஆகிய இரண்டு பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் பிரகாஷ்ராஜ், அந்த இருவரையுமே கொடுமைப்படுத்துவார். குடும்ப வன்முறைக்கு ஆளாவார்கள் அந்த இரண்டு பெண்களும்.

கீதாவுக்கு குழந்தையில்லை. அதனால் பிரகாஷ் ராஜை திருமணம் செய்துகொள்ளும் கல்கி, பிரகாஷ் ராஜின் சைக்கோத்தனம் ஸ்டைலிலேயே அவரை வைத்துச் செய்வார் கல்கி.

கல்கி
கல்கி

கிளைமாக்ஸ்-ல், பிரகாஷ் ராஜ் மூலம் கர்ப்பம் தரித்து, குழந்தையைப் பெற்றுக்கொண்டு, அந்தக் குழந்தையை கீதாவிடம் தருவாள். ஒருவருக்கு மனைவியாகி, குழந்தையையும் பெற்றெடுத்துக் கொடுத்துவிட்டு திரும்பி வரும் கல்கியின் செயலைப் புரிந்துகொண்டு, அவரை ஏற்றுக்கொள்வார் காதலர் ரஹ்மான். அதாவது, பிரகாஷ் ராஜுக்கு நேரெதிரான கதாபாத்திரம் இது.

இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் இன்றைய தலைமுறையினர், “கல்கி செஞ்சதுல எது புரட்சி?”-ன்னு யோசிச்சே குழம்பிப் போகக் கூடும். “ஒருத்தன் ஒருத்தருக்கு ரெண்டு பேர கல்யாணம் பண்ணிக்கு முழுக்க முழுக்க டொமஸ்டிக் வயலன்ஸ்ல ஈடுபடும்போது, அவன் மேல கேஸைப் போட்டு உள்ள தள்ளாம, அவனுக்கு குழந்தைப் பெத்துக் கொடுத்துட்டு வர்றது எல்லாம் கொஞ்சம் ஓவர்தான்”னு இப்ப இருக்குற ஜெனரேஷன் நிச்சயம் பார்க்கக் கூடும்.

ம்… இந்த ஐந்து படங்களின் உள்ளடக்கங்களையும் குறை சொல்வது நம் நோக்கம் அல்ல. இந்தப் படங்கள் எல்லாமே அந்தந்த காலக்கட்டத்துல மக்களால் ஏற்கப்பட்ட, கொண்டாடப்பட்ட அற்புதமான சினிமாதான் என்பதில் மாற்றுக் கருத்து அல்ல. ஆனால், கால மாற்றங்களால் அப்போதைய சமூகம் படைப்புகளை எப்படி உள்வாங்கும் என்பதைச் சொல்லத்தான் இந்த வீடியோ ஸ்டோரி. இதுபோல் நீங்கள் அன்று கொண்டாடிய படங்கள், அவற்றின் கிளைமாக்ஸ்-களை இன்றைய தலைமுறையினர் ஏற்றுக்கொள்ளத் தயங்கக் கூடியவற்றை கமெண்ட் பண்ணுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top