ஆயிரம் பிறைகண்ட அபூர்வ வசனகர்த்தா – ஆரூர் தாஸின் பயணம்!

சிவாஜி – ஜெமினி கணேசன் நடிப்பில் 1961-ல் வெளிவந்த பாசமலர்கள் தொடங்கி 2014-ல் வடிவேலு நடிப்பில் வெளியான தெனாலி ராமன் வரையில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முக்கியமான வசனகர்த்தாவாகப் பயணித்த ஆரூர் தாஸ், பண்ணிய தரமான சம்பவங்கள் தெரியுமா… அவரோட திரைப்பயணம் எங்க தொடங்குச்சு… ஏசுதாஸ்ங்குற தன்னோட பெயரை எப்போ ஆரூர் தாஸ்னு மாத்திக்கிட்டார் தெரியுமா… பழம்பெரும் வசனகர்த்தா, இயக்குநர், பாடலாசிரியர் ஆரூர் தாஸோட ஜர்னி பத்திதான் இந்த வீடியோவுல நாம பார்க்கப் போறோம்.

Aaroor Dass
Aaroor Dass

திருவாரூரில் 1931-ம் ஆண்டு செப்டம்பர் 10-ல் சத்தியாகு – ஆரோக்கியமேரி தம்பதியின் மகனாகப் பிறந்தவர் ஆரூர் தாஸ். ஏசுதாஸ் என்கிற இயற்பெயருடைய இவருடைய இளமைக் காலம் பவித்திரமாணிக்கம் என்கிற சிற்றூரில் கழிந்திருக்கிறது. திருவாரூரைச் சேர்ந்த கருணாநிதியின் நாடகங்களை இளம் வயதில் பார்த்த ஆரூர் தாஸ், அதுபோல கலைப்படைப்புகளை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார். நண்பர்கள் சிலருடன் இணைந்து ஜென்ம தண்டனை, திரிசூலம் போன்ற நாடகங்களை எழுதியிருக்கிறார். அப்போதெல்லாம் ஊர் பெயரை சேர்த்துக் கொள்வது பிரபலங்களின் வழக்கம். அப்படி சொந்த ஊரான திருவாரூரையும் தன்னுடைய பெயரில் இருந்து தாஸையும் சேர்த்து ஆரூர் தாஸ் என்று வைத்துக் கொண்டார். சினிமாவுக்கு வருவதற்கு முன்னரே ஆரூர்தாஸ் என்கிற பெயர் நாடக உலகில் பிரபலமானது.

சோமு என்பவர் மூலம் அப்போது பிரபலமாக இருந்த வசனகர்த்தாவும் பாடலாசிரியருமான தஞ்சை ராமையாதாஸிடம் உதவியாளராகச் சேர்கிறார். ஒரு கதை எப்படி திரைக்கதையாக மாற்றப்படுகிறது, வசனங்கள் எப்படியெல்லாம் எழுத வேண்டும் என்கிற வித்தையை ராமையாதாஸ் பட்டறையில் கற்றுக்கொள்கிறார். ராமையா தாஸ் பணியாற்றிய நாட்டியதாரா படத்துக்கு உதவி வசனகர்த்தாவாகப் பணியாற்றினார். அதன் வசனங்கள் பெரிதாகப் பேசப்பட்டது. இதனால், தனது மகளுக்கு ஆரோக்கியமேரி என்று பெயரிட்டிருந்தாலும் தாரா என்கிற செல்லப் பெயரில் அழைக்கத் தொடங்கினார்.

வளர்ந்து வரும் இளம் கலைஞராக இருந்த ஆரூர் தாஸுக்கு பாசமலர் வசனகர்த்தா வாய்ப்புக் கிடைத்த கதை சுவாரஸ்யமானது. அதைத் தெரிஞ்சுக்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மக்களே!. பின்னாடி நானே அந்தக் கதையைச் சொல்றேன்.

Aaroor Dass
Aaroor Dass

1959 காலகட்டத்துல தேவர் பிலிம்ஸ் தயாரிச்ச வாழவைத்த தெய்வம் படத்துக்கு முதன்முதலில் ஆரூர்தாஸ் வசனம் எழுதினார். ஜெமினி கணேசனுக்கும் சாவித்திரிக்கும் ஆரூர் தாஸைப் பிடித்துப் போகவே, `நீ வேணா பாரு, ஒரு பெரிய இடத்துக்கு வருவ’ என்று அவரை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பாராம் ஜெமினி. பாசமலர் படத்துக்குப் பிறகு பார் மகளே பார்,  படித்தால் மட்டும் போதுமா, புதிய பறவை, அன்புள்ள அப்பா, பைலட் பிரேம்நாத் உள்பட 32 படங்களுக்கு வசனம் எழுதியிருந்தார். ஒருபுறம் சிவாஜிக்கு வசனங்கள் எழுதிக் கொண்டிருந்த இவர், மறுபுறம் எம்.ஜி.ஆருக்கும் பிடித்தமான வசனகர்த்தாவாக விளங்கியது ஆச்சர்யம்தான்.

எம்.ஜி.ஆருக்கு வேட்டைக்காரன், அன்பே வா தொடங்கி 24 படங்களுக்கு மேல் வசனங்கள் எழுதிய ஆரூர்தாஸ், இதுவரை ஆயிரம் படங்களுக்கும் மேல் வசன கர்த்தாவாகப் பணியாற்றியவர். சிவாஜி, எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் தொடங்கி சிவக்குமார், ரஜினி, கமல், வடிவேலு வரை பல தலைமுறை நடிகர்களுக்கும் வசனம் எழுதிய பெருமை பெற்றவர். 2014-ல் தம்பி ராமையா இயக்கி வடிவேலு நடிப்பில் வெளியான தெனாலி ராமன் படத்தின் வசனகர்த்தா சாட்ஷாத் நம்ம ஆரூர்தாஸ்தான். ஒரு சில படங்களுக்கு உதவி இயக்குநராகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.  

நேரடிப் படங்கள் போலவே டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதுவதும் சவாலான விஷயம். உதட்டசைவுக்கு தக்கபடி வசனங்கள் அமைவது அவசியம். அப்படி 80களின் இறுதி தொடங்கி 90களின் இறுதிவரை தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றிபெற்ற பல படங்களின் வசனகர்த்தா ஆரூரார்தான். டப்பிங் படங்களுக்கும் நேரடிப் படங்களுக்கு இணையாக வசீகரமான வசனங்கள் எழுதி கவனிக்க வைத்தார். இவரது வசனத்தில் முத்திரை பதித்த படங்களுள் விதி படம் முக்கியமானது. மோகன், பூர்ணிமா, லட்சுமி நடித்திருந்த கோர்ட் டிராமாவான விதி படத்தை முழுமையாகத் தாங்கி நின்றது ஆரூர்தாஸின் வசனங்கள்தான். விதி படத்தின் வசனங்கள் எந்த அளவுக்கு ஃபேமஸ் என்றால், படத்தின் வசனங்கள் மட்டுமே தனி ரெக்கார்டு கேசட்டாக வெளியாகி விற்பனையில் சக்கைபோடு போட்டது. அந்தக் கால திருவிழாக்களில் பல இடங்களில் விதி பட வசன கேசட்டுகள் ஒலிபரப்பப்படுவதும் வாடிக்கையாக இருந்தது.  

Also Read – விஜய் ரசிகர்களும் ரசிக்கும் முகவரி.. கிளாசிக் ஹிட்டுக்கான 4 காரணங்கள்!

தேவர் பிலிம்ஸ் படங்களில் வசனம் எழுதத் தொடங்கிய ஆரூர் தாஸை பாசமலர் படத்துக்காக ஜெமினி கணேசன், நடிகர் சிவாஜியிடம் பரிந்துரை செய்திருக்கிறார். இப்படியான ஒரு பெரிய படத்துக்கு புதிய முகம் போன்றிருப்பவரைப் பயன்படுத்தலாமா என்று சிவாஜி முதலில் யோசித்திருக்கிறார். ஜெமினியின் பரிந்துரையால், ஒரு காட்சியைக் கொடுத்து அதற்கு வசனம் எழுதச் சொல்லி டெஸ்ட் பண்ணலாம் என சிவாஜி திட்டமிட்டு, அது பற்றி ஆரூர் தாஸிடம் சொல்லியிருக்கிறார். படத்தில் இடம்பெற்றிருந்த முக்கியமான சீனுக்கு ஆரூர் தாஸ் வசனம் எழுதிக் கொடுத்துவிட்டு, வரவேற்பறையில் காத்திருந்தாராம். அதைப் படித்துப் பார்த்த சிவாஜிக்கு ரொம்பவே பிடித்துப் போகவே, `பீம்பாயை (இயக்குநர் பீம்சிங்கை இப்படித்தான் சிவாஜி அழைப்பாராம்) வரச் சொல்லுங்கள். இவரை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். தொடர்ச்சியாக நமது படங்களில் இவர் வேலை பார்க்கட்டும்’ என்று சொன்னாராம். தனக்குப் பிடித்துவிட்டால் ஒவ்வொருவரையும் செல்லப் பெயரிட்டு அழைப்பது சிவாஜியின் வழக்கம். அப்படி ஆரூர் தாஸை அவர், ஆரூரான் என்றே அழைப்பாராம். ஆரூர் தாஸ் மேல் மிகுந்த பாசம் கொண்டிருந்த கருணாநிதியும் அதே பெயரில்தான் அவரை விளிப்பாராம்.  

Aaroor Dass
Aaroor Dass

சிவாஜிக்கு மட்டுமல்ல எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் தொடங்கி வடிவேலு நடித்த தெனாலி ராமன் படம் வரையில் தொடர்ச்சியாக வசனங்கள் எழுதியவர் ஆரூர்தாஸ். தலைமுறைகள் கடந்தும் இவரது வசனங்கள் பேசப்படுபவை. என்னைப் பொறுத்தவரை பாசமலர் படத்துல முதலாளி சிவாஜி கணேசனுக்கும் தொழிலாளி ஜெமினி கணேசனுக்கும் நடக்குற அந்த உரையாடல் சீன்ல ஆரூர் தாஸோட வசனம் உச்சம் தொட்டிருக்கும்னு நினைப்பேன். ஆரூர் தாஸ் எழுதுன வசனங்கள்ல உங்களோட ஃபேவரைட் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top