பசுமையே இல்லாமல் காய்ந்துபோய் கிடக்குற பசங்களோட கனவுகளை இயற்கை எழில் மிகுந்த காட்சியாக மாத்துறது ஹீரோயின்கள்தான். அந்த வகையில் இப்போ இளைஞர்கள் மனதில் டிரெண்டிங்கில் இருக்கும் ஒரு ஹீரோயின்னா அது, பூஜா ஹெக்டேதான். அரபிக்குத்து பாட்டுக்கும், புட்ட பொம்மா பாட்டுக்கும் பூஜாவோட சேர்ந்து கனவுல டான்ஸ் ஆடாத பசங்க ரொம்பவே குறைவுனு சொல்லலாம். பொதுவாகவே இந்திய சினிமாவில் ஹீரோயின்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் அதிகம் வருவது கிடையாது. இப்போ, அது மாறிக்கிட்டு வருதுனு சொல்லலாம். ஆனாலும், பல கோடி ரூபாய் இன்வெஸ்ட் செய்து மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் கமர்ஷியல் படங்களில் ஹீரோயின்கள் வெறும் பொம்மைகளாகவே பயன்படுத்தப்படுகின்றனர். அப்படிதான், பூஜா ஹெக்டேவும் பெரும்பாலான படங்களில் நடிக்க வைக்கப்படுகிறார். இருந்தாலும் பூஜா ஹெக்டேவிடம் சில யூனிக்கான, இன்ஸ்பைரிங்கான விஷயங்கள் இருக்கு. அதுமட்டுமல்ல சில சர்ச்சைகளிலும் பூஜா ஹெக்டே சிக்கியிருக்காங்க. இதையெல்லாம் பற்றிதான் இந்த கட்டுரையில் நாம தெரிஞ்சுக்கப்போறோம்.
பியூட்டி குயின்
‘பொதுவா ஹீரோயின்களைப் பார்த்து சொல்ற வார்த்தைதான இது’ அப்டினு நீங்க நினைக்கலாம். ஆனால், பூஜா ஹெக்டே உண்மையிலேயே பியூட்டி குயின்தான். அவங்க நடிக்க வர்றதுக்கு முன்னாடி படிச்சிட்டு இருக்கும்போதே மாடலிங்ல அதிக ஆர்வம் இருந்தது. மாடலிங் துறையில கொஞ்சம் கொஞ்சம் தன்னோட பங்களிப்பை செய்திருக்காங்க. 2009-ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியில பூஜா கலந்துக்கிட்டாங்க. ஆனால், ஜெயிக்க முடியல. இருந்தாலும் அவங்க விடுறதா இல்லை. அடுத்த ஆண்டு திரும்பவும் அதே போட்டியில கலந்துக்கிட்டாங்க. அந்தப் போட்டியில் வெற்றி பெற்று ரன்னர் அப் ஆக தேர்வானாங்க. ஹீரோயின்களுக்குனு சில கிராமர் எல்லா இண்டஸ்ட்ரிலயும் வைச்சிருக்காங்க. அதுல முக்கியமானது அவங்க ஸ்கின் கலர். வெள்ளையா, பளபளனு இருக்கணும்னு சொல்லுவாங்க. ஆனால், பூஜா ஹெக்டே மற்ற முன்னணி நடிகைகளைப் போல ரொம்ப வெள்ளைக் கலர்லாம் இல்லை. அவங்களோட வார்த்தைகள்ல சொல்லணும்னா லவ்லி சாக்லேட் ப்ரௌன் ஸ்கின் டோன்தான் அவங்களோடது. இதை அவங்க அக்சப்ட் பண்ணிக்கவே ரொம்ப நாள் ஆச்சுனு சொல்லலாம். பயணங்கள், அவங்க சந்தித்த மனிதர்கள் அவங்களோட ப்ரௌன் ஸ்கின்னை அக்சப்ட் பண்ணிக்க ரொம்பவே ஹெல்ப் பண்ணிச்சுனு இண்டர்வியூக்கள்ல சொல்லியிருக்காங்க. இயற்கையாகவே தனக்கு கிடைத்த இந்த ஸ்கின் கலரை பூஜா ரொம்பவே பாஸிட்டிவா எடுத்து வொர்க் பண்ணிக்கிட்டு இருக்காங்க. எந்த ஒரு துறையா இருந்தாலும் சரி, குறிப்பா அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குற சினிமா இண்டஸ்ட்ரீலகூட நம்மளை நாம அக்சப்ட் பண்ணிக்கிட்டா நிச்சயம் ஜெயிக்கலாம்ன்றதுக்கு பூஜா ஒரு பெஸ்ட் எக்ஸாம்பிள்.
ரோலர் கோஸ்டர் ஜர்னி
‘புட்ட பொம்மா’னு ஒரே பாட்டுல முன்னுக்கு வந்தவங்கனு பூஜா ஹெக்டேவ ஃப்ரெண்ட்ஸ்லாம் சொல்லி கேள்விபட்டிருப்போம். ஆனால், அதுக்கு முன்னாடி அவங்க சந்திச்ச தோல்விகள், வாய்ப்புக்காக ஏங்கிக்கிடந்த சம்பவங்கள் எல்லாம் ஏராளம். பூஜா, இந்திய அழகிப்போட்டில ஜெயிச்சதுக்கு அப்புறம் அவங்களுக்கு வந்த முதல் வாய்ப்பு ‘முகமூடி’. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்னுலாம் சொல்லி அந்தப் படத்தைப் புரொமோட் பண்ணாங்க. ஆனால், அந்தப் படம் செம ஃப்ளாப் ஆச்சு. பூஜாவுக்கு அதுக்கப்புறம் சுமார் ஒரு வருஷம் எந்த வாய்ப்பும் வரலை. நிறைய ஆடிஷன்ஸ், கதை கேக்குறதுனு பூஜா இருந்தாலும் எதுவும் கிளிக் ஆகலை. கடைசில ஒருநாள் ஒரு ஸ்கூட்டி விளம்பரம் ஆடிஷன்க்கு போய்ருக்காங்க. உள்ள நுழையும்போதே அவங்க மேல காக்கா எச்சம் போட்ருக்கு. `ஒரு வருஷம் வேலை இல்லை. வாழ்க்கைல எதுவும் நடக்கலை. எல்லாத்தையும் கடந்து ஒரு ஆடிஷன் வந்தா. காக்கா இப்படி பண்ணிடுச்சே’னு ஃபீல் பண்ணி ஆடிஷன் அட்டண்ட் பண்ணியிருக்காங்க. அந்த ஆடிஷன்ல செலக்ட்டும் ஆயிட்டாங்க. ரன்பீர் கபூர்கூட அந்த ஸ்கூட்டி விளம்பரம் நடிச்சாங்க. அந்த விளம்பரம் நடிக்கும்போது அவங்களுக்கு தெரியலை. தன்னோட தலையெழுத்தை மாத்தப்போறது அந்த விளம்பரம்தான்னு. அந்த விளம்பரம் பார்த்துதான் மொகஞ்சதாரோ டைரக்டர் அஷுதோஷ் கௌவாரிக்கரோட மனைவி பூஜாவை சஜ்ஜஸ்ட் பண்ணியிருக்காங்க. அப்படித்தான் பாலிவுட்க்குள்ள பூஜா என்டர் ஆனாங்க.
தெலுங்கு இண்டஸ்ட்ரீக்குள்ள எண்டர் ஆகவும் இந்த விளம்பரம்தான் காரணம். தெலுங்குல ஒக்க லைலா கோசம், முகுந்தா ஆகிய படங்கள்ல நடிச்சாங்க. இந்தப் படங்கள் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பூஜாவை ஓரளவுக்கு கொண்டு போய் சேர்த்ததுனு சொல்லலாம். எப்பவும் சிட்டி பொண்ணாவேதான் பூஜாவைப் பார்த்திருப்போம். ஆனால், முகுந்தா படத்துல கிராமத்துப் பொண்ணா கலக்கியிருப்பாங்க. இந்த படங்களுக்காக சில விருதுகள்லகூட நாமினேட் ஆனாங்க. ஆனாலும், அவங்களுக்கு ஒரு உறுதியான கேரக்டர் கிடைக்கல. ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியா ‘மொகஞ்சதாரோ’ன்ற படத்துல நடிக்க கமிட் ஆனது பூஜாவுக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்துச்சு. அதுலயே அவங்களுக்கு இரண்டு வருஷம் ஓடிப்போச்சு. இந்தப் படத்துல கமிட் ஆனதால பெரிய படங்கள்ல நடிக்கிற வாய்ப்பைக்கூட இழந்ததா பூஜா சொல்லியிருக்காங்க. படம் வெளியானதும் பெரிய ஹிட்டாகும், நிறைய வாய்ப்புகள் வரும்னு பூஜா காத்திருந்துருக்காங்க. ஆனால், நடந்தது வேற. தன்னோட டைம், ஹார்ட் வொர்க் எல்லாத்தயும் அந்தப் படத்துல இன்வெஸ்ட் பண்ணாங்க. ரிஸ்ல்ட் என்னனா… படம் ஓடல. அதை கேட்டு பூஜா ஹெக்டே ரொம்பவே உடைஞ்சு போய் அழுதுருக்காங்க. ஆனால், இப்படி அழுதுட்டு ஒரு சிறைக்குள்ள இருக்கணுமா? இல்லை இன்னும் ஹார்ட்வொர்க் பண்ணி சக்ஸஸ் ஆகணுமா? அப்டின்ற கேள்வி பூஜாக்குள்ள எழுந்துருக்கு. அப்புறம் Duvvada Jagannadham, Aravinda Sametha Veera Raghava, Maharshi, Ala Vaikunthapurramuloo அப்டினு பேக் டு பேக் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து விருதுகளையும் வாங்கி குவிச்சாங்க. இப்போ தெலுங்குல ஒன் ஆஃப் தி லீடிங் ஹீரோயினா பூஜா இருக்காங்க. இப்படி சக்ஸஸ், ஃபெயிலியர், ப்ளாக்பஸ்டர் எல்லாம் சேர்ந்த ஒரு ரோலர் கோஸ்டர் பயணம்தான் பூஜா ஹெக்டேவின் சினிமா டிராவல்.
முக்கியமான விஷயம் என்னனா பூஜா எப்பவுமே தன்னோட சக்சஸை தலைல ஏத்தி கொண்டாடமாட்டாங்க. அது நாளைக்கு மாறும் அப்டின்றதுல ரொம்பவே கான்ஃபிடன்டா இருக்குற ஆளு. அதேபோல தோல்வியை ரொம்ப சீரியஸாவும் எடுத்துக்க மாட்டாங்க. ஏன்னா, இது இயற்கையான விஷயம்ன்ற தெளிவு அவங்களுக்கு இருக்கு. அவங்க பண்ற வேலையை எஞ்சாய் பண்ணி பண்ணனும்ன்றதுல ஃபோகஸா இருப்பாங்க.
ஹிட்டு பாட்டு மேஜிக்
பூஜா நடிச்ச பல படங்கள் ஃப்ளாப் ஆயிருக்கு. ஆனால், அந்தப் படத்துல வர்ற ஒரு பாட்டாவது பட்டி தொட்டில இருந்து பர்கர் சாப்பிடுற சிட்டி வரைக்கும் ஃபேமஸ் ஆயிடும். பூஜாவோட முதல் படம் முகமூடி. அந்தப் படத்துல வர்ற ‘வாயமூடி சும்மா இருடா… ரோட்டப் பார்த்து நேரா நடடா’ பாட்டுலாம் இன்னைக்கும் பலரோட காலர் டியூனா இருக்கும். பெருசா டான்ஸ்லாம் ஆடியிருக்கமாட்டாங்க. ஜூவா முன்னாடி சும்மா அங்க இங்க நடப்பாங்க. அவ்வளவுதான் பாட்டு ஹிட்டு. அந்தப் பாட்டுல வர்ற ‘கண்ணம் சுருங்கிட நீயும், மீசை நரைத்திட நானும், வாழ்வின் கரைகளை காணும், காலம் அருகினில் தானோ’ வரிகள்லாம் காதலர்களோட கனவைச் சொன்ன வரிகள்னு சொல்லலாம். அப்படியே டோலிவுட் பக்கம் போனா…. அல்லாவைகுண்டபுரம்லூ படத்துல வர்ற சாமஜவரகமனா, புட்ட பொம்மா பாட்டுலாம் உலக லெவல்ல ஹிட்டு ஆச்சு. உள்ளூர் வயசு பசங்கள்ல இருந்து உலக ஃபேமஸ் வார்னர் வரைக்கும் ஆடுன பாட்டு புட்ட பொம்மா பாட்டுதான். அப்புறம் முகுந்தா படத்துல வர்ற கோபிகம்மா, டிஜே படத்துல வர்ற கடிலோ படிலோ மடிலோ, மகரிஷி படத்துல வர்ற எவரெஸ்ட் அஞ்சுனா, அடுத்து பாலிவுட் பக்கம் போனோம்னா மொகஞ்சதாரோல வர்ற டு ஹை பாட்டு, லேட்டஸ்ட்டா வந்த அரபிக்குத்து இப்படி பூஜா வர்ற பாட்டு எல்லாம் வேறலெவல் ஹிட்டுதான். அது என்னமோ தெரியல பாட்டுக்கும் அவங்களுக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி அமைஞ்சிடுச்சு.
பெஸ்ட் டான்ஸர்
பூஜாவோட நடனத்துல இருந்தே தெரிஞ்சுக்கலாம் அவங்க ஒரு பெஸ்ட் டான்ஸர் அப்டின்றதை. சின்ன வயசுலயே பூஜா டான்ஸ் கத்துக்கிட்டாங்க. பரதநாட்டியம் பூஜாவுக்கு கை வந்தக் கலை. இந்தியாலயே பெஸ்ட் டான்ஸர்னு கொண்டாடப்படுற ஹிருத்திக் ரோஷன், விஜய், அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர் இப்படி எல்லார்கூடவும் போட்டிப் போட்டு டான்ஸ் ஆடிருக்காங்கனா சும்மாவா?! அதுவும் புட்ட பொம்மா பாட்டுல வர்ற சிக்னேச்சர் ஸ்டெப், அரபிக்குத்து பாட்டுல வர்ற சிக்னேச்சர் ஸ்டெப் இதெல்லாம் இன்னும் கொஞ்சம் வருஷத்துக்கு நின்னு பேசும். குழந்தைகள்கூட பூஜாவோட ஸ்டெப்பை அப்படியே காப்பி பண்ணி ஆடுறாங்க. தளபதி ஸ்டைல்ல சொல்லணும்னா, புடிச்சிட்டாங்க… குழந்தைகளையும் புடிச்சிட்டாங்க.
சமந்தா Vs பூஜா
பூஜா ஹெக்டே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு சமந்தாவிடம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ‘சமந்தா, அப்படி ஒன்றும் அழகானவர் இல்லை’ என பதிவிட்டிருந்தார். சமூக வலைதளங்களில் இந்த பதிவு வைரலானது. உடனே, தன்னுடைய அக்கௌண்ட் ஹேக் செய்யப்பட்டதாக பூஜா ஜெக்டே தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சமந்தாவின் ரசிகர்கள் ட்விட்டரில் #PoojaMustApologiseSamantha என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து பூஜா, சமந்தாவிடம் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். இந்த விவகாரம் தென்னிந்திய சினிமா உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. பூஜாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீஸ் சிம்பல் உடன் செல்ஃபி ஒன்றையும் பதிவிட்டிருந்தார். இருந்தாலும் இருவருக்கும் இடையில் பனிப்போர் செல்வதாக செய்திகள் அவ்வப்போது வெளியாவதுண்டு.
பூஜா ஹெக்டேவின் பாடல்களில் உங்களோட ஃபேவரைட் பாட்டு எதுனு கமெண்ட்ல சொல்லுங்க.
Also Read: ’காதலா காதலா’ படம் ஏன் ஸ்பெஷல் – நச்சுன்னு நாலு காரணங்கள்!