ரத்தம் சிந்தி வேலை பார்த்து போராடிய மக்களின் கதை… Real KGF Story!

Eldorado… இதை தங்க நகரம் என்று சொல்வார்கள். இதைத் தேடி பல ஸ்பானியர்கள் தங்களுடைய வாழ்க்கையை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். பல பழங்குடியினரை கொன்று குவித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட போதைக்கு நிகரான ஒன்றுதான் இந்த எல்டொராடோ. தங்க போதை. பண போதை. அப்படி இந்தியாவுடைய எல்டொராடோவாக கொடிகட்டி பறந்த பகுதி கோலார் தங்க வயல் (KGF). இந்தப் பகுதியைக் காட்டி அன்றைய பிரதமர் நேரு உலக வங்கியில் கடன்கூட வாங்கியிருக்கிறார். இவ்வளவு முக்கியமான இடமாக திகழ்ந்தது. இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் கேஜிஎஃப். வெகு விரைவில் இதன் பாகம் இரண்டு வரவிருக்கிறது. அந்த இடத்தில் புதைந்து கிடக்கும் வரலாற்றுக் கதையைத்தான் பார்க்கப்போகிறோம். 

KGF

1802 பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மைசூர் சமஸ்தானத்தில் இருக்கும் கோலார் பகுதியில் மக்கள் தங்கம் இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். இதனால் ஆங்கிலேயர்கள் இந்தியாவின் நிலப்பரப்பையும் எல்லைகளையும் முழுவதும் அளக்கும் வேலையில் இறங்கியது. கோலாரில் தங்கம் இருப்பது தெரிந்தவுடன் பிரிட்டிஷ் உயர் அதிகாரி ஒருவரின் உதவியோடு தங்கம் தோண்டும் பணி துவங்குகிறது. அதற்காக அந்த ஊரின் மொத்த தங்கக் கதையையும் மக்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதோடு தனிப்பட்ட முறையில் சில ஆய்வுகளையும் மேற்கொள்கிறார். ஆனால் அவருடைய முயற்சி தோல்வியில்தான் போய் முடிகிறது. அதன் பிறகு 60 வருடங்கள் கழித்து இதற்கு முன் தயார் செய்யப்பட்ட ரிப்போர்ட்டை படித்துப் பார்த்து மீண்டும் ஆங்கிலேய அதிகாரிகள் சிலர் தங்க வேட்டையில் ஈடுபடுகிறார்கள். பணி மிகத் தீவரமானது. அனைவருக்கும் ஒரே நம்பிக்கை. ‘இந்த இடத்தை ஆழமாக தோண்டினால் கட்டாயம் தங்கம் இருக்கும்.’ இதை ஒவ்வொருவரும் தீர்க்கமாக நம்பினார்கள். நிலத்தை தோண்டவும் செய்தார்கள். ஆனால் அடுக்கடுக்கான தோல்விகள்தான் மிஞ்சியது. தோண்டத் தோண்ட தங்கம் கிடைக்கத்தான் செய்தது. ஆனால் அது வெறும் குண்டு மணி அளவே கிடைத்தது. கிடைக்கும் தங்கத்தின் மதிப்பைவிட தோண்டுவதற்கான செலவு டவுசர் கிழிய, அந்த முயற்சியானது மீண்டும் கைவிடப்படுகிறது. ஆனால் அங்கிருக்கும் மக்கள் அதை விடுவதாக இல்லை. கையில் மம்பட்டியையும் சம்பட்டியையும் வைத்து தோண்டிக்கொண்டேதான் இருந்தார்கள்.

மறுபடியும் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு ஆங்கிலேய அதிகாரி சுரங்கம் அமைத்து தோண்ட துவங்குகிறார். எதிர்பாராத விதமாக இவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான அளவு தங்கம் கிடைக்கிறது. உடனே அந்த இடத்தை லீசுக்கு எடுத்து சுரங்கத்தை பெரிதுபடுத்த திட்டமிடுகிறார். ஆனால் தங்கம் தோண்டும் பணி என்று சொல்லாமல் கனிம வளங்களை எடுப்பதற்காக என்று சொல்கிறார். மைசூர் சமஸ்தானமும் அதற்கான உரிமத்தை கொடுக்கிறது. சில நாட்கள் கழித்து தங்க விஷயம் தெரிந்த மைசூர் சமஸ்தானம் அந்த உரிமத்தை கேன்சல் செய்திட முற்படுகிறது. ஆனால் அந்த ஆங்கிலேய அதிகாரியோ கிடைக்கும் தங்கத்தில் 10 பர்சன்ட் தருவதாக கூறி மீண்டும் தங்கப் பணிக்கு ஆயத்தமாகிறார். நவீன தொழில்நுட்பம் கொண்ட கருவிகளை வைத்து சுரங்கம் இன்னும் வலுவாக்கப்பட்டு தோண்டப்படுகிறது. ஆழம் அதிகமாக அதிகமாக ஆபத்தும் அதிகாரிக்கிறது. கூடவே எதிர்ப்புகளும். இது வேலைக்கு ஆகாது என்று தெரிந்த அந்த ஆங்கிலேய அதிகாரி, தன்னிடம் இருக்கும் உரிமத்தை வேறு யாரிடமாவது விற்றுவிட்டு ஊர் திரும்பலாம் என்று எண்ணுகிறார். அந்த இடத்தை ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்து உரிமத்தை அவர்களது பெயரிலேயே எழுடிவிட்டு நடையைக் கட்டுகிறார். 

கோலார் தங்க வயல்

நவீன தொழில்நுட்ப கருவிகளோட சில நிபுணர்கள் பரிந்துரையின்படி இன்னும் வேகமாகவும் விவேகமாகவும் சுரங்கம் அமைக்கப்படுகிறது. அவர்களுக்கும் தோல்வி, நஷ்டம். இப்படியே 10 நிறுவனங்களுக்கு மேல் அந்த உரிமமானது மாறிக்கொண்டே இருக்கிறது. இறுதியில் ஒருவருக்கு நடந்தது அந்த மேஜிக். ஜான் டெய்லர் என்பவர் விடாமுயற்சியோடும் அவருக்கு பழக்கமான ஒருவரின் பரிந்துரைப்படி தீர விசாரிக்கப்படுகிறது. கள ஆய்வுகள் நடக்கிறது. இன்னொரு சுரங்கம் இருப்பது தெரிந்து அதை மேலும் தோண்டியவர்களுக்கு பாறை பாறையாக தங்கம் கிடைக்கிறது. ஆனால் இது நீடிக்கவில்லை. எவ்வளவுக்கு எவ்வளவு தங்கம் கிடைத்ததோ அதைவிட பத்து மடங்கு ஆபத்துகளும் அந்தப் பணியின் போது ஏற்பட்டது. இதனால் பணியாற்றும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து விலகிக் கொண்டார்கள். இருப்பினும் பணத் தேவையிருக்கும் மக்களை அந்நிறுவனம் தேடிக் கண்டுபிடித்தது. ஆழம் அதிகரிக்க அதிகரிக்க தொழிலாளர்களும் அதிகம் தேவைப்பட்டார்கள். சம்பளம் கொடுத்து வேலை வாங்கிய நிறுவனம் நாட்கள் செல்லச் செல்ல வலுக்கட்டாயமாக வேலை பார்க்க வைக்கப்பட்டார்கள். இதில் அநேகமானவர்கள் தமிழர்கள்தான். 

கோலார் தங்க வயல்

அப்போதுதான் கங்காணிகளின் அட்டூழியம் ஜாஸ்தியாகிறது. மக்களிடம் நன்றாக பேசி அவர்களது நம்பகத்தன்மையை பெற்று அப்படியே வலுக்கட்டாயமாக அடிமையாக்கப்பட்டார்கள். மலேஷியாவால் கொண்டு வரப்பட்ட இந்த நடைமுறையால் நாடு முழுக்க பல அப்பாவி மக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். ஆழத்தில் இருக்கும் வெப்பத்தை தாங்க முடியாமலும் வேறு வழியின்றியும் மக்கள் அவதிப்பட்டு அந்த பணிகளை செய்து வந்தனர். இவர்களுக்கு முன்பே ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், திப்பு சுல்தான் எனப் பல அரசர்கள் அங்கு தங்கத்தை தோண்டியிருந்தார்கள். ஏற்கெனவே சுரண்டப்பட்ட இடம் என்பதால் தீவிரமான உழைப்பினாலும், ஆழம் அதிகம் சென்றும் பாறைகளை வெடிக்க செய்து தங்கம் பெறப்பட்டது. அப்படியே வருடங்கள் நகர்ந்து கோலாருக்கு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. இந்தியாவில் முதன்முறையாக மின்சாரம் கொண்டுவரப்பட்ட இடம் கோலார். மின்சாரம் வந்ததும் அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் கோலாருக்கு கிடைத்தது. அதே சமயம் கோலார் வாழ் மக்கள் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு பல உயிரிழப்புகளும் நேர்ந்தது. பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தங்கச் சுரங்கம் அரசாங்கத்துக்கு சொந்தமானது. மறுபடியும் வேலை ஆரம்பமானது. ஆனால் தங்க மதிப்பை விட அதைத் தோண்டுவதற்கு ஆகும் செலவு அதிகமானது. இதனால் 2001ம் ஆண்டு சுரங்கம் நிரந்தரமாக மூடப்பட்டது. அப்படி மூடப்பட்டதுகூட அங்கு வேலை செய்யும் மக்களுக்கு முறையாக சொல்லப்படவில்லை. மார்ச் 1ம் தேதி 2001-ல் திடீரென கதவை மூடிவிட்டு ரெஜிஸ்டரில் கையெழுத்து வாங்கிவிட்டு வீட்டுக்கிற்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். 

Also Read : `இந்தியாவின் மைக்கேல் ஜாக்சனை ஏன் எல்லாருக்கும் புடிக்கும்?’ – அட்டகாசமான 5 காரணங்கள்!

இதில் சோகமான விஷயம் என்னவென்றால் அங்கு வேலை பார்ப்பதில் மக்களுக்கு விருப்பம் இல்லை. அதேநேரம் அந்த வேலையைத் தவிர்த்து அங்கு வாழ்ந்த மக்களுக்கு வேறு வேலையும் தெரியாது. நிரந்தரமாக மூடப்பட்டது என்று முறையாக அறிவிப்பு வருவதற்கு முன்பு வரை அங்கு வேலை பார்த்த மக்கள் 10 மாத காலம் போராடிப் பார்த்தார்கள். அதன் பிறகு இது சரி வராது என்பதை உணர்ந்த பின்னர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு வேறு வேலை பார்ப்பதற்காக காலி செய்து கிளம்பிவிட்டார்கள். 

கோலார் தங்க வயல்

இதைத்தான் நாம் கே.ஜி.எஃப் படத்தில் பார்த்தோம். புழுதியும், சோகங்களும் படர்ந்த இடத்தை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது அந்தப் படம். கற்பனை கதைதான் என்றாலும் அங்கு மக்கள் அனுபவித்த அவலம் அனைத்தும் உண்மை. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top