Red Alert: வானிலை ஆய்வு மையம் சார்பில் விடுக்கப்பட்டும் ரெட் அலர்ட் என்பதன் பொருள் என்ன… நிறங்களின் அடிப்படையில் எச்சரிக்கை கொடுக்கப்படுவதன் பின்னணி என்ன?
வடகிழக்குப் பருவமழை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதனால் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்துக்கு நவம்பர் 10,11 ஆகிய தேதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கையையும், நவம்பர் 12-ம் தேதி ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறது.
நிறங்களின் அடிப்படையில் எச்சரிக்கை ஏன்?
வானிலை நிகழ்வுகள் எந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதோ, அதன் தீவிரத்தை உணர்த்தவே நிறங்களின் அடிப்படையில் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகச் சொல்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். நிறங்கள் அடிப்படையிலான இந்த எச்சரிக்கை அரசு அதிகாரிகளையும் பேரிடர் மேலாண்மைத் துறையைச் சார்ந்தவர்களும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீட்புப் பணிகள் எந்த அளவுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துபவை.
நிறங்கள் உணர்த்துபவை என்ன?
ரெட் அலர்ட் (Red Alert)
உடனடியாக நடவடிக்கை தேவை என்ற மிகவும் ஆபத்தான சூழ்நிலையைக் குறிப்பது. புயல் கரையை நெருங்கும் சூழல்களில் காற்றின் வேகம் 130 கி.மீ வரை இருக்கலாம் என்று எச்சரிக்கை செய்ய விடுக்கப்படுவது. கடுமையான காற்றோடு மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யலாம். புயல் கரையைக் கடக்கும்போது அதனால் பாதிக்கப்படும் பகுதிகளில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க அரசுகளை அறிவுறுத்த வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுக்கும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுவதோடு, மின் இணைப்பும் முன்னெச்சரிக்கையாகத் துண்டிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். இந்தப் பகுதிகளுக்குப் பயணிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படும்.
வானிலை மிக மோசமான நிலையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டால் மட்டுமே ரெட் அலர்ட் விடுக்கப்படும். அதேபோல், ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட பகுதிகளில் மழைப்பொழிவு 30 மிமீ-க்கும் அதிகமாக இருக்கும் என்கிறது வானிலை ஆய்வு மையம். அதேபோல், தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு அதிகமாக மழை நீடிக்கும்.
யெல்லோ அலர்ட் (Yellow Alert)
வானிலை மோசமான நிலையில், பாதிப்புகள் இருக்கலாம் என்கிறரீதியில் மக்களைக் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்த இந்த எச்சரிக்கை விடுக்கப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் 7.5 மிமீ முதல் 15 மிமீ வரை மழைப் பொழிவு இருக்கலாம். அடுத்த 1 முதல் 2 மணி நேரத்துக்கு மழை பெய்யலாம். யெல்லோ அலர்ட் விடுக்கப்பட்ட பகுதிகளில் வானிலை மாற்றங்கள் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.
ஆரஞ்சு அலர்ட் (Orange Alert)
மோசமான வானிலை அடுத்த சில நாட்களுக்கு இருக்கலாம், அதனால் பொதுமக்களுக்கும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படலாம் என்ற சூழலில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படும். இதுபோன்ற சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு தயார் நிலையில் இருக்க அரசு இயந்திரத்துக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தும். யெல்லோ அலர்ட்டைத் தொடர்ந்து வானிலை மோசமாகும்பட்சத்தில் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்படும். புயல் சின்னம் வானிலையை மோசமாக்குவதோடு, சாலை – வான் போக்குவரத்தைக் கடுமையாகப் பாதிக்கும். இதனால், உயிர் சேதமோ பொருட்சேதமோ ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படும். 65 முதல் 75 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம். மழைப்பொழிவு 15 முதல் 33 மிமீ வரை இருக்கலாம்.
Also Read – Chennai Rains: மழைக்கால நோய்கள்… பாதுகாப்பாக இருப்பது எப்படி?