வாழ்க்கையில் சோர்ந்து போகும்போதெல்லாம் யாராவது ஒருவரின் கதைகள் நமக்கு உத்வேகத்தை தரக்கூடியதாக அமையும். அந்த உத்வேகம் சில சமயங்களில் யானை பலத்தையும் நம்பிக்கையையும் நமக்குள் ஏற்படுத்தும். அதேபோல அந்தக் கதைக்கு சொந்தமானவரின் சாதனைகள் நம்முடைய சாதனைகளைப் போலவே நம்மை உணரச் செய்யும். அவ்வகையில், நம்மில் ஒருவராக… நமக்கு முன்மாதிரியாக நின்று சாதித்து நமக்கு உத்வேகத்தையும் யானை பலத்தையும் நம்பிக்கையையும் தரும் யதீந்திரா – வைப் பற்றி இந்தக் கட்டுரையில் நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள சக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள், சத்தியமூர்த்தி – வினய கஸ்தூரி தம்பதி. இவர்களுக்கு 12 வயதான யதீந்திரா என்ற மகன் உள்ளார். யதீந்திரா ஆட்டிம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். இதனை அவரது பெற்றோர்கள் யதீந்திராவின் 2 வயதில் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து நீச்சல், கராத்தே போன்ற பயிற்சிகளை சிறுவயதில் இருந்தே அவருக்கு அளித்து வந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், சத்தியமூர்த்தியின் குடும்ப நண்பரான ஆண்ட்ரூ ஜோன்ஸ் என்பவருடன் மலையேற்றப் பயிற்சிக்கும் அனுப்பி பயிற்சி அளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இமயமலைத் தொடர்களில் ஒன்றான பியாஸ் குண்ட் மலையில் ஆண்ட்ரூ ஜோன்ஸ் உடன் சேர்ந்து யதீந்திராவும் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏறத்தொடங்கியுள்ளார். இந்த மலையின் உயரம் சுமார் 28,000 அடி. இதில் 14,000 அடி உயரத்தை சுமார் 4 நாள்களில் யதீந்திரா ஏறி சாதனை படைத்துள்ளார். அந்த உயரத்தில் நின்று தேசிய கொடியை அசைத்து தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த சாதனையின் மூலம் இமயமலைத்தொடர்களில் மலையேற்றப்பயிற்சி மேற்கொண்டு சுமார் 14,000 அடி உயரத்தில் ஏறிய முதல் ஆட்டிசம் பாதித்த சிறுவன் என்ற சாதனையை யதீந்திரா படைத்துள்ளார்.
இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர்கள் பேசும்போது, ‘‘யதீந்திரா சிறு வயதில் இருந்தே மூளை வளர்ச்சியில் பாதிப்படைந்துள்ளார். எனவே, அவருக்கு கராத்தே, நீச்சல், மலையேற்றப் பயிற்சி போன்றவற்றை அளித்து வந்தோம். எங்களால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் பெற்றோர்களாக யதீந்திராவுக்கு கொடுத்து வந்தோம். தற்போது யதீந்திரா இமயமலையில் ஏறி சாதனை படைத்துள்ளார். இது இந்தியாவிற்கு பெருமை. எனவே, நாங்கள் தமிழக முதல்வர் மற்றும் டி.ஜி.பி-ஐ சந்தித்து வாழ்த்துப்பெற உள்ளோம்” என்று கூறினர்.
Also Read: பல்கலை. துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் – பேரவையில் புதிய மசோதா தாக்கல்!