I Periyasamy

அதிருப்திசாமியான ஐ.பெரியசாமி… சமாதானம் செய்த சக்கரபாணி! பின்னணியில் நடந்தது என்ன?

தமிழகத்தின் 12-வது முதலமைச்சராக, 34 அமைச்சரவை சகாக்களுடன் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுவிட்டார். அமைச்சரவையில் 16 பேர் புதிய முகங்கள். புதிய முகங்களுக்கு முக்கியத்துவமற்ற துறைகளைக் கொடுக்காமல், அவர்களின் மீது நம்பிக்கை வைத்து, முக்கியத்துவம் வாய்ந்த துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதிய முகங்களும்… முக்கியத்துவம் வாய்ந்த துறைகளும்…

Ma Subramanian

கொரோனா இக்கட்டை சமாளிக்கும்விதமாக, மா.சுப்பிரமணியனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரத்துறை கொடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு புதிய முகமான பழனிவேல் தியாகராஜனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் துறை, தி.மு.க-வைப் பொறுத்தவரை, அண்ணா, கலைஞர், பேராசிரியர் க.அன்பழகன் மட்டுமே வகித்த முக்கியத்துவம் வாய்ந்த துறையாகும். அதுபோல், அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்கு வந்து சீட் வாங்கி வெற்றிபெற்ற செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையும், ராஜ கண்ணப்பனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்துத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சியடைந்த ஐ.பெரியசாமி!

I Periyasamy - MK Stalin

முதல்முறை அமைச்சர் பொறுப்பை ஏற்பவர்கள், மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு எல்லாம், முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்ட நேரத்தில், தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில்(1 லட்சத்து 35 ஆயிரத்து 571 வாக்குகள்) வெற்றி பெற்ற வேட்பாளரும், தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட 19 வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க வைத்தவரும், தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவருமான ஐ.பெரியசாமிக்கு முக்கியத்துவம் இல்லாத கூட்டுறவுத்துறை ஒதுக்கப்பட்டது. அதுவும் இதற்கு முன்பு நடைபெற்ற ஆட்சிகளின்போது, உணவுத்துறையும், கூட்டுறத்துறையும் இணைக்கப்பட்டே அந்தத் துறை இருக்கும். ஆனால், தற்போது உணவுத்துறையில் இருந்து அதன் இணைப்புத்துறையான கூட்டுறவுத்துறை தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்குதான் ஐ.பெரியசாமிக்கு விதி விளையாடியது.

அரசியலில் சீனியர்… அதிகாரத்தில் ஜூனியர்!

I Periyasamy - Sakkarapani

திண்டுக்கல் மாவட்டத்தின் முடிசூடா ராஜவாக திகழும் ஐ.பெரியசாமியின் ஆஸ்தான ஜூனியர்தான் அர.சக்கரபாணி. அவர் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு, முக்கியத்துவம் வாய்ந்த உணவுத்துறையும், கட்சியிலும், அரசியலிலும், மாவட்டத்திலும் சீனியரான தனக்கு முக்கியத்துவமற்ற கூட்டுறவுத்துறையும் ஒதுக்கப்பட்டது ஐ.பெரியசாமியை அதிர்ச்சியடைய வைத்தது. மேலும், உணவுத்துறையோடு இணைந்து கூட்டுறவுத்துறை செயல்பட வேண்டும் என்பதால், இனி ஐ.பெரியசாமி, தனது ஜூனியர், அர.சக்கரபாணியைச் சார்ந்தே செயல்பட முடியும். இது தனக்கு திட்டமிட்டு இழைக்கப்பட்ட அவமானம் என்று கருதுகிறார் அவர். இத்தனைக்கும் ஐ.பெரியசாமியின் பெயர் அமைச்சரவைப் பட்டியலில், மதியம் 12 மணிவரை மின்சாரத்துறையில்தான் இருந்தது. ஆனால், அதன்பிறகுதான், அவர் பெயர் பட்டியலில் மாற்றப்பட்டது.

ஐ.பெரியசாமி அதிருப்தி சாமியானதன் பின்னணி!

சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளும் தொகுதிகளை முன்னும் பின்னுமாக அவரது மருமகன் சபரீசன் ஆய்வு செய்தார். அப்போது, கட்சியின் ஜூனியர், சீனியர் என்று பார்க்காமல், அனைவருக்கும் சில கட்டாய உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதை பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால், இயல்பிலேயே சற்று டென்ஷன் பார்ட்டியான ஐ.பெரியசாமி, “இந்த மாவட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும்… நீங்கள் இதுதான் நடக்கிறது என தளபதிக்கு தகவல் மட்டும் சொல்லுங்கள்… அவர் புரிந்து கொள்வார்… நீங்கள் எந்த உத்தரவும் எனக்குப் போடாதீர்கள்… ” என்று சற்று காட்டமாகவே பதில் சொல்லி உள்ளார். ஐ.பி-யின் அந்தப் பேச்சு சபரீசனைச் சற்றுக் காயப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. அதுதான் இன்றைக்கு ஐ.பெரியசாமியை, அதிருப்திசாமியாக்கி உள்ளது என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

சபரீசனுக்கு சமாதனக் கொடி!

Udhayanidhi Stalin - Sabareesan

தேர்தல் பிரசாரங்களில் பரபரப்பாக இருந்த மு.க.ஸ்டாலினிடம், ஐ.பி-சபரீசன் மோதல் விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. அப்போதைக்கு அவர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணப்பட்டபோது, தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் ஐ.பெரியசாமி வெற்றி பெற்றார். அதையடுத்து, அவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற வந்தார். அப்போது பழைய விவகாரம் பற்றி மெதுவாகப் பேசிய மு.க.ஸ்டாலின், “மாப்பிள்ளையையும் ஒரு எட்டுப் போய்ப் பார்த்துவிடுங்கள்… ” என்று கூறியுள்ளார். கட்சித் தலைவரே சொன்ன பிறகு வேறு வழியில்லாமல் சபரீசனை நேரில் சந்தித்த ஐ.பெரியசாமி, “பழைய விவகாரம் எதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம்” என்று சபரீசனிடம் சமாதானம் பேசியுள்ளார். அப்போதைக்கு சிரித்த முகத்துடன், “அதெல்லாம் நான் ஒன்றும் நினைக்கவில்லை” என்று சொல்லி ஐ.பெரியசாமியை அனுப்பிவிட்டார்.

மதியத்துக்கு மேல் நடந்தது என்ன?

I Periyasamy

மே 6-ம் தேதி அமைச்சரவைப் பட்டியல் தயாராகி இருந்தது. அதில் ஐ.பெரியசாமிக்கு மின்சாரத்துறை என்றே இருந்தது. ஆனால், அதை இறுதி செய்வதற்கு முன், பதவி ஏற்பு விழாவில், இருக்கைகளுக்கான வரிசைப் பட்டியலை பரிசோதிக்கவும், அதில் தேவையான திருத்தங்களைச் சொல்லவும் உதயநிதி, சபரீசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சென்றனர். அவர்கள் இருக்கைகளுக்கான வரிசைப் பட்டியலை கொடுத்துவிட்டு வந்தபோது, அமைச்சரவைப் பட்டியலில், ஐ.பெரியசாமியின் பெயரும், மின்சாரத் துறையில் இருந்து கூட்டுறவுத்துறைக்கு மாறியிருந்தது. இந்தத் தகவல் ஐ.பெரியசாமிக்கு தெரிந்தபிறகு, அவர் அப்படியே டென்ஷனில் மூழ்கிவிட்டார். அமைச்சர் பதவி பெற்ற அனைவரும் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். ஆனால், அதற்கு ஐ.பெரியசாமி செல்லவில்லை. அதன்பிறகு, இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட அவரது சிஷ்யர் அர.சக்கரபாணி, நேரில் சென்று ஐ.பி-யை சமாதானம் செய்து அழைத்து வந்தார்.

இப்போதைக்கு சமாதானமாகியுள்ள ஐ.பெரியசாமி, தன் மனதிற்குள் இன்னும் அதிருப்தியோடுதான் இருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை அதிருப்தியோடே ஏற்றிருக்கிறார். அந்த வகையில், தி.மு.க அமைத்துள்ள அமைச்சரவையின் முதல் அதிப்தியாளர் ஐ.பெரியசாமிதான் என்கின்றனர் உடன்பிறப்புகள்!

Also Read – நீங்கள் எவ்வளவு தீவிரமான உ.பி.!? – இந்த 5 கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க..!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top