முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தொடர்புடைய 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தி வருகிறார்கள். 2016-21 காலகட்டத்தில் மட்டும் அவர் வருமானத்துக்கு அதிகமாக 654% கூடுதலாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிந்திருக்கிறது.
கே.சி.வீரமணி
முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் வணிக வரித்துறை மட்டும் பத்திர பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அறப்போர் இயக்கம் சார்பில் ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான ஆவணங்களையும் அவர்கள் வெளியிட்டிருந்தார்கள். இந்தநிலையில், வீரமணிக்குச் சொந்தமான 28 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை சாந்தோம் அருகில் உள்ள அவருக்குச் சொந்தமான இடம் உள்பட சென்னையில் 4 இடங்களிலும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, பெங்களூரில் இருக்கும் அவருக்குச் சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரைத் தொடர்ந்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு வளையத்தில் மூன்றாவதாக கே.சி.வீரமணி சிக்கியிருக்கிறார். ரெய்டில் சிக்கும் ஆவணங்களைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள்.
அறப்போர் இயக்கம் வெளியிட்ட ஆவணங்கள்!
கே.சி.வீரமணி திருப்பத்தூரில் இருக்கும் அவரது வீட்டில் இருக்கிறார். அங்கும், மற்ற இடங்களிலும் டி.எஸ்.பி தலைமையிலான டீம் சோதனையை நடத்தி வருகிறது. அறப்போர் இயக்கம் கொடுத்திருந்த புகாரில், 2011 – 21 காலகட்டத்தின் வீரமணி வாங்கியிருந்த கடன்கள், அவருடைய பெயரிலும் குடும்பத்தினர் பெயரிலும் வாங்கிய சொத்துகளின் விவரங்கள், ஆவணங்கள் போன்றவை வெளியிடப்பட்டிருந்தன. அவருடைய சொத்து மதிப்பு 654% அளவுக்கு அதிகரித்ததாகவும் வருமானத்துக்கு அதிகமாக 90 கோடி ரூபாய் அளவுக்கு அவர் சொத்து சேர்த்திருப்பதாகவும் புகார் எழுந்தது.

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை அடுத்து திருப்பத்தூரில் இருக்கும் வீரமணி வீட்டு முன்பாக ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் வேலைகளில் அ.தி.மு.க ஈடுபடுவதற்கு இடையூறு ஏற்படுத்தவே, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த ரெய்டு நடத்தப்படுகிறது’’ என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
எஃப்.ஐ.ஆர் என்ன சொல்கிறது?

லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கையில், `01-04-2016 முதல் 31-03-2021 இடையிலான காலகட்டத்தில் குற்றம்சாட்டப்பட்ட கே.சி.வீரமணியின் சேமிப்பு ரூ.1,83,61,100 ஆக இருந்தது தெரியவந்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் அவர், அவரது தாய் உள்ளிட்ட அவரைச் சார்ந்திருப்போர் வாங்கிய சொத்துகளின் மதிப்பு இதைவிட அதிகமாக இருக்கக் கூடாது. ஆனால், இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில், 28,78,13,758 ரூபாய் மதிப்பிலான சொத்துகள், அதாவது 654% அளவுக்கு அதிகமான சொத்துகளை வாங்கியிருப்பது விசாரணையில் தெளிவாகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால், ஊழல் ஒழிப்புச் சட்டம் 1988 பிரிவு 13(2), 13 (1) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதியப்பட்டிருக்கிறது.
Also Read – உள்ளாட்சித் தேர்தல்: அ.தி.மு.க-வை உதறிய பா.ம.க – ராமதாஸின் விமர்சனம் ஏன்?
I am extremely inspired with your writing skills as neatly as with the format to your blog. Is this a paid topic or did you customize it your self? Either way stay up the excellent high quality writing, it is uncommon to see a nice blog like this one nowadays!