காங்கிரஸின் சின்னம் காளை… எம்.ஜி.ஆருக்குத் தெரியாமல் கிடைத்த இரட்டை இலை..! கட்சி சின்னங்களின் கதை

நாடு முழுவதும் இருக்கும் அரசியல் கட்சிகள் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது, அந்த கட்சிகளோட சின்னங்கள்தான்… சரி நமது நாட்டில் இருக்கும் முக்கியமான கட்சிகளுக்கு அந்த சின்னங்கள் எப்படி கிடைச்சது… அதோட வரலாறு தெரியுமா… நம்மூர் அ.தி.மு.கவோட சின்னமான இரட்டை இலையை வேறொரு கட்சி அவங்க மாநிலத்துல நடக்குற தேர்தல்ல பயன்படுத்துறாங்கன்றது தெரியுமா.. அதேமாதிரி, இரண்டு மாநிலங்களில் ஆளுங்கட்சி அளவுக்கு உயர்ந்த இரண்டு வெவ்வேறு கட்சிகள் ஒரே சின்னத்தைத்தான் இப்பவும் பயன்படுத்திட்டு வர்றாங்கன்ற தகவல் தெரியுமா.. இதுமாதிரி கட்சிகளின் சின்னங்களின் வரலாற்றைத்தான் இந்த வீடியோவுல நாம தெரிஞ்சுக்கப் போறோம்.

தேர்தல் நேரத்துல அரசியல் கட்சிகள், வேட்பாளர் பற்றிய பிரச்னைகள்ல முதன்மையா வந்து நிக்குறது சின்னங்கள் பற்றிய பஞ்சாயத்துதான். ஒரு கட்சி தேசிய கட்சியாவோ, மாநிலக் கட்சியாவோ தேர்தல் ஆணையத்தால அங்கீகரிக்கப்பட்ட பிறகுதான், அந்தக் கட்சிக்குனு தனி சின்னம் ஒதுக்கப்படும். அப்படி ஒதுக்கப்பட்ட சின்னத்தை வேறு எந்தவொரு கட்சியோ, சுயேச்சை வேட்பாளரோ பயன்படுத்தக் கூடாது. நம்மூர்ல வேட்பாளர்களை விட சின்னங்களுக்குத்தான் மவுசு அதிகம்னு சொல்வாங்க. அதனாலேயே அரசியல் கட்சிகள், தங்களோட சின்னங்களுக்கு சரியான முக்கியத்துவம் கொடுப்பாங்க.

தேர்தல் ஆணையத்தால ஒதுக்கப்படுற பல சின்னங்களையும் முதன்முதல்ல வரைஞ்சு கொடுத்தது யாருன்னு தெரியுமா… அதேமாதிரி சின்னங்கள் நடைமுறை இந்தியாவுக்கு எப்படி, யாரால் அறிமுகப்படுத்தப்பட்டுச்சுனு தெரியுமா? வீடியோவை முழுசா பாருங்க இதப்பத்தின சுவாரஸ்ய தகவல்களைப் பின்னாடி சொல்றேன்.  

சரி வாங்க, ஒவ்வொரு கட்சிக்கும் எப்படி அவங்க சின்னம் கிடைச்சதுனு பார்ப்போம்.

காங்கிரஸ்

காங்கிரஸ் - கை சின்னம்
காங்கிரஸ் – கை சின்னம்

1969 வரையில் ஒன்றிணைந்த காங்கிரஸ் கட்சியின் சின்னம் இன்னிக்கு இருக்க கை சின்னம் கிடையாது. இரட்டை காளை சின்னம்தான் அந்த கட்சியோட சின்னமா இருந்துச்சு. பிளவுபட்ட பிறகு ஸ்தாபன காங்கிரஸ் கட்சிக்கு ராட்டை நூற்கும் பெண் சின்னமும், இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு பசுவும் கன்றும் சின்னமும் ஒதுக்கப்பட்டுச்சு. ஒரு கட்டத்துல ஜனதா கட்சி, இந்திரா காங்கிரஸோடு இணைந்து 1977-ல இன்னைக்கு இருக்க கை சின்னத்தை வாங்கிருக்காங்க.

பா.ஜ.க

பா.ஜ.க
பா.ஜ.க

பாரதிய ஜனசங்கமாக இருந்தபோது, 1951 முதல் 1977 வரை அதன் சின்னமாக இருந்தது சுடர் விளக்கு. ஜனசங்கம் 1977ல ஜனதா கட்சியோடு இணைந்தபிறகு ஏர் கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. 1980ல ஜன சங்கத்தில் இருந்து பிரிந்து பாரதிய ஜனதா கட்சி தோற்றுவிக்கப்பட்டபோதுதான் அதற்கு தாமரை சின்னம் கிடைத்தது.  

திமுக

உதயசூரியன் சின்னம்
உதயசூரியன் சின்னம்

இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்தை இழக்காத கட்சி என்றால் அது தி.மு.கதான். 1949-ல் தோற்றுவிக்கப்பட்டாலும் திமுக 1957-ல்தான் முதல்முறையாக தேர்தலைச் சந்தித்தது. திமுகவுக்கு ஒதுக்கப்படும் முன்னர், 1948 வன்னியகுல சத்திரியர் கட்சியைத் தோற்றுவித்த கோவிந்தசாமி படையாச்சியிடமே உதயசூரியன் சின்னம் இருந்தது. 1951-ல் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியாக இது பெயர் மாற்றம் பெற்றது. செயலாளராக ராமசாமி படையாச்சி இருந்தார். இந்த உழவர் கட்சி 1952 தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டது. 1954ல் ராமசாமி படையாச்சி காங்கிரஸ் இணைந்துவிடவே, கட்சி கலைக்கப்பட்டது. அந்த நேரத்தில், உழவர் கட்சி என்ற கட்சியை கோவிந்தசாமி படையாச்சி தோற்றுவித்தார். அப்போது, கட்சியாக இல்லாமல் சமூக இயக்கமாக இருந்த திமுகவில் கோவிந்தசாமி படையாச்சி இணைந்து செயல்பட்டு வந்தார். உழவர் கட்சி கலைக்கப்பட்ட நிலையில், வேறு பெயரில் கட்சி, சின்னத்தை வாங்குங்கள் என கோவிந்தசாமி படையாச்சிக்கு அண்ணா அறிவுறுத்தினார். அப்படி, உழவர் கட்சிக்குத் தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னம்தான் உதயசூரியன். அப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த அன்பில் தர்மலிங்கம் உள்ளிட்ட சிலர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். 1957 தேர்தலில் திமுக வெற்றிபெற்ற பிறகு, உதயசூரியன் சின்னம் கோரி அண்ணா தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதினார். 1958 மார்ச் 2-ம் தேதி மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு, திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

அதிமுக

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

திமுகவில் இருந்து பிரிந்து எம்.ஜி.ஆர் அதிமுகவைத் தொடங்கிய பிறகு, 1973-ல் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக மாயத்தேவரை அறிவித்தார் எம்.ஜி.ஆர். அப்போது அதிமுகவுக்கு என தனி சின்னம் எதுவும் இல்லாத நிலையில், மதுரை கலெக்டரை அணுகியிருக்கிறார் மாயத்தேவர். அவர் காட்டிய 16 சின்னங்களில் இருந்த ஒரு சின்னம்தான் இரட்டை இலை சின்னம். வெற்றியைக் குறிக்கும் இரண்டு விரல்களைப் போல் இருந்த அந்த சின்னத்தை மாயத்தேவர் தேர்வு செய்தார். அதேபோல், இப்போது நாம் பார்க்கும் இரட்டை இலை சின்னமும், அக்கட்சியின் கொடியும் நடிகர் பாண்டு வரைந்து கொடுத்தவை. எம்.ஜி.ஆரே இரண்டு முறை கரெக்‌ஷன் போட்டு பாண்டுவிடம் வரைந்து வாங்கியவை அவை. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, 1989 தேர்தலில் ஜெ – ஜா அணி பிரிந்தபோது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஜானகி அணிக்கு இரட்டை புறாவும் ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டன. பின்னர், ஜெயலலிதா இரட்டை இலை சின்னத்தை மீட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சிகள்

ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சி 1964-ல் பிளவுபட்டபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கதிர் அரிவாள் சின்னத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

கட்சிகள் - சின்னங்கள்
கட்சிகள் – சின்னங்கள்

1993-ல் திமுகவில் இருந்து பிரிந்து மதிமுகவைத் தோற்றுவித்த வைகோ, ஆரம்பத்தில் உதயசூரியன் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். ஆனால், அது கிடைக்காமல் போகவே ஆரம்பத்தில் அந்தக் கட்சிக்குக் கிடைத்த சின்னம் பம்பரம் அல்ல. பின்னர்தான் அந்தக் கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைத்தது. அதேபோல், 1989-ல் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி தொடக்க காலங்களில் யானை சின்னத்தில் போட்டியிட்டது. உ.பி முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற்ற நிலையில், அந்தக் கட்சிக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்தே, பாமக மாம்பழம் சின்னத்தைக் கேட்டு வாங்கியது. 2005-ல் தொடங்கப்பட்ட தேமுதிக, 2006 சட்டமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கியது. அந்தத் தேர்தலில் கடையநல்லூர், திருநெல்வேலி தொகுதிகளில் மட்டும் மோதிரம் சின்னத்திலும் மற்ற 232 தொகுதிகளிலும் முரசு சின்னத்திலும் போட்டியிட்டது. அதன்பிறகு சந்தித்த பெரும்பாலான தேர்தல்களில் முரசு சின்னத்திலேயே போட்டியிட்டு வருகிறது. 2010-ல் சீமான் தொடங்கிய நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு வருகிறது.

2018-ல் டி.டி.வி தினகரனால் தொடங்கப்பட்ட அமமுக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பிறகு நடந்த 2019 மக்களவைத் தேர்தலில் உச்ச நீதிமன்றம் சென்று பரிசுப் பெட்டி சின்னத்தை வாங்கினார் டிடிவி தினகரன். அதேபோல், கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.  

1950-ல் தேர்தல் ஆணையத்துல எம்.எஸ்.சேத்தி-ங்குற ஓவியர் ஒருத்தர் இருந்தார். அவர்தான் பெரும்பாலான தேர்தல் சின்னங்களை முதன்முதலில் வரைஞ்சு, ஒரு அடையாளம் கொடுத்தவர். அவர் வரைஞ்ச பல சின்னங்கள் இன்னைக்கும் வரைக்கும் பயன்பாட்டுல இருக்காம். 1951-52ல நடந்த முதல் பொதுத்தேர்தல்ல சின்னங்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கலர்ல பெட்டி மட்டும் வைச்சிருந்தாங்களாம். உதாரணமா, மஞ்சள் கலர் பெட்டி காங்கிரஸ், சிவப்புப் பெட்டி நீதிக்கட்சி, உதாவும் கருநீலமும் சுயேச்சைகளுக்குனு தனித்தனி கலர்ல பெட்டிகள் வைச்சு தமிழ்நாட்டுல முதல் பொதுத்தேர்தலை தேர்தலை நடத்திருக்காங்க. 1950-ல் தேர்தல் ஆணையரா நியமிக்கப்பட்ட சுகுமார் சென்தான், பல்வேறு நாடுகளிலும் தேர்தல் நடைமுறைகளை ஆய்வு செய்து, வாக்குச் சீட்டு, சின்னங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்திருக்காரு. அதுக்குப் பிறகுதான் கட்சிகள், தங்களுக்குப் பிடித்த சின்னங்களை கேட்டு வாங்கிருக்காங்க.  

கட்சிகளுக்கு சின்னங்கள் எந்த அளவுக்கு முக்கியம்னு நீங்க நினைக்கிறீங்க. உங்க கருத்துகளை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read – பழைய திட்டத்துக்கும் அக்னிபாத் திட்டத்துக்கும் என்ன வித்தியாசம்?  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top