தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றபின்னர் மத்திய அரசை `ஒன்றிய அரசு’ என்றே குறிப்பிட்டு வருகிறது. மத்திய அரசு Vs ஒன்றிய அரசு சர்ச்சையின் பின்னணி என்ன?
தமிழகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு கடந்த மே 7-ம் தேதி பொறுப்பேற்றது. அதன்பிறகு மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வருகிறது தமிழக அரசு. முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமல்லாது அமைச்சர்கள் ஊடக சந்திப்பின்போதும் மத்திய அரசு என்று குறிப்பிடுவதைத் தவிர்த்துவிடுகிறார்கள். அதேபோல், அரசு சார்பில் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கைகளிலும் ஒன்றிய அரசு என்ற சொல்லாடலே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த மாத இறுதியில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை. மத்திய அரசுக்கென்று வாக்காளர்கள் இல்லை’ என்று பேசியிருந்தார். அதேபோல், தமிழகம் என்று குறிப்பிடாமல் தமிழ்நாடு என்றே குறிப்பிட வேண்டும் என்றும் தி.மு.க தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
இந்தியா என்பது ஒரு தனி நாடல்ல. பலமொழி பேசும் மக்கள், இனக்குழுக்கள் ஒன்றிணைந்ததுதான் இந்தியா. முதலில் இந்தியா என்பது நாடே அல்ல. அது ஒரு துணைக்கண்டம்’ என்பது தி.மு.க தரப்பின் வாதம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரி, `India shall be union of states’ என்றே தொடங்குகிறது என்பதையும் தி.மு.க தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
பா.ஜ.க எதிர்ப்பு
இத்தனை ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அரசுகள் மத்திய அரசு என்றே குறிப்பிட்டு வந்த நிலையில், புதிதாக இப்போதைய தி.மு.க அரசு இப்படி அழைக்க வேண்டிய அவசியம் என்ன என்று தமிழக பா.ஜ.க சார்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், `ஒன்றிய அரசென்றால் என்னவென்றே தெரியாது. மத்திய அரசு என்று சொல்லுங்கள்’ என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.
அதேபோல், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, `மத்திய அரசை மத்திய அரசு என்றுதான் குறிப்பிட வேண்டும். ஒன்றிய அரசு என சொல்லக்கூடாது. தற்போது இப்படி அழைப்பவர்கள், மத்திய அரசில் அங்கம்வகித்தபோது மத்திய அரசு என்றுதான் குறிப்பிட்டார்கள்’ என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இது பெரும் விவாதமாக உருவெடுத்திருக்கும் நிலையில், தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் தலையங்கம் மூலம் இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
முரசொலி தலையங்கம்
ஒன்றிய அரசு என்று உச்சரித்துவிட்டாராம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மொத்தமாக சொறிந்து கொண்டு இருக்கின்றன பிரிவினை மூளைகள்! மக்களை மதத்தால், சாதியால், நிறத்தால், பணத்தால், வர்க்கத்தால், சிந்தனையால், உடலால், உடையால், உணவால், உணர்வால் நித்தமும் பிளவுபடுத்திக் கொண்டிருக்கும் கூட்டத்திக்கு
ஒன்றியம்’ என்று சொல்வதுகூட பிரிவினைச் சொல்லாகத் தெரிகிறது. ஒன்றியம் என்பதே ஒற்றுமைச் சொல். ஒற்றுமையை ஏற்படுத்தப் பயன்படும் சொல். அவர்கள் மொழியில் சொல்வதென்றால் ஒருமைப்பாட்டை உருவாக்க ஒன்றியம் என்ற சிந்தனையால்தான் முடியும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1957 தேர்தல் அறிக்கையிலேயே `இந்திய யூனியன்’ என்றுதான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், யூனியன் என்ற சொல்லை அண்ணாவே சொல்லவில்லை, கலைஞரே சொல்லவில்லை என சிலர் வரலாறு அறியாமல் உளறிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்று முரசொலி மூலம் தி.மு.க விமர்சகர்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறது.
Also Read – இந்தியாவில் எம்.எல்.ஏ-வான முதல் திரைப்பட நடிகர் – எஸ்.எஸ்.ஆரின் அரசியல் பயணம்!