சென்னை பேஸின் பிரிட்ஜில் மாட்டுவண்டிகளில் தாளம் போட்ட கைகள், இன்று ஏரோபிளேன்களில் தாளம் போட்டு நாடு நாடாகப் போய் வாசித்துக் கொண்டிருக்கிறார். சூட்கேஸ், தண்ணீர் கேன், எவர்சில்வர் தட்டு என எந்தப் பொருளைக் கொடுத்தாலும் அருமையாக வாசிக்கும் டிரம்ஸ் சிவமணி சீக்ரெட் என்ன?
டிரம்ஸ் சிவமணி இதுவரைக்கும் வாசிக்காத இசைக்கருவி எது?
a) சூட்கேஸ் b) 20லிட்டர் தண்ணீர் கேன் c) கூல்டிரிங்க்ஸ் பாட்டில்கள்
நல்லா யோசிச்சு சொல்லுங்க. சிவமணியோட பெர்பாமன்ஸ் எல்லாம் நீங்க பாத்திருந்தா இந்தக் கேள்விக்கு உங்களுக்கு சுலபமா பதில் தெரிஞ்சிருக்கும். இந்த மணுஷன் தாளம் போடாத பொருளே இல்லை. சூட்கேஸ், தண்ணீர் கேன், கூல் டிரிங்க்ஸ் பாட்டில்னு எது கிடைச்சாலும் மனுஷன் வாசிச்சுத் தள்ளுவாரு. அவரால எப்படி அந்த மாதிரி எல்லாம் வாசிக்க முடியுதுன்னு கேட்டதுக்கு அவரே ஒரு பதில் சொல்லியிருக்காரு. அந்தப் பதிலை வீடியோவோட கடைசியில் பார்ப்போம். அவர் தலையில் கட்டும் விதவிதமான துணிகளுக்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது, அது என்ன தெரியுமா..? சினிமாவில் இசை மட்டுமில்லை, இன்னொரு ஏரியாவிலயும் சில சேட்டைகள் பண்னியிருக்கார், அது என்னனு கடைசியில் பார்ப்போம்.
சென்னை வால்டாக்ஸ் ரோடிலிருந்து கோடம்பாக்கம் வழியாகக் கிளம்பிய இந்த தாளச்சூறாவளி தாளம் போடாத நாடுகளே இன்று இல்லை. ஆனால், அவர் வாசிக்க ஆரம்பித்தது வால்டாக்ஸ் ரோடிலும் பேசின் பிரிட்ஜ் கிட்டவும் ஆறு வயசுல விளையாடிகிட்டிருக்கும் போது மாட்டுவண்டி, மேஜை, ரயில் என கைக்கு வாகாக இருக்க எல்லாப் பொருள்களிலும் தாளமடிக்க ஆரம்பித்துதான். சாவுகளில் வாசிக்கப்படும் பறையிசையும் அதன் தாளத்தையும், பேசின் பிரிட்ஜைக் கடக்கும் ரயில்களில் இருந்து எழும்பும் ரிதத்தையும் புரிந்துகொண்டதுதான் இசையைக் கற்க அவருக்கு உதவி இருக்கிறது. இப்படி ஆரம்பித்து ஏழு வயதிலேயே தானாகவே டிரம்ஸ் வாசிக்கக் கற்றுக்கொண்டார்.
சிவமணியின் தந்தை எஸ்.எம்.ஆனந்தனுமே ஒரு டிரம்ஸ் கலைஞர்தான், அவர் பழம்பெரும் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் குழுவில் வாசித்திருக்கிறார். அவருக்கோ சிவமணி இசைத்துறைக்கு வருவதில் விரும்பவில்லை. “போய் படி, படின்னு சொல்வார். எனக்கு படிப்பு வரலை. இசைதான் வந்துச்சு”னு சிரிச்சிகிட்டே சொல்வார் சிவமணி.
ஒரு நாள் அவர் அப்பா வீட்டில் இல்லாத போது, அவரோட டிரம்ஸை எடுத்து வாசிக்க ஆரம்பிச்சிருக்கார். வெளிய போன அப்பா திரும்பவந்து இவர் வாசிச்சதையே கேட்ட பிறகுதான் இவனுக்குள்ள திறமை கொட்டிகிடக்குனு வாசிக்க அனுமதி கொடுத்திருக்கார். அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்ட போது, அவருக்குப் பதிலாக கே.வி.மகாதேவன்-புகழேந்தி இசையில் டிரம்ஸ் வாசிக்கச் சென்றிருக்கிறார் சிவமணி. அந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜன் பாடுகிறார். எல்லாம் பெரிய பெரிய ஜாம்பவான்கள், வயதிலும் பெரியவர்கள், அத்தனைப் பேருக்கும் மத்தியில் பொடியனாக சிவமணி டிரம்ஸ் வாசித்திருக்கிறார். அந்தப் பாடலை அடுத்து ஒரு சண்டைக்காட்சிக்கான பின்னணி இசை, ஸோலோவாக டிரம்ஸ் வாசிக்க வேண்டும். பொடியன் வாசிப்பானா என அங்கிருந்தவர்கள் யோசிக்க இடமே கொடுக்காமல் அசத்தியிருக்கிறார்.
அந்த விபத்து சமயத்தில் அப்பாவுக்குப் பதிலாக கச்சேரிகளில் டிரம்ஸ் வாசித்திருக்கிறார் சிவமணி. அப்படி ஒரு கச்சேரியில் எஸ்.பி.பியும் பாடி இருக்கிறார். சிவமணியின் வித்தையைக் கண்டதும், எஸ்.பி.பி சிவமணியின் தந்தையிடம் “ஆனந்தன்… உன் பையன் சரியான திறமைசாலி. அவனை என்னோட ரோட் ஷோவுக்காக நான் கூட்டிட்டுப் போறேன்…“ அப்படின்னு சொல்லிட்டு சிவமணியோட திறமைக்கு சரியான பாதையைப் போட்டுக் கொடுத்தது எஸ்.பி.பிதான். அவருடைய அத்தனை நிகழ்ச்சிகளிலும் சிவமணியின் சோலோ வாசிப்புக்கு 15 நிமிடங்களை ஒதுக்கிவிடுவாராம் எஸ்.பி.பி. “பாலு அண்ணா தான் என் காட்ஃபாதர். என் வாழ்க்கையில் ஒளி ஏத்தி வச்சது அவர் தான்” அப்படின்னு பல பேட்டிகளில் மறக்காம குறிப்பிடுவார் சிவமணி.
அவர் தந்தை நலமடைந்த பிறகு, “மணியவும் கூட்டிட்டு வா” என சொல்லியிருக்கிறார்கள் கே.வி.மகாதேவனும் புகழேந்தியும். அப்படி ஆரம்பித்த சிவமணியின் திரைப்பயணம், 12 வயதிலேயே டி.ராஜேந்தருக்கும் பிறகு இளையராஜாவுக்கும் வாசிக்கக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. ராஜாவுக்கு வாசித்துக்கொண்டிருந்த காலத்தில் இங்கேயே நிக்காதே, மும்பைக்குக் கிளம்பிப் போ, உன் திறமையைக் காட்டுனு சொல்லி இருக்கார். அப்படி மும்பை போய், லூயிஸ் பேங்க்ஸ் உடன் இணைந்து பல லைவ் ஷோக்களை செய்ய ஆரம்பித்திருக்கிறார். இன்று லைவ் ஷோக்களில் செய்யும் அத்தனை மேஜிக்குகளுக்கும் ஆரம்பம் அங்குதான் நடந்திருக்கிறது.
ரோஜா மலர்வதற்கு முன்பு மொட்டாக இருந்த காலத்தில் இருந்து பொன்னியின் செல்வன் வரைக்கும் ரஹ்மானுடன் நெருங்கிப் பழகியவர் சிவமணி. ரஹ்மானுக்கும் அவருக்கும் இடையில் அவ்வளவு ஆழமான நட்பு இன்றும் தொடர்கிறது.
மோஹன்லால் நடித்த யோதா படத்தில் ஒரு காட்சியை நேபாளத்தில் படமாக்கி இருக்கிறார்கள். அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பழைய இசைக்கருவியை வாசிப்பது போல படமாக்கி இருக்கிறார்கள். பின்னணி இசை சேர்க்கும் போது அந்தக் கருவி ஒலிக்கும் சப்தத்துக்கும் நம்ம ஊர் இசைக்கருவிகள் கொடுக்கும் சப்தத்துக்கும் பெரிய வித்தியாசம் இருந்திருக்கிறது. என்ன செய்யலாம் என ரஹ்மான் யோசித்தபோது, சிவமணி அந்த சீனைக் காட்டுங்க என சொல்லியிருக்கிறார். அதைப் பார்த்துவிட்டு வெடுவெடுவென வெளியே போன சிவமணி அங்கே இருந்த பிவிசி பைப்புகளை எடுத்துக்கொண்டு வந்து, அவற்றில் ஊதி ஒரு சப்தம் எழுப்பி இருக்கிறார். அந்தக் காட்சிக்கு ஏற்ப அந்த பைப்புகளையே வைத்து சிவமணி வாசிக்க அதை அப்படியே பதிவு செய்து தன்னுடைய மேஜிக்கைக் கொஞ்சம் தூவி அந்தக் காட்சிக்கான பின்னணி இசையை முடித்திருக்கிறார் ரஹ்மான். இவங்க இரண்டு பேரோட கதைகளையும் பேசவே தனியா ஒரு வீடியோ போடனும்.
இதையெல்லாம் பார்த்தா, அவர் என்னமோ ரஹ்மானுக்கு மட்டுமே வாசிச்சதா ஒரு தோற்றம் இருக்கும். ஆனா, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா, டி.ராஜேந்தர், ஏ.ஆர்.ரஹ்மான்னு ஆரம்பித்த அவர் இசைப்பயனம் தமன் வரைக்கும் பல தலைமுறை இசையமைப்பாளர்களோட இணைந்து அவர் வேலை செய்திருக்கார்.
தமிழ் சினிமா எல்லைகளைத் தாண்டி, சர்வதேச அளவிலும் பல புகழ்பெற்ற இசையமைப்பாளர்களோட இணைந்து பல மேஜிக்குகளை நிகழ்த்தினார். Asia Electrik, Silk & Shrada என சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல பேண்ட்களிலும் கலக்குவார் சிவமணி. சர்வதேச அளவில் புகழ்பெற்ற தபேலா கலைஞர் Zakir Hussain தானே விரும்பி சிவமணியுடன் இணைந்திருக்கிறார். ஹரிஹரனுடன் சேர்ந்து கஸலை ஒரு புடி புடிப்பார், ஸாகீர் உசேனுடன் சேர்ந்து ஹிந்துஸ்தானி வாசிப்பார், குண்ணக்குடி வைத்தியநாதனுடன் சேர்ந்து கர்நாடக சங்கீதம் வாசிப்பார். நம்ம ஊர் இசை வகைகளை பாப், ஜாஸ், வெஸ்டர்ன் கிளாசிக் இசைவடிவங்களுடன் கலந்து அவர் உருவாக்கும் ஃபியூஷன்களெல்லாம் கேட்டால், ‘யோவ் யார்யா நீ, என்னயா இப்படி பிண்ணிப் பெடலெடுக்குறனு’தான் இருக்கும். பல ஆல்பங்களும், அரிமா நம்பி, கணிதன், அமளி துமளி போன்ற படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார் சிவமணி.
சிவமணியின் மனைவி Runa Rizvi-யும் ஹிந்துஸ்தானி, சூஃபி, பஞ்சாபி, கிளாசிக் என பல் துறைப் பாடகி, சிவமணியின் மகள் மிலோனா சிவமணிக்கு அப்பாவைப் போல ஒரு டிரம்ஸ் கலைஞர் ஆகவேண்டும் என்றுதான் ஆசையாம். சிவமணி ஒரு தாளம் போட்டால், அவர் வாசிக்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே இது “மாங்குயிலே… பாட்டுதானே..?” என கேட்குமளவுக்கு ஐந்து வயதிலேயே டியூனாகி இருக்கிறார்.
Also Read – சில்லா சில்லா.. அஜித் மாஸ் பாடல்கள் இதுதான்!
அவருடைய தந்தை மரணமடைந்த போது இறுதிச்சடங்கில் மொட்டையடித்த பிறகு தொப்பி அணிய ஆரம்பித்திருக்கிறார். அவருடைய அமெரிக்க வாழ் நண்பர் ஒருவர் பண்டானா துணியைக் கொடுத்திருக்கிறார். அது பிடித்துப் போக, அதையே தன்னுடைய ஸ்டைலாக அமைத்துக்கொண்டார்.
இசை மட்டுமில்லை, சிவமணியின் சேட்டைகளைப் பார்த்த டி.ஆர் தங்கைக்கோர் கீதம் படத்தில் ஒரு பாடலில் டிரம்மராகவே சிவமணியை நடிக்க வைத்திருப்பார். எஸ்.பி.பி ஒரு முறை இவனை ஒரு படத்துல நடிக்க வைக்கனும்னு சொல்ல, Padamati Sandhya Ragam என்ற தெலுங்குப் படத்தில் நடித்திருப்பார் சிவமணி. அந்தப் படத்துக்கு எஸ்.பி.பி தான் இசையமைத்தார், Life is shabby without you baby என்ற ஆங்கிலப் பாடலை எஸ்.பி.பியே எழுதி, அவரே பாடியிருப்பார் அந்தப் பாட்டில் விஜயசாந்தியுடன் டூயட் ஆடி அசத்தியிருப்பார் சிவமணி.
டிரம்ஸ் தவிர, எல்லாப் பொருட்களிலும் வாசிக்குறீங்களே எப்படின்னு கேட்டால், “சின்ன வயசுல அப்பா அவர் டிரம்ஸைத் தொடவே விடமாட்டார். போய் படினு சொல்வாரு, அவருக்குத் தெரியாம பிளாஸ்டிக் டப்பா, கேன், கிச்சன்ல இருந்து சமையல் பாத்திரங்கள், தோசை திருப்பி, நாற்காலினு எல்லாத்தையும் எடுத்து பிராக்டிஸ் பண்ணுவேன். அப்படி ஆரம்பிச்சதுதான். பொதுவாவே வாசிக்கும் போது எனக்கு ஒரு குழந்தைத் தன்மை எனக்கு வந்துடுது. அதனால, நான் எதைத் தொட்டாலும் அதுல ஒரு நாதம் வருது. அது ஒரு கிஃப்ட்னு எனக்குத் தோணுது. யாரும் இப்படி எல்லாப் பொருட்களிலும் வாசிக்குறதை யாரும் குறையா சொல்லலை.“
சிவமணியோட பெர்ஃபார்மன்ஸ்களில் மறக்க முடியாத ஒன்னுனு நீங்க நினைக்குறதை கமெண்ட்ல சொல்லுங்க.
You have observed very interesting details!
ps decent internet site.Raise range