மடம்.. மர்மம்.. மரணம்.. நித்யானந்தா கோமாளியா? குற்றவாளியா?

’நித்யானந்தாவிடமிருந்து ஒரு மெசேஜ் எனக்கு வந்தது, பார்த்ததும் அதிர்ச்சி, கடவுளாக நினைத்தவர், `நிர்வாணப்படம் அனுப்பு’ எனக் கேட்டதும் நொறுங்கிப் போனேன்… 

அவர் கால்களை அழுத்தச் சொன்னார், பிறகு மெத்தை மேல் அமரச் சொல்லி கால்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே செல்லச்சொல்லி தகாத வேலைகளை செய்யச்சொன்னார்’ என சொல்லும்போது அந்த இளைஞன் கண்களில் தெரியும் உணர்வுக்குப் பெயரில்லை… இதுபோல பல அதிர்ச்சியான புகார்கள்… 

Nithyananda
Nithyananda

அத்தனை சம்பவங்கள், அத்தனை வழக்குகள்,  ஒரு சமுத்திரத்தையே நிரப்புமளவுக்கான குழந்தைகளின் பெண்களின் ஆண்களின் கண்ணீர் என இந்த ஒரு ஆவணப்படம் பல அதிர்ச்சிக்கதைகளைச் சொல்கிறது. 

ஆயிரமாயிரம் பக்கங்களில் எழுதப்படும் துயரகாவியங்களை விட ஒரே ஒரு பெண்ணின் அழுகை கலந்த குரல் உங்களை உடைந்துவிடச் செய்யும். அப்படி சில குரல்களையும், அழுகைகளையும், அதிர்ச்சியையும் My Girl Joined the Cult என்ற Discovery+ ஆவணப்படம் காட்டுகிறது. “நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்குள் நீங்கள் காலடி வைத்ததும் என்ன நடக்கும் தெரியுமா?” என ஓர் தாயின் ஓலத்தோடு அதை நீங்கள் இந்த ஆவனப்படத்தில் பார்க்கலாம். நீங்கள் தவறவிடக்கூடாத, கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு ஆவனப்படம்.  இந்த ஆவனப்படம் என்ன சொல்கிறது, என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

இந்த ஆவணப்படத்தின் கட்டமைப்பை முதலில் பார்ப்போம். ஒரு தந்தையின் போராட்டம், தாய்களின் அழுகுரல் ஓலங்கள், உறுதியான போராட்டம், உடைந்து அழும் நபர்கள் என நித்தியானந்தாவின் ஆஸ்ரமங்களில் வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் வாக்குமூலங்களும், ஏமாந்த கதைகளும், தங்கள் குழந்தைகளின் இழப்புகளை, பசி தூக்கம் துறந்த துயர நாள்களையும், நித்தியானந்தாவின் இரட்டை முகத்தையும், மாயபிம்பங்களையும், குற்றம் சாட்டுபவர்களின் மீது தொண்டரடிப்படையின் தாக்குதல்களையும், பத்திரிகையாளர்களின் சளைக்காத போராட்டங்களையும்… கடைசியாக இந்தப் போலிசாமியார்களிடம் நம்முடைய குழந்தைகளின் வாழ்வை தொலைக்காமல் இருக்க நமக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையும் தான், இந்த ஆவணப்படம். நிகழ்காலத்தில் சம்பந்தப்பட்டவர்களின் நேர்காணலும், முந்தைய நிகழ்வுகளை அப்போதைய செய்தி, இணைய ஊடகங்களின் பதிவுகளிலிருந்தும் எடுத்து அருமையான கோர்வையாக்கி இருக்கிறார்கள். 

உங்கள் குழந்தைகள் – உங்கள் குழந்தைகள் அல்ல

அவர்கள் உங்கள் மூலம் இந்த உலகிற்கு

வந்துள்ளார்களே தவிர

உங்களில் இருந்து அல்ல

அவர்கள் உங்களுடையவர்கள் அல்ல.

Nithyananda documentary
Nithyananda documentary

கலீல் கிப்ரானுடைய இந்தக் கவிதை தான் நம் சமூகத்தின் பக்திமயமான, பெற்றோர்களுக்கான ஓர் எச்சரிக்கை கவிதை. இந்தக் கவிதையை தெரியாத, புரிந்துகொள்ளாத பெற்றோர்கள், “பக்தி மயக்கத்தில், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என சரணடையும் இடங்கள் ஆஸ்ரமங்கள்” அப்படி நித்தியானந்தாவிடம் தங்கள் குழந்தைகளைத் தொலைத்த சில பெற்றோர்களின் கதறல் இந்த ஆவணப்படம் முழுக்க ஒலிக்கிறது. ஆஸ்ரமத்தில் அவர்கள் மீது திணிக்கப்படும் வண்முறையும், பலாத்காரமும், பசி தூக்கம் மறந்து ஒரு நாளில் இருபது மணி நேரம் கூட உழைத்துக் களைத்துப் போன குழந்தைகளின் கதைகளைக் கேட்கும் போது இந்தநாட்டில் சித்திரவதைக் கூடங்களின் புதிய பெயர்கள் ஆஸ்ரமங்களோ என யோசிக்க ஆரம்பித்துவிடுவோம். 

நித்தியானந்தா என்ற பிம்பத்தின் மீது முதன் முதலில் கல்லெறிவதற்கு சரியான சான்றுகளோடு களமிறங்கிய விசிலூதிகள் (whistle blowers), அந்த சான்றுகளை ஊடங்கள் மூலம் வெளியிட்டபோது நித்தியின் தரப்பு அவர்கள் மீது எப்படி பாய்ந்து குதறியது. பத்திரிகையாளர்கள் சிலரிடம் எப்படி பதுங்கினார், சிலரிடம் எப்படி பாய்ந்தார், அவர் மீது புகார் தெரிவித்தவர்கள் மீது புகார் தெரிவிப்பது அவர்களுக்கு மன உளைச்சலைத் தருவது என அத்தனை தகிடுதத்தங்கள். அத்தனையையும் சம்பந்தப்பட்டவர்களே தோலுரித்துக் காட்டுகிறார்கள். 

கைலாசா பற்றிய பேச்சுகள் அரசல் புரசலாக அடிபடத் துவங்கிய காலத்தில் இருந்தே தமிழ்ப் பத்திரிகையாளர்களிடம் ஓர் உறுதிப்படுத்தப்படாத தகவல் வலம் வந்துகொண்டிருக்கிறது. “நீங்கள் நினைப்பதுபோல கைலாசா ஈக்வடாரிலோ அல்லது ஆஸ்திரேலியத் தீவுக்கூட்டங்களிலெல்லாம் இல்லை. அது ஒரு போலிபிம்பம். நித்தியானந்தா இந்தியாவை விட்டு வெளியேறவே இல்லை, இந்தியாவிலேயே ஒளிந்துவாழ்ந்துகொண்டுதான் இந்த வீடியோக்களை வெளியிட்டு ஏமாற்று வேலை செய்துகொண்டிருக்கிறார்” என்ற தகவல்தான் அது. இந்த ஆவணப்படமும் அந்த சந்தேகத்தை முன்வைக்கிறது, கூடவே ஒரு கேள்வியுடன். 

கணடாவைச் சேர்ந்த Sarah Landry என்ற பெண் சீடர் தொடர்ந்து யூ-ட்யுப் மற்றும் பல சமூக ஊடங்களிலும் நித்யானந்தா புகழ்பாடி வீடியோக்களாக வெளியிட்டார். ஒரு MLM நிறுவனத்தில் ஆள் பிடிப்பது போல உன்னுடைய வீடியோக்கள் மூலமாக 10,000 பேரை பதிவு செய்ய வைக்க வேண்டும்  என்று நித்தியே கட்டளையிட்டிருக்கிறார். முதலில் இது ஒரு சேவையாகத் தெரிந்திருக்கிறது. சாரா, “மா நித்ய சுதேவி” ஆக சன்யாசம் வழங்கப்பட்டு நித்தியின் முதன்மைச் சீடராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். அவர் தொடர்ந்து வெளியிட்ட வீடியோக்கள் அதிக வரவேற்பைப் பெறவே, நித்தியின் சமூக ஊடகப் பிரிவின் தலைமைப் பொறுப்பும் அவர் வசம் வந்திருக்கிறது. நித்தியின் பெண் சீடர்களை வைத்து தொடர்ந்து வீடியோக்களாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வெளி நாட்டினர் மத்தியில் நித்தியை COOL DUDE பிம்பத்துக்கு உயர்த்தும் வேலையை சாரா செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரை நிர்வாணப்படங்களை அனுப்பச் சொல்வது, பாலியல் ரீதியாகத் துண்புறுத்துவது என்றெல்லாம் நித்தி எல்லை மீறி இருக்கிறார், ஆஸ்ரமத்தில் இருந்த குழந்தைகள் மீது தொடுக்கப்பட்ட வண்முறை அவர் கண்களைத் திறந்து நித்தியை விட்டு விலகி இருக்கிறார், இந்த ஆவணப்படத்தில் நித்தி குறித்த பல உண்மைகளை அப்பட்டமாக தோலுரித்துக்காட்டியவரும் அவரே.

சில ஆண்டுகளுக்கு முன்பு நித்தியின் பெண் சீடர்கள் தொடர்ந்து வீடியோக்களாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்கள் அல்லவா, அப்போது நித்தியானந்தா மீது பொறாமைத் தொணியில் கிண்டலாக சில மீம்களாக அந்த நிகழ்வுகளை நாம் கடந்து சென்றோம். மீம்கள் மூலமாக நித்தியை ஒரு கோமாளியாக சித்தரித்து நித்தியின் தீமைகளின் வீரியத்தை நாம் அனைவரும் தெரியாமலேயே நம்மை உணராமலே குறைத்துவிட்டோம். this me residing me talking to me through this me என்ற உளறல்களும், விஞ்ஞானத்தை வீம்பாக வம்பிழுத்த வீடியோக்களுமாக நித்தியின் பிம்பம் ஒரு கோமாளியாக Lesser Evil ஆக அந்தச் சமயத்தில் உருமாறி நின்றது. அந்த வேலையைச் செய்ததும், அந்த காமெடி வீடியோக்களை வெளியிட்டதுமே நித்தியின் சமூக வலைத்தள பிரிவுதான் என இந்த ஆவணப்படம் பிரகடணப்படுத்துகிறது. 

Nithyananda
Nithyananda

இந்த வீடியோக்களின் மூலம் நாம் திரித்து விட்ட அளவுக்கு நித்தியானந்தா ஒரு Lesser Evil-ஆ, கோமாளியா..? அந்த சமயத்தில் வெளியான நித்தி பெண் சீடர்களின் வீடியோவில் இருந்த இரண்டு சிறுமிகளின் இன்றைய அதிர்ச்சிகரமான நிலை என்ன தெரியுமா? இந்த ஆவணப்படத்தை முழுமையாக பாருங்கள், உங்களுக்குப் பதில் கிடைக்கும். கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருக்கும். 

நித்தியின் ஆசிரமத்திற்குள் காலடி எடுத்து வைத்ததுமே வெளி உலகத்தை சுத்தமாக மறந்து சுயத்தை இழந்து அவர்கள் கட்டளையிடும் அத்தனை வேலைகளையும் தன்னை மறந்து உடன் வந்த தாயையும் மறந்து ஒரு நாளில் 20 மணி நேரம் உழைத்துக் களைத்தே இறந்து போன ஒரு பெண்ணின் தாயுடைய கண்ணீர் சொல்லும் நித்தி நாம் சித்தரித்ததைப் போல ஒரு கோமாளி அல்ல என்பதை. 

பாதிக்கப்பட்ட சின்னஞ்சிறு குழந்தைகளும் கதறி அழும் அவர்களுடைய பெற்றோர்களும் சுமந்து நிற்கும் வலிகளுக்கும் பதில் என்ன? நித்தியானந்தா ஒரு சிறு புள்ளிதான், இன்னும் ஆயிரமாயிரம் புள்ளிகள் உருவாகும். நாளை வேறு ஓர் ஆனந்தா வரலாம், வேறு சில ஆஸ்ரமங்கள் முளைக்கலாம். இன்னும் நூறு குழந்தைகள் பாதிக்கப்படலாம். நம் குழந்தைகளுக்கு நாம் என்ன மாதிரியான சமூகத்தை விடப்போகிறோம்?

Also Read – பழைய திட்டத்துக்கும் அக்னிபாத் திட்டத்துக்கும் என்ன வித்தியாசம்?  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top