நட்சத்திரக் கோயில்கள் – அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய கோயில்!

நட்சத்திரங்கள் என்பது நிலவு சார் அளவு ஆகும். ராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பு என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். ஒவ்வொரு நட்சத்திரங்களும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மனிதன் பிறக்கும் பொழுதே அவனுடன் சேர்ந்து அவனுக்குரிய ராசியும் நட்சத்திரங்களும் தோன்றிவிடுகின்றன. வானில் திங்கள் நிற்கும் நாள் மீன் கூட்டம், அப்பொழுதுக்கான நட்சத்திரம் என எடுத்துக்கொள்ளப்படுவது ஐதீகம்.

எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன், ராசிச் சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப்பிரிவில் இருந்தால் அந்த நேரத்துக்குரிய நட்சத்திரமாக ரேவதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. வாழ்வில் இருள் நீங்கி ஒளிபொருந்திய சூழல் உருவாக தங்களின் நட்சத்திரங்களுக்கு உரிய கோயில்களுக்குச் சென்று வழிப்பட்டு வந்தால் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இன்று அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கோயிலில் வழிபட வேண்டும், என்னென்ன இடங்களைத் தவறாமல் தரிசிக்க வேண்டும் என்பதைப் பற்றித்தான் நாம் இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

அஸ்தம் நட்சத்திரம்
அஸ்தம் நட்சத்திரம்

அஸ்தம் நட்சத்திரம்

அஸ்த நட்சத்திரமானது, சந்திரனுக்கு உரிய நட்சத்திரமாகும். சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்த அஸ்த நட்சத்திரகாரர்கள் சந்திரனைப் போலவே கற்பனை திறன் மிகுந்து காணப்படுவார்கள். புதனுக்கு உரிய சாதுரியமும் இவர்களிடம் மிகுந்து காணப்படும். அஸ்தம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிபதியாய் சந்திரனும், இராசி அதிபதியாய் புதனும், நவாம்ச அதிபதியாக முதல் பாதத்தில் செவ்வாயும், இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், மூன்றாம் பாதத்தில் புதனும், நான்காம் பாதத்தில் சந்திரனும் வலம் வருகின்றன. இந்நட்சத்திரக்காரர்கள் அதிதேவதையாக ஸ்ரீ காயத்ரி தேவியையும், வெங்கடேச பெருமானையும் வணங்கி வழிப்பட்டு வர நன்மைகள் உண்டாகும். அஸ்த நட்சத்திரக்காரர்கள் கோயில்களுக்கு செல்லும் போது வெண்தாமரை மலர்களைக் கொண்டு வழிபாடு செய்து வர நன்மைகள் உண்டாகும் என்பது நம்பிக்கை. அஸ்த நட்சத்திரம் கை அல்லது உள்ளங்கை போன்ற வடிவங்கள் கொண்டதனால் இந்த வடிவத்தை இந்நட்சத்திரகாரர்கள் தொழில் மற்றும் வணிகத்திற்க்கு லோகோவாக பயன்படுத்திக்கொண்டால் நன்மைகள் பல உண்டாகும். அத்துடன் விநாயகப் பெருமான் பிறந்த நட்சத்திரமாகவும் அஸ்தம் நட்சத்திரம் விளங்குகிறது. அஸ்த நட்சத்திரகாரர்கள் தங்களுடைய அதிர்ஷ்டத்தை பெருக்கி கொள்ள வாகன தானம் செய்தல் வேண்டும். இந்நட்சத்திரகாரர்கள் எந்தவித ஆதாயமும் பிரதி பலனும் எதிர் பார்க்காமல் பிறருக்கு உதவிகளை செய்து வருவர்.

அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் பிரதோஷ மற்றும் பௌர்ணமி நாட்களில் அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கி வழிப்பட்டால் துன்பங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம். இந்நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய தோஷங்கள் நீங்க ஏழைகளுக்கு மாதம் ஒருமுறை தங்கள் கைகளால் செய்த உணவினை அன்னதானம் செய்தல் வேண்டும். இவ்வாறு செய்வதினால் தோஷங்கள் நீங்குவதோடு செல்வ வளம் மிகும். இந்நட்சத்திரகாரர்கள் திங்கட்கிழமைகளில் வெள்ளை நிற ஆடைகள் அணிவதனால் அதிர்ஷ்டம் பெருகும். அத்துடன், வெள்ளை நிற ஆடைகளை ஏழை எளியோருக்கு தானமாக வழங்கி வர பல்வேறு நன்மைகள் உண்டாகும்.

ஸ்ரீகிருபாகூபரேஸ்வரர் ஆலயம்
ஸ்ரீகிருபாகூபரேஸ்வரர் ஆலயம்

ஸ்ரீகிருபாகூபரேஸ்வரர் ஆலயம்

ஸ்ரீ கிருபாகூபாரேஸ்வர் திருக்கோயிலானது, நாகப்பட்டினத்தை அடுத்த குத்தாலம் பகுதியில் அமைந்துள்ளது. இத்தலமானது அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த கோயிலாக பார்க்கப்படுகிறது. அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது கட்டாயம் சென்று வர வேண்டிய திருத்தலாமாக ஸ்ரீ கிருபாகூபாரேஸ்வரர் ஆலயம் விளங்குகிறது. எத்தகைய தவறுகளுக்கும் மன்னிப்பு அளிக்கும் இறைவனாக இத்தல இறைவர் விளங்குகிறார். பார்வதி தேவி, ஒரு முறை சிவபெருமான் இவ்வுலகினை எவ்வாறு இயக்குகிறார் என்பதைத் தெரிந்துக் கொள்ள நினைத்தார். கேள்விக்கான பதிலை சிவபெருமானிடமே பார்வதி தேவி கேட்க, சிவபெருமான் திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்தினார். பார்வதி தன்னை மறந்து சிவபெருமானுடைய கண்களை பொத்தும்படி செய்தார். பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை மறைத்த அந்த நொடி உலகத்தின் இயக்கமானது நின்று போனது. இதனை கண்டு திகைத்து நின்ற பார்வதி தேவி தன்னுடைய தவறுக்கு வருந்தி சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்கவே, சிவபெருமான் உன்னுடைய கரத்தினால் என் கண்களை மறைத்து உலகத்தினை இருள செய்தாய் இப்பொழுது நான் என் கரத்தினுள் உள்ள ஹஸ்தாவர்ண ஜோதியில் மறையப்போகிறேன், நீ பசுவாக மாறி என்னைக் கண்டுபிடித்து என்னுடன் வந்து சேர்வாயாக என்று கூறிவிட்டு மறைந்து விட்டார். சிவபெருமானை காணாத பார்வதி தன் சகோதரனான திருமாலுடன் பசு உருவமாக மாறி ஹஸ்தாவர்ண ஜோதியை தேடி அழைந்தார். சிவபெருமான் பார்வதி தேவி மீது கிருபைக் கொண்டார். ஒரு அஸ்தம் நட்சத்திர நாளில் ஹஸ்தாவர்ண ஜோதியானது தோன்றியது. இந்த ஜோதியை கோமளீய ஜோதி என்றும் கூறுவர். பார்வதி தேவி மனம் மகிழ்ந்து அந்த ஜோதியுடன் ஐக்கியமானாள். சிவபெருமான் பார்வதி தேவிக்கு கிருபை செய்த இந்த சம்பவத்தின் அடிப்படையில் கோமலில் ஒரு கோயிலானது எழுப்பப்பட்டது.

ஸ்ரீகிருபாகூபரேஸ்வரர் ஆலயம்

பார்வதிதேவிக்கு கிருபை செய்த சிவபெருமானுக்கு ஸ்ரீ கிருபாகூபாரேஸ்வரர் என்றும் அம்பாளுக்கு அன்னபூரணி என்றும் பெயரானது சூட்டப்பட்டது. மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, திருக்கார்த்திகை ஆகிய நாட்களில் இத்தலமானது பிரசித்தி பெற்று விளங்குகிறது. இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் நடையானது காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறக்கப்படுகிறது. இத்திருத்தலத்துக்கு வரும் பக்தர்கள் தங்களின் பிராத்தனைகள் நிறவேற பசு மற்றும் கன்றுவுடன் வந்து கோவிலை வலம் வந்து வணங்கி வழிபடுகிறார்கள்.

அஸ்தம் நட்சத்திரகாரர்கள் இந்நட்சத்திர நாளில் கொழுக்கட்டை, லட்டு, வடை ஆகியவற்றைக் கொண்டு இத்தல இறைவனான கூபாரேஸ்வரருக்கும், அன்னபூரணி அம்பாளுக்கும் நைவேத்யம் செய்து இருகரம் கூப்பி வணங்கி வந்தால் இறைவனின் பரிபூரண அருளை பெறமுடியும் என்பது நம்பிக்கை. திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் இத்தல இறைவனை வணங்கி வழிப்பட்டு வர வாழ்வில் பல நன்மைகள் உண்டாகும்.

Also Read – நட்சத்திரக் கோயில்கள் – உத்திரம் நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய கோயில்!

எப்படி போகலாம்?

ஸ்ரீ கிருபாகூபாரேஸ்வரர் திருத்தலமானது, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள குத்தாலம் பகுதியில் அமைந்துள்ளது. குத்தாலத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் கோமல் என்ற பகுதியிலேயே இறைவன் எழுந்தருளியுள்ளார். சென்னை, திருச்சி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மதுரை, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் நாகப்பட்டினத்துக்கு இயக்கப்படுகிறது. இத்திருத்தலத்துக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் நாகப்பட்டினம் ரயில் நிலையமாகும். அருகில் உள்ள விமான நிலையம் திருச்சி விமான நிலையமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top