கிறிஸ் கெய்ர்ன்ஸ்

Chris Cairns: கொண்டாடப்பட்ட ஆல்ரவுண்டர் திவாலான நிலைக்குத் தள்ளப்பட என்ன காரணம்?

நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான கிறிஸ் கெய்ர்ன்ஸ் இதய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஆஸ்திரேலிய மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகிறார். ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட கிரிக்கெட்டரான கிறிஸ் கெய்ர்ஸ் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட என்ன காரணம்?

நியூசிலாந்து அணிக்காக 1989-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை விளையாடியவர் கிறிஸ் கெய்ர்ன்ஸ். பேட்டிங்கிலும், வேகப்பந்து வீச்சிலும் கலக்கிய அவர், நியூசிலாந்தின் ஆல்டைம் ஃபேவரைட் ஆல்ரவுண்டர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். நியூசிலாந்து அணிக்காக 62 டெஸ்ட், 215 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். டெஸ்டில் 3,320 ரன்கள் மற்றும் 218 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் அவர், ஒருநாள் போட்டிகளில் 4,950 ரன்கள், 201 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். 2000-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஷிப் டிராஃபி இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கெதிராக ஆட்டமிழக்காமல் இவர் குவித்த 102 ரன்கள், நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியமான காரணமாக அமைந்தது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து 2004-ல் ரிட்டையர்டான கிறிஸ் கெய்ர்ஸ், 2006-ல் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

கிறிஸ் கெய்ர்ன்ஸ்
கிறிஸ் கெய்ர்ன்ஸ்

விவகாரமான ஐ.சி.எல்!

ஓய்வுக்குப் பிறகு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார் கெய்ர்ன்ஸ். விர்ச்சுவல் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒன்றை சொந்தமாக நிறுவி, இணைய வழியில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 2010-ல் துபாய் சென்று வைர வியாபாரம் செய்தார். 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.சி.எல் தொடரில் சண்டிகர் லயன்ஸ் அணியின் கேப்டனாகக் களமிறங்கினார். ஐ.சி.எல் தொடரில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து, பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகினார்.

கிறிஸ் கெய்ர்ன்ஸ்
கிறிஸ் கெய்ர்ன்ஸ்

இதனால், ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்தின் லிஸ்டில் இடம்பெற்றிருந்த கிறிஸ் கெய்ர்ன்ஸின் பெயரை அப்போதைய ஐபிஎல் சேர்மன் லலித் மோடி நீக்கினார். கெய்ர்ன்ஸ் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ட்விட்டரில் லலித் மோடி பதிவிட்டதை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். 2009-ல் லலித் மோடிக்கு எதிரான வழக்கில் 1,46,000 அமெரிக்க டாலர்கள் இழப்பீடாகப் பெற்றார். மறுபுறம் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டில் இருந்து வெளியே வர நீண்ட சட்டப்போராட்டத்தையும் லண்டன் Southwark Crown நீதிமன்றத்தில் நடத்தினார். ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த இந்த வழக்கில் கிறிஸ் கெய்ர்ன்ஸுக்கு எதிராக பிரெண்டன் மெக்கல்லம் சாட்சி சொன்னார். அதேபோல், மற்றொரு வீரரான வின்சென்ட் லூவும் அவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார். ஆனால், மேட்ச் பிக்ஸிங்குக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என தொடர்ந்து மறுத்துவந்த கெய்ர்ன்ஸ், 2015-ல் அந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

நீண்ட சட்டப்போராட்டத்தால் தனது சேமிப்பு முழுவதையும் இழந்த அவர், ஒரு கட்டத்தில் குடும்பத்தின் அன்றாட செலவுகளை ஈடுகட்டவே மிகவும் சிரமப்படும் சூழல் இருந்தது. மேட்ச் பிக்ஸிங் புகார் கொடுத்த மன உளைச்சலால் ஒரு கட்டத்தில் பல்வேறு உடல் உபாதைகளால் சிரமப்பட்டார். குடும்பத்தின் அன்றாடத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக ஆக்லாந்தில் இருக்கும் பேருந்து பணிமனை ஒன்றில் பேருந்துகளை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். ஒரு மணி நேரத்துக்கு 17 டாலர்கள் ஊதியம் பெறும் வேலையைச் செய்து குடும்பத்தின் அன்றாட செலவுகளை ஈடுகட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் மனைவி மெலனியா குழந்தைகளுடன் வசித்து வந்த அவருக்குக் கடந்த வாரம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதய ரத்த நாளத்தில் ஏற்பட்ட பிரச்னையால் திடீரென மயங்கி விழுந்த அவரை, கான்பெராவில் இருக்கும் செயிண்ட் வின்செண்ட் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர் மேல்சிகிச்சைக்காக சிட்னி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நலன் தேறி வர ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

கிறிஸ் கெய்ர்ன்ஸ்
கிறிஸ் கெய்ர்ன்ஸ்

2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றில் எழுதிய கிறிஸ் கெய்ர்ன்ஸ், “ஆறு ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். என்னிடம் பணம் எதுவும் மிச்சமில்லை. ஆனால், என் மீது எந்தவொரு குற்றமும் இல்லை என்பதை நிரூபிப்பதற்காகக் கடைசி வரை போராடுவேன். பின்வாங்க மாட்டேன். என் மீது குற்றம்சாட்டியவர்களின் அன்றாட வாழ்வில் இந்த ஆறு ஆண்டுகளில் எந்தவொரு மாற்றமும் இல்லை. அவர்களுக்கு நிறையவே சம்பளம் கிடைக்கிறது. மாறாக, என்னுடைய நிலை தலைகீழாக இருக்கிறது. இரு தரப்பையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்பதே என்னுடைய தரப்பில் நான் முன்வைக்கும் கோரிக்கை’’ என்று எழுதியிருந்தார்.

Also Read – CSK: லேண்டிங் அப்ரூவலுக்காகக் காத்திருக்கும் சி.எஸ்.கே – யு.ஏ.இ புறப்படுவது எப்போது? #IPL2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top