அப்பா கேரக்டர்கள்
தமிழ் சினிமால அப்பா கேரக்டர்கள் நடிப்பதற்கென்றே அளவெடுத்து செஞ்ச சில பேர் இருப்பாங்க. எப்படி நாம நிஜத்துல அப்பாக்களை பெருசா செலிபிரேட் பண்றதில்லையோ அந்த மாதிரிதான் இந்த அப்பா கேரக்டர்ல நடிக்கிறவங்களையும் நாம கண்டுக்கிட்டதே இல்லை. சமீபமா அப்பா கேரக்டர்ல அசத்திட்டு வர்ற சிலரை மென்சன் பண்ணி ‘சார்.. சூப்பரா பண்றீங்க சார்’னு கைகொடுக்குற ஒரு சின்ன வாய்ப்பா நாம இந்த வீடியோவை யூஸ் பண்ணிக்கலாம்..!
ஜெயப்பிரகாஷ்
“நம்ம பசங்களுக்கு நாமதான் சார் ரோல்மாடல்” என்று பசங்க படத்தின் சொக்கலிங்கம் வாத்தியாராக இவர் சொன்ன வரிகள் எல்லா அப்பாக்களுக்குமே ஒரு வேதவாக்கு. வாத்தியாருக்கே உரிய தோரணையில் ‘என் மகனைவிட உங்க மகன் டேலண்ட் சார்..’ என்று எதிர்வீட்டுக்காரரிடம் சொல்லும் கேரக்டருக்கு செம்ம வெயிட் கூட்டியிருப்பார் ஜெயப்பிரகாஷ். சினிமா தயாரிப்பாளராக இருந்தவரை தொண்டன் படம் மூலம் நடிகராக்கினார் சமுத்திரக்கனி. ஒன்றிரண்டு படங்கள் நடித்திருந்தவருக்கு பளீச் அறிமுகம் கொடுத்தது ‘பசங்க’. அதற்குப் பிறகு ஜாலியான அப்பா, சீரியஸ் அப்பா என்று எல்லா கேரக்டரிலும் கலக்கினார் ஜெயப்பிரகாஷ்.
மாரிமுத்து
பொண்ணு லவ் பண்ற பையன் வீட்டு விஷேசத்துக்கு வந்திருக்கான்னு தெரிஞ்சு அவனை அடிச்சு அவமானப்படுத்திவிட்டு ‘நீயெல்லாம் இங்க வரலாமாடே’ என்று கோபம் காட்டுவது, பிறகு க்ளைமேக்ஸில் ‘நாங்க உனக்கு இவ்வளவு பண்ணிருக்கோம்.. நீ ஏன் எதையுமே என் பொண்ணுகிட்ட சொல்லல’ என்று தன் இயலாமையை வெளிப்படுத்தும் அப்பாவாக பரியேறும் பெருமாள் படத்தில் நடித்திருப்பார் மாரிமுத்து. அரண்மனைக்கிளி படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டராக சினிமாவுக்குள் வந்தவர் கண்ணாலே கண்ணாலே, புலிவால் படங்களை இயக்கியிருக்கிறார். வாலி படத்தில் இருந்து நடித்துக்கொண்டிருக்கிறார். ஜீவா படத்தில் விஷ்ணு விஷாலுக்கு அப்பாவாக வந்திருப்பார். எப்போதும் தன் மகனுக்கு சப்போர்ட் பண்ணும் சார்லியிடம் ‘என் பையன் வாழ்க்கைல தலையிடாதீங்க’ என்று கோபமாக திட்டிவிட்டு மீண்டும் ‘என்னை மன்னிச்சிருங்க’ என்று கலங்கும் இடத்தில் மிரட்டியிருப்பார் மாரிமுத்து.
இளவரசு
‘நிலைக்கு வாங்குன மாலையை கழுத்துல போட்டு ஏமாத்துறான்… இவன் எனக்கு புள்ளையே இல்ல’ என்று எகிறிவிட்டு அடுத்த சீன்லயே மகனுக்கு ஒரு ஆபத்து என்றதும் ‘என் புள்ளை மேலயே கைவைக்குறியா..’ என்று டிரான்ஸ்ஃபர்மேசன் காட்டும் ஜாலி அப்பாவாக ‘களவாணி’ படத்தில் கலக்கியவர் இளவரசு. எந்நேரமும் புள்ளைய திட்டிகிட்டே இருப்பதில் அப்படியே நம்ம ஊர் அப்பாக்களை உரித்து வைத்திருப்பார். பேசுறதெல்லாம் சீரியஸா இருக்கணும், ஆனா ஆடியன்ஸ்க்கு காமெடியா தெரியணும் அப்படி ஒரு அப்பா கேரக்டர் எழுதினால் முதல் சாய்ஸ் இளவரசுதான். இதற்கு இவர் நடித்த பல படங்களை உதாரணமாக சொல்லலாம். இதற்கு முன் பார்த்தவர்கள் இயக்குநர்களாக இருந்து நடிகரானவர்கள் இவர் கேமராமேனாக இருந்து நடிகராக வந்தவர்.
ஜீவா ரவி
இவர் கிட்டத்தட்ட 50 படங்கள் நடித்திருக்கிறார். அதில் பாதி படங்களில் அப்பா கேரக்டர். மீதி படங்களில் போலீஸ் கேரக்டர். அந்தளவிற்கு அப்பா கேரக்டருக்கென்றே அளவெடுத்து செய்த முகம் இவருடையது. பெரும்பாலும் ஹீரோயினுக்கு அப்பாவாகத்தான் நடித்திருக்கிறார். மிடில்க்ளாஸ் குடும்பத்து ஹீரோயினுடைய அப்பா என்றால் எல்லா இயக்குநர்களுக்கும் சார்தான் முதலில் மைண்டுக்கு வருவார்போல. பெரும்பாலும் இவருக்கு சோகமான கேரக்டர்களே வந்திருந்தாலும் எல்லாத்திலும் இயல்பான நடிப்பால் கேரக்டருக்கு நம்பகத்தன்மை கொடுத்திருப்பார். கனா காணும் காலங்கள் தொடர் மூலம் நடிக்க வந்தவர் சீரியல், சினிமா இரண்டிலும் பட்டையைக் கிளப்புகிறார்.
மேத்யூ வர்கீஸ்
மிடில் க்ளாஸ் ஹீரோயினுக்கு ஜீவா ரவி என்றால் ஓரளவு வசதியான ஹீரோயின் என்றால் அப்பா கேரக்டருக்கு இவரைத்தான் கூப்பிடுவார்கள். இவர் பெயர் மேத்யூ வர்கீஸ் ஆனால் எல்லாருமே இவரைக் கூப்பிடுவது ‘மது அப்பா’ என்றுதானாம். அந்தளவிற்கு மேயாதமான் படத்தில் சின்ன சின்ன எக்ஸ்பிரசன்கள் மூலம் மனதில் நின்ற அப்பா கதாபாத்திரம். இவர் கொஞ்சம் வித்தியாசமாக சாப்ட்வேர் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவின் அப்பா. தமிழ் சினிமாவின் அப்பா கேரக்டர்-களிலேயே இவருக்கு ஒரு தனி இடமிருக்கு.
ஆடுகளம் நரேன்
“இந்த லேப்டாப்பை திருப்பிக் கொடுத்துட்டு உனக்கு பிடிச்ச கேமரா வாங்கிக்கோ” என்று நெகிழ்ந்து கலங்கும் ‘நண்பன்’ அப்பாவை இந்த லிஸ்ட்டில் தவிர்க்க முடியுமா? பிள்ளை மீது இருக்கும் அக்கறையால் கண்டிப்பாக நடந்துகொள்ள வேண்டும். அதே நேரம் அவனுடைய திறமைக்கு ஏற்ற வேலை செய்யலைனா செத்திருவேன்னு வந்து நிற்கும் மகனின் நிலை கண்டு கண்ணீர் விட வேண்டும் என்று இரண்டையும் லட்டு மாதிரி செய்திருப்பார் ஆடுகளம் நரேன். இந்தப் பக்கம் இப்படினா இன்னொரு பக்கம் மகளிடம் இல்லாத திறமையை இருப்பதுபோல காட்டிக்க வேண்டிய ஜாலி டாடியாக ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வில் அதகளம் செய்திருப்பார். நையாண்டி, தேசிங்குராஜா, புலி படங்களிலும் அப்பா கேரக்டரில் அசத்தியிருப்பார் ஆடுகளம் நரேன்.
Also Read – தமிழ் சினிமா பார்த்து நிஜத்துல என்னலாம் பண்ணியிருக்கீங்க?
அழகம்பெருமாள்
மனைவியை பறிகொடுத்துவிட்டு சிங்கிள் ஃபாதராக பெண் குழந்தையை வளர்க்கும் அப்பாவாக நானும் ரௌடிதான் படத்தில் அசால்டாக நடித்திருப்பார் அழகம் பெருமாள். டும் டும் டும், ஜூட், உதயா படங்களை இயக்கிவர் அழகம் பெருமாள். நடிக்க வந்தபிறகு இவருக்கு கிடைக்கிற ரோல்களையெல்லாம் சிக்ஸராக தெறிக்கவிடுவார். அதிலும் அப்பா கேரக்டர் என்றால் இவருக்கு அல்வா சாப்பிடுவது போல. சமர், யட்சன், ஹீரோ படங்களிலும் அப்பாவாக நடித்திருப்பார். புதுப்பேட்டை படத்தில் அரசியல்வாதியாக இருந்தாலும் அதிலுமே பெண்ணின் அப்பாவாக ஒரு சீனில் மிரட்டியிருப்பார். இவர் தமிழ் சினிமா அப்பா கேரக்டர்கள்-லேயே தனி ரகம்.
தமிழ் சினிமாவில் அப்பா கேரக்டர்கள் என்பது சமுத்திரக்கனி, பிரபு, சத்யராஜ், பிரகாஷ்ராஜ் என்று பலரும் வலம் வரும் ராஜபாட்டை. இவர்களுக்கு ஆல்ரெடி புகழ் வெளிச்சம் போதிய அளவிற்கு கிடைத்திருப்பதால் அவர்களை இந்த லிஸ்ட்டில் சேர்க்கவில்லை. வேறு யாரையாவது மிஸ் பண்ணியிருந்தால் கமெண்டில் சொல்லுங்கள்.