தமிழ் மக்களின் ஃபேவரைட்… சாலமன் பாப்பையா கதை!

சமய சொற்பொழிவாகவும் எலைட் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாகவும் இருந்த பட்டிமன்ற மேடைகளில் சாமானிய மக்களின் அன்றாட வாழ்வையும் பேச வைத்த புகழுக்குரியவர் சாலமன் பாப்பையா. தமிழறிஞர், இலக்கிய விரிவுரையாளர், பட்டிமன்ற பேச்சாளர், நடுவர், தமிழாசிரியர் எனப் பன்முகம் காட்டும் வித்தகர். `அன்புத் தாய்மார்களே… அருமைப் பெரியோர்களே’ என இவர் விளிக்கத் தொடங்கியதுமே கூட்டம் ஆர்ப்பரிக்கத் தொடங்கிவிடும். யார் இந்த சாலமன் பாப்பையா… அவரது பட்டிமன்றப் பயணம் தொடங்கியது எப்போது என அவரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைத்தான் இந்த வீடியோவில் நாம் பார்க்கப்போகிறோம்.  

Solomon Pappiah
Solomon Pappiah

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சாத்தங்குடி கிராமத்தில் 1936-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி பிறந்தவர் சாலமன் பாப்பையா. சுந்தரம் – பாக்கியம் தம்பதியின் 12 குழந்தைகளில் 9-வதாகப் பிறந்தவர். பொருளாதார சூழல் சரியில்லாத நிலையில், சிறுவயதிலேயே இவரது குடும்பம் மதுரைக்கு குடிபெயர்கிறது. அங்கே மெஜிரா கோட்ஸ் மில்லில் இவரது தாயும் தந்தையும் வேலைக்குச் சேர்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட தாய், உடல்நிலை மோசமடையவே வேலைக்குப் போக முடியாத நிலை. இவரது குடும்பத்திலேயே எஸ்.எஸ்.எல்.சி படித்த முதல் நபர் பாப்பையாதான்.

ரிசல்ட் வந்த அன்று, இவரது வீட்டுக்கு வந்த ஏம்ஸ் என்கிற ஆசிரியர் இவரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விருந்து வைத்திருக்கிறார். அவரை சிம்மக்கல்லில் பஸ் ஏற்றிவிடும்போது, நாளை அமெரிக்கன் காலேஜ் கேட்டுக்கிட்ட வந்து எனக்காக வெயிட் பண்ணு என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். எதற்காக வரச்சொல்கிறார் என்றே தெரியாமல் மறுநாள் அமெரிக்கன் காலேஜூக்குச் சென்ற இவரை, ஆசிரியர் கல்லூரியில் அட்மிஷன் போடுகிறார். இவரைப் போலவே அமெரிக்கன் கல்லூரியில் பீஸ் கட்ட முடியாமல் கஷ்டப்பட்ட ஒரு மாணவருக்கு இவர் உதவியிருக்கிறார். பின்னாட்களில் தான் பெறாத மகன் என்னும் அளவுக்கு இவருடன் நெருக்கமான அந்தப் பிரபலம், பட்டிமன்றத்திலும் பேச வந்து இவரது கேங்கிலேயே ஐக்கியமானார். அவர் புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளரான ராஜாதான்.

Raja
Raja

குடும்ப சூழலால் மெஜூரா கோட்ஸில் கிளார்க் வேலை வாங்கித் தருவதாகக் கூறியிருந்த தந்தையிடம் மெல்ல இந்த விஷயத்தைத் தயங்கித் தயங்கிச் சொல்லியிருக்கிறார். காலேஜ் படிக்க வைக்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லைப்பா.. இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார் தந்தை. உறவினர் ஒருவரின் உதவியோடு அங்கு பி.ஏ தமிழ் படித்த அவர், பின்னர் தியாகராசர் கல்லூரியில் எம்.ஏ தமிழ் முடித்திருக்கிறார். தமிழகத்தில் முதல்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட முதுகலை தமிழ் பாடப்பிரிவில் பட்டம் பெற்ற முதல் பேட்ச் இவர்களோடது.

உலகெங்கிலும் 6,000-த்துக்கும் மேற்பட்ட பட்டிமன்ற மேடைகளில் கலந்துகொண்டிருக்கும் சாலமன் பாப்பையா, முதன்முதலில் நடுவராகப் பேசிய பட்டிமன்றத்தின் தலைப்பு என்ன தெரியுமா… அதைத் தெரிஞ்சுக்க வீடியோவோட இறுதிவரை கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..

Also Read – வாழ்க தமிழ், வளர்க இங்கிலீஷ்… வடிவேலு அரசியல் தக்லைஃப் சம்பவங்கள்!

அதன்பின்னர் பல வேலைகளுக்கு முயற்சித்த இவருக்கு, டுட்டோரியல் காலேஜில் பாடம் நடத்த வாய்ப்புக் கிடைக்கிறது. அங்கு சில நாட்கள் வேலை பார்த்த நிலையிலேயே ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலைகிடைக்கிறது. அதன்பின்னர், தான் பயின்ற அமெரிக்கன் கல்லூரியிலேயே தமிழ் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கிறது. கிட்டத்தட 25 ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியாகப் பணியாற்றி 1991-ம் ஆண்டு தமிழ்த் துறை தலைவராக இவர் ஓய்வுபெற்றார். பிரபல வார இதழான குமுதம் ஒருமுறை பிரபலங்களை வைத்து இதழ்களைத் தயாரித்தது. குறிப்பிட்ட இதழைத் தயாரிக்கும் பிரபலத்தின் குடும்பப் புகைப்படத்தை அட்டைப்படத்தில் போடுவதை வழக்கமாக வைத்திருந்தது. அப்படி இவரை அழைத்தபோது, தனது குடும்பத்தினரின் போட்டோ வேண்டாம். மதுரை மீனாட்சியம்மன் கோயில் படம்தான் அட்டைப்படமாக வர வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். கிறிஸ்தவரான சாலமன் பாப்பையா இப்படிச் சொன்னது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை என்றாலே மீனாட்சியம்மன் கோயில்தான். அதுதான் அடையாளம். என்னோட குடும்ப போட்டோவை பின்னாடி கூட போட்டுக்கலாம் என்று சொல்லி அவர்களை ஒப்புக்கொள்ள வைத்தாராம்.  

சிறுவயது முதலே படிப்பில் படுசுட்டி. வீட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி. இதனால், நண்பர்கள் உதவியோடுதான் சினிமா பார்க்கப் போவாராம். கிளாஸில் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கும் பாப்பையா நண்பர்கள் உதவியால்தான் படித்து முடித்திருக்கிறார். தான் எப்போதும் அதிகம் மதிப்பது நட்பைத்தான் என பல இடங்களில் சொல்லுவார். இவரது வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது, அலைகள் நகர்த்தின கப்பல் போல ஏதோ ஒரு அலை என்னை இந்த இடத்துக்கு நகர்த்திக் கொண்டு வந்திருக்கின்றன என்ற உவமையை அடிக்கடி பயன்படுத்துவார். இவரது கணீர் குரல் தனித்த அடையாளம் என்றே சொல்லலாம். அதேபோல், கல்லூரி நாட்களில் நிறைய நாடகங்கள் எழுதி, அவற்றை இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார். இவரது நாடகங்களில் `நெல்லிக்கனி’ நாடகம் நண்பர்களின் ஆல்டைம் ஃபேவரைட். நடிப்புத் திறமையால் ஆடியன்ஸை வசீகரித்த சாலமன் பாப்பையா, படம் வரைவதிலும் கைதேர்ந்தவர். திருக்குறள் மீதும் பாரதி மீதும் தீராக் காதல் கொண்டவர். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு பார்வை, திருக்குறள் உரையுடன் உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.    

Solomon Pappiah
Solomon Pappiah

ஒரு முறை இவரது பக்கத்து தெருவில் வசித்தவர் வந்து, திருவிழாவை ஒட்டி நீங்க ஒரு பட்டிமன்றம் நடத்திக் கொடுக்கணும்னு கேட்டிருக்கிறார். இவரும் சரி என்று சொல்ல, தலைப்பை அவரே சொல்லியிருக்கிறார். அப்படி, இவர் நடுவராக இருந்த முதல் பட்டிமன்றத்தின் தலைப்பு, `குடும்பத்தின் பெருமையைக் காத்து உயர்த்துவதில் முதலிடம் பெறுபவர்… கணவனா? மனைவியா?’ என்கிற தலைப்புதான்.

சாலமன் பாப்பையாவோட பட்டிமன்றத் தலைப்புகளில் உங்களோட ஃபேவரைட் தலைப்பு எது… ஏன்னு கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top