மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரிலேயே விநாயகர் சதுர்த்திக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
விநாயகர் சதுர்த்தி – கட்டுபாடுகள்!
இந்தாண்டு வரும் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கொரோனா மூன்றாம் அலை பரவக் கூடும் என்பதால் தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதன்படி, பொது இடத்தில் விநாயகர் சிலைகளை வைக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. தனி நபர்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்துக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கும் தமிழக அரசு, தனி நபர்கள் நீர் நிலைகளில் கரைக்க அனுமதி அளித்திருக்கிறது. கோயில்களில் வைக்கப்படும் சிலைகளைக் கரைக்க இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
பா.ஜ.க – இந்து முன்னணி எதிர்ப்பு!
விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு பா.ஜ.க, இந்து முன்னணி சார்பில் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதுதொடர்பாகப் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “தமிழக அரசின் கட்டுப்பாடுகளை மீறி விநாயகர் சிலைகளை வைப்போம். ஊர்வலமும் செல்வோம். ஒருவேளை தமிழக அரசு அதைத் தடுக்க முனைந்தால், விநாயகரே தி.மு.க அரசை முடிவுக்குக் கொண்டு வருவார்’’ என்று பேசியிருந்தார். அதேபோல், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகியவை சார்பிலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சட்டப்பேரவையில் எதிரொலிப்பு!
இந்தநிலையில், தமிழக அரசு விநாயகர் சதுர்த்திக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என சட்டப்பேரவையில் நாகர்கோவில் பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி வலியுறுத்தியிருக்கிறார். எம்.எல்.ஏ-வின் கேள்விக்குப் பதிலளித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, “தமிழ்நாடு அரசு வரும் முன் காக்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய உள்துறை செயலாளர் அறிவுறுத்தலின்படியே விநாயகர் சதுர்த்திக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது’’ என்று பதிலளித்தார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவை நடைபெறும் கலைவாணர் அரங்க வளாகத்தில் பா.ஜ.க சட்டமன்றத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், “உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சேகர் பாபு கூறினார். எப்படி இருந்தாலும், தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள், டாஸ்மாக் கடைகள், தியேட்டர்கள் திறந்திருக்கிறார்கள். மற்ற எல்லா நிகழ்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று பா.ஜ.க சார்பில் கோரிக்கை வைத்திருக்கிறோம்’’ என்றார்.
Also Read – விநாயகர் சதுர்த்தி: கட்டுப்பாடுகள் என்னென்ன.. எதெற்கெல்லாம் அனுமதி?