Jyothika: `மாயா முதல் ஸ்மிதா வரை’ – ஜோதிகாவின் டாப் 10 ரோல்கள் (பகுதி -1)

ஆரம்பத்தில் மற்றுமொரு பாம்பே ஹீரோயினாக அறிமுகமான ஜோதிகா, நாளடைவில் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிக்கொண்டு நடிப்பில் உச்சத்தைத் தொட்டார். திருமணத்திற்குப் பிறகான தற்போதைய தனது செகண்ட் இன்னிங்கைஸையும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்துவரும் ஜோதிகாவின் கரியரில் சிறந்த பத்து கதாபாத்திரங்களைப் பற்றி இங்கே. (குறிப்பு : இது ஒரு தரவரிசைப்பட்டியல் அல்ல)

மாயா – ‘காக்க காக்க’

காக்க காக்க - மாயா
காக்க காக்க – மாயா

பரபரப்பான  ‘காக்க காக்க’ பட போலீஸ் கதையில், அக்கினி நட்சத்திர பகலில் கிடைக்கும் புங்கை மர காற்றாக இடம்பெற்றிருக்கும் ஒரு கதாப்பாத்திரம்தான் ‘மாயா’. ஜோதிகாவின் கரியரிலேயே முதன்முறையாக காட்டன் புடவை, மை தீட்டிய கண், அளவான பேச்சு என தனது நிறைகுறைகளைத் தெரிந்துகொண்டு நடித்த கதாப்பாத்திரம் இதுதான். இயக்குநர் கௌதம் மேனனின் ரசனையான எழுத்துக்களுக்கு அவ்வளவு அழகாக உயிரூட்டியிருப்பார் ஜோதிகா.

ஜெனி – ‘குஷி’

குஷி - ஜெனி
குஷி – ஜெனி

காதலை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு ஈகோவை சமாளிக்கப் போராடும் இளம்பெண் ஜெனி கேரக்டரில் செம்ம ஃபிட்டாக பொருந்தியிருந்தார் ஜோதிகா. வெடுக் வெடுக்கென கழுத்தை ஒடித்து ஒடித்து பேசும் ஜோதிகாவின் உடல் மொழி அப்போதைய தமிழ் சினிமாவுக்கு மிகப் புதுசு. என்னதான் அது படத்தின் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் சொந்த உடல்மொழி என்றாலும் அதை உள்வாங்கிக்கொண்டு அழகாக வெளிப்படுத்த ஒரு திறன் வேண்டுமல்லவா. அதை பர்ஃபெக்ட்டாகவே செய்து பாராட்டுக்களை குவித்திருப்பார் ஜோ.

கங்கா – ‘சந்திரமுகி’

சந்திரமுகி - கங்கா
சந்திரமுகி – கங்கா

எந்தவொரு ஹீரோயினுக்கும் தன்னுடைய கரியரில் இப்படியொரு படத்தில், இப்படியொரு நடிகருடன் நடித்திட வேண்டும் என நிச்சயம் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அப்படி ஒரு எதிர்பார்ப்பு ‘சந்திரமுகி’ படம் மூலம் ஜோதிகாவுக்கும் நிறைவேறியது. படத்தின் கதையில் ஆரம்பத்தில் ஏனோ தானா என வந்துப்போய்க்கொண்டிருந்த ஜோதிகா, ஒரு கட்டத்திற்குப் பிறகு டேக் ஆஃப் எடுத்து கிளைமேக்ஸில் ருத்ர தாண்டவமே ஆடியிருப்பார். ‘முழுசா’ சந்திரமுகியாக மாறி அவர் ‘ரா..ரா..’ என விளிக்கும் அந்தவொரு ஷாட்டை மறக்கமுடியுமா?

ஜில்லு (எ) குந்தவி – ‘சில்லுனு ஒரு காதல்’

சில்லுனு ஒரு காதல் - குந்தவி
சில்லுனு ஒரு காதல் – குந்தவி

தோற்றத்தில் மும்பை பொண்ணு, உள்ளுக்குள் கிராமத்துப் பொண்ணு என்ற வித்தியாசமான ஒரு வேடத்தில் கியூட்டாக நடித்திருப்பார் ஜோதிகா. தனது கணவனின் மனதில் இன்னொரு காதல் இன்னும் ஏக்கமாக படிந்திருக்கிறது என்பதைத் தெரிந்ததும் அதற்கு அனுமதிக்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் போராடும் செம்ம வெயிட்டான இந்த கதாபாத்திரத்தில் அத்தனை மெச்சூர்டாக நடித்திருப்பார் ஜோதிகா. திருமணத்திற்கு முன்பே சூர்யாவும் ஜோதிகாவும் திரையில் கணவன் மனைவியாக நடித்த படம் என்பதால் இருவருக்குமிடையேயான கெமிஸ்ட்ரியும் படத்தில் அள்ளும்.

 ஸ்மிதா – ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’

பச்சைக்கிளி முத்துச்சரம் - ஸ்மிதா
பச்சைக்கிளி முத்துச்சரம் – ஸ்மிதா

தன்னுடைய நடிப்பின் மூலம் ஜோதிகா வேறொரு பரிணாமத்தைத் தொட்ட படம் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’. அப்பாவி ஆண்களிடம் காதல் மொழி பேசி பணம் பறிக்கும் ‘ஸ்மிதா’ கேரக்டரில் சிறப்பாகப் பொருந்தியிருப்பார் ஜோதிகா. சரத்குமாரிடம் கண்களாலேயே காதல் வலை வீழ்த்தும்போதாகட்டும் எதிர்ப்பவர்களைத் துப்பாக்கியை எடுத்து சுட்டுத் தள்ளும்போதாகாட்டும் என ஒரே படம் மூலம் இரண்டு எல்லைகளையும் ஜஸ்ட் லைக் செய்திருப்பார் ஜோதிகா.

Also Read: நடிகை கௌதமி ரசிகரா நீங்க… உங்களுக்கான சின்ன டெஸ்ட்! #Quiz

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top