தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்க இருக்கிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தமுள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடக்க இருக்கிறது. ஒரே கட்டமாக நடக்கும் இந்தத் தேர்தல் மூலம், 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 8,288 பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் 3,468 நகராட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 12,607 பதவியிடங்களுக்குக் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் எண்ணிக்கையோ 57,778 பேர். இதில், கவனம் ஈர்த்த சில வேட்பாளர்கள் பத்திதான் நாம இப்போ தெரிஞ்சுக்கப் போறோம்.
அரசுப் பணி வேண்டாம்; மக்கள் பணியே வேண்டும்!
அரசுப் பணியில் சேர்வது என்பதே கடினமாகிவிட்டதாக இன்றைய சூழலில் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக சில வேட்பாளர்கள் தங்களது மத்திய, மாநில அரசுப் பணிகளையே உதறியிருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமான தகவல்தான். திருவேற்காடு நகராட்சியின் 8-வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என்.இ.கே. மூர்த்தி, ரயில்வேத் துறையில் ஊழியராகப் பணியாற்றியவர். தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்தப் பணியை ராஜினாமா செய்திருக்கிறார். அதேபோல், இதே நகராட்சியின் 1-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிடும் சந்திரலேகா, பெண் போலீஸ் கமாண்டோ படைப்பிரிவு வேலையை உதறிவிட்டு தேர்தலில் நிற்கிறார். அதேபோல், சென்னை அண்ணா நகர் 99-வது வார்டில் அ.தி.மு.க கூட்டணியில் களமிறங்கியிருக்கும் வேட்பாளர் சிவகாமி, விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாவார்.
லோடு மேன் டு வேட்பாளர்
மானாமதுரை நகராட்சியின் 14-வது வார்டில் அ.தி.மு.க வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் 56 வயதான பழனி. இவர் அங்குள்ள தனியார் மரக்கடையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். வேலை நேரத்தில் லோடு மேனாக சின்சியராக டூட்டி பார்க்கும் இவர், பிரசாரத்தின் போது வெள்ளை வேட்டி, சட்டை சகிதம் கட்சித் துண்டோடு களத்தில் சூறாவளியாகச் சுழன்றடிக்கிறார். பணி நேரம் முடிந்ததும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் அவர், சாதாரணத் தொழிலாளிக்கு மக்கள் பணி செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என்று மக்களிடம் கோரிக்கை வைக்கிறார்.
கவனம் ஈர்த்த திருநங்கை வேட்பாளர்கள்
இந்தத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் திருநங்கைகள் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது கவனம் ஈர்த்திருக்கிறது. வேலூர் மாநகராட்சியில் அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் ஓல்டு டவுன் பகுதியை உள்ளடக்கிய 37-வது வார்டில் தி.மு.க சார்பில் 49 வயதான கங்கா என்ற திருநங்கை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் செயலாளராக இருக்கும் இவர், கருணாநிதி ஆட்சிக் காலத்தில் திருநங்கை நலவாரிய உறுப்பினராக இருந்திருக்கிறார். அதேபோல், பெருநகர சென்னை மாநகராட்சியின் 112-வது வார்டில் ஜெயதேவி என்ற திருநங்கைக்கு வேட்பாளராக வாய்ப்பு வழங்கியிருக்கிறது அ.தி.மு.க. சென்னை மாநகராட்சியின் 76-வது வார்டில் ராஜம்மா என்கிற ரதி, மதுரை மாநகராட்சியின் 94-வது வார்டில் சுஜாதா என்கிற ஹர்சினி ஆகிய திருநங்கைகள் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார்கள். மதுரை மாநகராட்சியின் 86-வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக பாரதி கண்ணம்மா என்கிறது திருநங்கை களமிறங்கியிருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் வேலூர் மாநகராட்சியில் 40-வது வார்டில் ரஞ்சிதா மற்றும் 41-வது வார்டில் சபீனா ஆகிய திருநங்கைகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல், தூத்துக்குடி மாநகராட்சியில் வார்டு எண் 50-ல் திருநங்கை ஆர்த்தி சுயேச்சையாகக் களம் கண்டிருக்கிறார்.
வெளிநாட்டு வேலையை விட மக்கள் பணியில்தான் மனம் நிறைகிறது!
சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பேரூராட்சிக்குட்பட்ட வேலங்குடி கிராமத்தை உள்ளடக்கிய 8-வது வார்டில் பா.ஜ.க சார்பில் களமிறங்கியிருப்பவர் பாண்டித்துரை. ஜெர்மனியில் படிப்பை முடித்து பி.எம்.டபிள்யூ நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர், ஒரு கட்டத்தில் பெங்களூர் வந்து சொந்தமாக சாஃப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்திருக்கிறார். இவரது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது கொரோனா காலம் என்கிறார். அப்போதைய லாக்டவுன் காலத்தில் கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 3,000 குடும்பங்களுக்கு நண்பர்களுடன் சேர்ந்து 15,000 கிலோவுக்கு மேற்பட்ட மளிகைப் பொருட்களை நிவாரண உதவியாக நண்பர்களோடு சேர்ந்து அளித்திருக்கிறார். அரசியல் சார்பில்லாமல் மக்கள் பணியில் ஈடுபடத் தொடங்கிய இவர், பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலை ஐபிஎஸ் ஆகியோரின் எண்ணங்கள் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் பா.ஜ.க-வில் இணைந்து பணியாற்றத் தொடங்கியிருக்கிறார். மாநிலப் பொறுப்புகள் பல தேடி வந்தும், உள்ளூரில் மக்கள் பணியாற்றுவதே தனது விருப்பம் என்ற அளவில் 25 ஆண்டுகளாகத் தன்னை வளர்த்த வேலங்குடி கிராமத்தில் பா.ஜ.க சார்பில் கோட்டையூர் பேரூராட்சி தேர்தலில் நிற்கிறார். வெளிநாட்டு வேலையை விட மக்கள் பணியின்போது தான் மனம் நிறைவாக இருக்கிறது என்கிறார் பாண்டித்துரை.
களத்தில் நிற்கும் இளம் வேட்பாளர்கள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல அரசியல் கட்சிகள் சார்பிலும் கல்லூரி மாணவர்கள் உள்பட இளம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். திருப்பூர் மாநகராட்சியின் 55-வது வார்டில் போட்டியிட 22 வயதான சட்டக் கல்லூரி மாணவி தீபிகா அப்புக்குட்டிக்கும், கரூர் மாநகராட்சியின் 12-வது வார்டு வேட்பாளராகப் போட்டியிட 24 வயது மாணவி கிருத்திகாவுக்கும் காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியிருக்கிறது. அதேபோல், கோவை மாநகராட்சியின் 97-வது வார்டுக்கு தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் 22 வயதான முதுகலை மாணவி கிருத்திகா. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை மாநகராட்சியின் 98-வது வார்டில் 21 வயது மாணவி பிரியதர்ஷினி மற்றும் செங்கோட்டை நகராட்சியின் 1-வது வார்டில் போட்டியிட மாணவி சத்யாராமும் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னை மாநகராட்சியின் 107-வது வார்டில் 21 வயதான மாணவி வர்ஷா சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். கடந்த அக்டோபரில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரான 21 வயது இளம் பொறியாளர் சாருலதா, கூடலூர் நடுஹட்டி ஊராட்சியின் 6-வது வார்டில் வென்ற 21 வயது பட்டதாரி நதியா என பல இளம் வேட்பாளர்கள் வெற்றிவாகை சூடியிருந்தனர்.
ஹாட்ரிக் சுயேச்சை
பெரம்பலூர் நகராட்சியின் 5-வது வார்டு வேட்பாளராக சுயேச்சையாகக் களம் காண்பவர் ரமேஷ் பாண்டியன். கடந்த 2006-ம் ஆண்டு தனது 26 வயதில் முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்ட அவர் வெற்றிபெற்றார். அதன்பிறகு நடைபெற்ற 2006, 2011 உள்ளாட்சித் தேர்தல்களில் சுயேச்சையாக நின்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார். வாகன சீட் கவர் தைக்கும் தொழில் செய்துவந்த இவர், உடல்நலக் குறைவால் அந்தத் தொழிலை கைவிட்டிருக்கிறார். வார்டு மறுவரையறை காரணமாக இந்த முறை 5-வது வார்டில் களமிறங்கும் அவர், சாதி, மதம் கடந்து மக்கள் ஆதரவால் பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்களை வீழ்த்தி இந்த முறையும் வெற்றிபெறுவென் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.
நிராகரிப்பு வேதனை
உள்ளாட்சித் தேர்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வென்றிருந்த நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தினர், இந்தத் தேர்தலிலும் சுயேச்சையாகக் களமிறங்கியிருக்கிறார்கள். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியின் 13-வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட 19 வயதான பரணி என்கிற மாணவர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 21 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்கிற காரணத்தால், அவரது வேட்புமனுவை அதிகாரிகள் நிராகரித்தனர்.