கருப்பசாமி பாண்டியன்

கலெக்டரா இருந்துட்டு தாசில்தாராலாம் இருக்க முடியாது…`கா’னா கருப்பசாமி பாண்டியன் சம்பவங்கள்!

18 தொகுதிகளை ஆள்ற அந்தஸ்துல இருந்துட்டு 2 தொகுதிகளை மட்டும் சுற்றிவந்து வேலை செய்ய எனக்கு விருப்பமில்லை. மாவட்டத்துக்கே கலெக்டர் மாதிரி இருந்துட்டு, இப்போ தாசில்தார் மாதிரி வேலை பார்க்க முடியாது’ 2015-ல் நெல்லை மாவட்ட திமுகவை நிர்வாக வசதிக்காக மத்தி, மேற்கு, கிழக்கு என மூன்றாகப் பிரித்தபோது ஒருங்கிணைந்த மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த கருப்பசாமி பாண்டியன் இப்படிச் சொன்னார். தேர்தலிலும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட அவரை சமாதானப்படுத்துவதற்காக திமுக தலைமை உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் ஆக்கியது. சமாதானமடையாத அவர், தன்னுடைய வீட்டிலிருந்த திமுக அடையாளங்களை நீக்கி தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். நெல்லை அரசியல் வட்டாரத்தில் கா-னா என்று ஒற்றை எழுத்தால் அடையாளப்படுத்தப்படும் கருப்பசாமி பாண்டியனோட அரசியல் பயணம் எங்க தொடங்குச்சு. பொலிட்டிக்கல் ஜர்னில அவர் பண்ண சம்பவங்கள் சிலதையும் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

சின்ன வயசுல இருந்தே எம்.ஜி.ஆர் ஆதரவாளரா இருந்த கா-னா, 1972-ல் அதிமுக உதயமானபோதே அதில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றத் தொடங்கினார். நெல்லை மாவட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சிக்காக இவர் ஆற்றிய களப்பணிகள் எம்.ஜி.ஆரின் கவனத்தை ஈர்த்தது. 1977 தேர்தலுக்கு முன்பாக ராமாவரம் தோட்டத்துக்கு கா-னாவைஒ அழைத்த, தேர்தல்ல போட்டியிட விருப்ப மனு கொடுக்கலையா?’னு கேட்டிருக்கார். அப்போ, பாளையங்கோட்டை தொகுதிக்குள்ள இருக்கு தலைவரே என்னோட ஊரு, அங்க நம்ம சார்புல வேட்பாளர் யாருனு எல்லாருக்கும் தெரியும். அப்புறம் எப்படி தலைவரே என்று தயங்கினாராம். உடனே,ஆலங்குளம் தொகுதிக்கு விருப்பமனு கொடுத்துடு. டெபாசிட் காசு 10,000 ரூபாயையும் நானே கட்டிடுறேன்’னு சொல்லி வாழ்த்தி அனுப்பியிருக்கார். அப்படி முதல்முறையாகப் போட்டியிட்ட தேர்தலில் வென்று எம்.எல்.ஏவாகிறார். இவரின் செயல்பாடுகளால் நெல்லை நெப்போலியன் என்று அழைக்கப்பட்டார். எம்.ஜி.ஆரோடு இவருக்கு இன்னொரு முக்கியமான சம்பவமும் உண்டு. நெல்லை தொகுதி இடைத்தேர்தல் சமயத்தில் இவரை அழைத்த எம்.ஜி.ஆர்.,`நீதான் வேட்பாளர் வேலையைத் தொடங்கு’ என்று சொல்லியிருக்கிறார். தேர்தலுக்கு முன்பு ஆர்.எம்.வீரப்பனின் எம்.எல்.சி பதவி பறிபோகவே, அவரை எம்.எல்.ஏவாக்க வேண்டிய கட்டாயத்தில் வேட்பாளர் மாற்றம் நிகழவே, கருப்பசாமி பாண்டியன் தலைமறைவாகியிருக்கிறார். அதன்பின்னர், என்னுடைய பயண திட்டம் முழுவதையும் கருப்பசாமி பாண்டியன்தான் பார்த்துக் கொள்வார் என்று எம்.ஜி.ஆரே நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து சமாதானப்படுத்தினாராம்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெ-ஜா அணி என அதிமுக உடைந்தபோது ஜெயலலிதா அணி எம்.எல்.ஏக்களைப் பாதுகாத்த நால்வரில் முக்கியமானவர் கருப்பசாமி பாண்டியன். எம்.எல்.ஏக்கள் 30 பேரை உக்கம் சந்த் ராஜஸ்தான் அழைத்துச் சென்று வைத்திருந்தார். அவர்கள் எல்லாரும் சென்னை வந்து இறங்குவார்கள் என்று எதிரணி நினைத்துக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கெல்லாம் போக்கு காட்டி திருவனந்தபுரம் வழியாக விருதுநகரில் இருந்த கேகேஎஸ்எஸ்ஆரின் மில்லுக்குப் பத்திரமாகக் கொண்டு சேர்த்தார் கா-னா. நெல்லையில் இருந்து அவர்களின் பாதுகாப்புக்கு ஆட்களை இறக்கியதோடு, அந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் பத்திரமாக சென்னை கொண்டு வந்து சேர்த்ததிலும் முக்கியப் பங்காற்றினார். இதனாலேதான் இரு அணிகளும் ஒன்றிணைந்து கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்தபிறகு அதிமுகவின் மாநாட்டை நெல்லையில் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் நடத்தினார் ஜெயலலிதா. 1996 தேர்தலில் நெல்லை தொகுதியில் தோற்றிருந்தாலும் அடுத்த சில மாதங்களில் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பையும் கா-னாவுக்குக் கொடுத்தார் ஜெயலலிதா. கா-னா பொறுப்பேற்று 1997 டிசம்பர் இறுதியில் நடத்திய அதிமுக மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த மேடையில்தான் ஜெயலலிதாவோடு அத்வானி, வைகோ, வாழப்பாடியார், சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்ட தலைவர்கள் கைகோர்த்தனர்.

கட்சியில் மிகப்பெரிய செல்வாக்கோடு வலம்வந்தாலும் தன்னிச்சையாக செயல்பட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளால் 2000-ம் ஆண்டில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர், திமுகவில் ஐக்கியமான இவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் நெல்லை மாவட்ட திமுகவிலும் கோலோச்சினார். 2006-க்குப் பிறகு நெல்லை மாவட்ட திமுக கழக செயலாளராகவும் செயல்பட்டார். தென்காசி எம்.எல்.ஏவாக இருந்தபோது தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று நினைத்து அரசு நிகழ்ச்சியையே புறக்கணித்தது. நிகழ்ச்சி ஒன்றில் அரசியல்வாதிகளைப் பெண்கள் குலவை இட்டு வரவேற்க வேண்டும் என்று சொன்னது என லைம்லைட்டிலேயே இருந்தார்.

Also Read – காங்கிரஸின் பெரிய தலக்கட்டு… ஜி.கே. மூப்பனாரின் பொலிட்டிக்கல் சம்பவங்கள்

அந்த நேரத்தில் இவர் மீது எழுந்த பாலியல் புகார் மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. சிலகாலம் தலைமறைவாக இருந்த இவரைப் பிடிக்க தனிப்படைகளை அமைத்தது தமிழ்நாடு போலீஸ். அப்போது இவர் அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டது தலைமை. ஆனால், நெல்லை மாவட்டத்தைக கட்சிரீதியாகப் பிரித்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் வெளியேறினார். சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை ஆனபோது பட்டாசு வெடித்துக் கொண்டாடியதாகவும் அப்போது இவர்மீது தலைமைக்குப் புகார் பறந்தது. 14 மாத கேப்புக்குப் பிறகு அதிமுகவில் இணைந்த அவர், கருணாநிதிக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரனுக்கு எதிராகப் பேசி அதிமுகவை விட்டு வெளியேறிய இவர் பின்னாட்களில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இப்போது அதிமுகவில் அமைப்புச் செயலாளராக இருந்துவருகிறார்.

2006ல இவர் தென்காசி தொகுதி திமுக எம்.எல்.ஏவா இருந்த சமயத்துல சங்கரன்கோவில் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கருப்பசாமி இவருக்கு எதிராக சபாநாயகர் ஆவுடையப்பன் கிட்ட மனு கொடுத்தார். அதில், கருப்பசாமி பாண்டியன் தன்னைப் பற்றி அவதூறான செய்திகளை பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். எனக்கு 2 பங்களாக்கள் இருக்குனு சொல்றார். உண்மையிலேயே அப்படி இருந்தா, அதுல ஒண்ணை கருப்பசாமி பாண்டியனுக்கும் இன்னொன்னை கருணாநிதிக்கும் கொடுத்துடுவேன்னு நான் பதில் சொல்லியிருந்தேன். அப்படினா எங்களுக்கு ரெண்டு பங்களாக்கள் கிடைக்கப் போகுதுனு அவதூறு பரப்புற வகைல கருப்பசாமி பாண்டியன் சொல்லியிருக்கார். அவர்மேல மான நஷ்டஈடு வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும்னு அந்த லெட்டர்ல குறிப்பிட்டிருந்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top