மத்திய பட்ஜெட்டில் அறிவித்தபடி, வருமான வரி விதிமுறைகளில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 5 மாற்றங்கள் அமலுக்கு வந்திருக்கின்றன. எதெல்லாம் மாறியிருக்கிறது.
ITR Filing
முந்தைய ஆண்டுக்கான வருமான வரித் தாக்கலை உரிய சமயத்தில் வருமான வரி செலுத்துவோர் தாக்கல் செய்யவில்லை என்றால், அடுத்த ஆண்டு கூடுதலாக TDS, TCS போன்றவற்றை செலுத்த வேண்டி இருக்கும். மத்திய பட்ஜெட் 2022-ல் அறிவிக்கப்பட்ட இந்த நடைமுறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. அதேநேரம், வருமானம் என்பது மாதாந்திர ஊதியமாகவோ அல்லது புராவிடண்ட் பண்ட்-ஆக இருக்கும் நிலையில், இந்த விதி பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கிரிப்டோ வரி
கிரிப்டோ கரன்ஸிகள் மூலம் கிடைக்கப்பெறும் லாபத்துக்கு 30% வரி விதிக்கப்படுகிறது. நிதியாண்டு முடிவில் மொத்த பரிவர்த்தனைகளைக் கணக்கிட்டு அதற்கு வரி வசூலிக்கப்படும். கிரிப்டோ கரன்ஸியாக வைத்திருப்பதில் எந்தத் தடையுமில்லை; அதேநேரம், அதைப் பணமாக மாற்றும்போது வரி விதிக்கப்படும். ஒருவேளை கிரிப்டோவை பரிசாக அளிக்கையில், அந்தப் பரிசைப் பெறுபவரிடமிருந்து வரியானது வசூலிக்கப்படும்.
வீடு வாங்குதல்
Affordable Homes எனப்படும் சிறிய வீடுகளை வாங்குவோரிடம் இருந்து வருமான வரிச் சட்டம் பிரிவு 80EEA-ன் படி கூடுதலாக ரூ.1.5 லட்சம் வரையில் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த வரி விதிப்பு கைவிடப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது.
மாற்றுத்திறனாளிகள்
பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் வருமான வரிச்சட்டம் 80DD-ன் பிரிவின் கீழ் சலுகைகள் பெற முடியும் என்பதுதான் அது. உதாரணமாக, மாற்றுத்திறனாளி ஒருவருக்கான காப்பீட்டை வாங்கும்போது, அந்தத் தொகையை அவர் உயிருடன் இருக்கும்போதே அந்தத் தொகைக்கு வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 80DD-ன் கீழ் விலக்கு கோரி விண்ணப்பிக்க முடியும்.
சீனியர் சிட்டிசன்கள்
மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 75 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்கள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்று அறிவித்தார். இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கியமான மாற்றம் இது. ஏப்ரல் 1 முதல் அமலாகியிருக்கும் சட்டத்தின்படி விலக்கு கோர சில விதிமுறைகளும் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.
Also Read: பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்தது நினைவில்லையா… ஈஸியா செக் செய்வது எப்படி?