தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய தலைவர்களில் சட்டென நியாபகத்துக்கு வரக்கூடியவர் நெல்சன் மண்டேலா. தனது போராட்டங்களின் ஒரு பகுதியாக மண்டேலா சுமார் 27 வருடங்கள் சிறை வாசத்தை அனுபவித்தார். உலகில் மக்களின் விடுதலைக்காக போராடி அதிக ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களில் நெல்சன் மண்டேலா முதன்மையானவர். பல ஆண்டுகள் தனிமைச் சிறையில் கிடந்த மண்டேலாவை, சிறைவாசத்தின்போது சுமார் 22 வருடங்கள் கழித்து அவருடைய மனைவி வின்னி மண்டேலா மே மாதம் 12-ம் தேதி அன்றுதான் சந்திக்கும் வாய்ப்பை பெற்றார். மண்டேலாவின் விடுதலை நாள் அன்று அவரது கைப்பிடித்து அழைத்து வந்த இந்த வின்னி மண்டேலா யார்? வாங்க தெரிஞ்சிப்போம்.
வின்னி மண்டேலா, தென்னாப்பிரிக்காவில் டிரான்கி எனும் மாவட்டத்தில் உள்ள பிஸானா என்ற கிராமத்தில் 1936-ம் ஆண்டு பிறந்தார். பின்னர், ஜோகன்னஸ்பர்க் எனும் நகரத்துக்கு 1953-ம் ஆண்டு குடிபெயர்ந்தார். அங்கு ஜான் ஹோஃப்மெய்ர் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்கில் படித்தார். தென்னாப்பிரிக்கா அப்போது நிறவெறி பிடித்த ஆட்சியாளர்களின் கீழ் இருந்தது. ஆப்பிரிக்க பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள் கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளாகினர். அதேநேரம், ஆட்சி மற்றும் அதிகாரங்களில் இருந்த ஐரோப்பியர்கள் செல்வம் மற்றும் சுகாதார அளவில் சமூக சுதந்திரத்தை அனுபவித்து வந்தனர். அந்த சமயத்தில் வின்னி தனது படிப்பை முடித்தார்.
அமெரிக்காவில் படிப்பதற்கான உதவித்தொகையை அவர் பெற்றிருந்தாலும் அதனை தள்ளிவிட்டு ஜோகன்னஸ்பர்க் பகுதியில் இருந்த மருத்துவமனை ஒன்றில் சமூக சேவகராகப் பணியாற்றினார். தன்னுடைய களப்பணியின் மூலம் மக்களில் பலர் மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்து வந்ததை உணர்ந்தார். 1950-களின் வழக்கறிஞர் நெல்சனை வின்னி சந்தித்தார். அந்த நேரத்தில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தார். ஆப்பிரிக்காவில் நிறவெறியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் இந்த இயக்கம் செயல்பட்டு வந்தது. அப்போதுதான், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
Also Read : ஒரு ரூபாய் நோட்டால் ரூ.50,000 சம்பாதிக்க முடியும்… எப்படி?
நெல்சனின் உறுதியான அரசியல் நிலைபாடுகள் மற்றும் வயது வித்தியாசம் குறித்த கவலைகள் வின்னியின் தந்தைக்கு இருந்தபோதிலும் இருவரும் ஜூன் மாதம் 1958-ல் திருமணம் செய்து கொண்டனர். நெல்சன் தனது நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தால் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். இறுதியில் திருமணமான சில ஆண்டுகளிலேயே அவருக்கு ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்டது. எனினும், நிறவெறியை முடிவுக்கு கொண்டுவர தொடர்ந்து போராடுவதாக வின்னி சபதம் செய்தார். தனது குழந்தைகளை ஸ்வாசிலாந்தில் உள்ள பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்து அமைதியான வாழ்க்கையை வழங்கினார்.
அரசாங்கத்தால் வின்னி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தார். பயங்கரவாதத்தை ஒடுக்கும் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். விடுதலையானதும் தனது செயல்பாடுகளைத் தொடர்ந்தார். மேலும், பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். `மதர் ஆஃப் நேஷன்’ என்று மக்களால் அழைக்கப்பட்டார். நெல்சன் 27 ஆண்டுகள் கழித்து விடுதலையானதும் இரண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து பின்னர் இருவரும் பிரிந்தனர். 1994-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நெல்சன் வெற்றி பெற்று ஜனாதிபதியானார்.
வின்னி, அவருடைய அமைச்சரவையில் கலை, கலாசாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். எனினும், 1995-ல் அவரது கணவரால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, 1996-ல் இருவரும் முறையாக விவாகரத்துப் பெற்றனர். கடத்தல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் வின்னியின் மீது எழுந்தபோதிலும் 1999-ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003-ல் அவர்மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழ ஆரம்பித்தது. விரைவில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இவரின் வாழ்க்கை “மண்டேலா: லாங் வாக் டூ ப்ரீடம்” என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல சர்ச்சையான அரசியல் கருத்துகளையும் விமர்சனங்களையும் வைத்து வந்த வின்னி, கடந்த 2018-ம் ஆண்டு தன்னுடைய 81 வது வயதில் உடல்நலக் குறைபாட்டால் உயிரிழந்தார்.