`தமிழகத்தில் 8 புதிய திட்டங்களுக்குத் தலா ரூ.1,000’ – பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?

தெற்கு ரயில்வேயின் கீழ் 11 புதிய ரயில் பாதை திட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதில் 9 திட்டங்களுக்குத் தலா ரூ.1,000 மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய பட்ஜெட் 2022

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு மொத்தமாக ரூ.7,114,45,69,000 (ரூ.7,114 கோடி)ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில், தெற்கு ரயில்வேயின் கீழ் மதுரை – தூத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை வழியாக அமைக்கப்பட்டு வரும் புதிய ரயில்பாதை திட்டம் உள்ளிட்ட 9 திட்டங்களுக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இந்த விவகாரத்துக்கு எதிராகக் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

ரயில்வே
ரயில்வே

ரூ.1,000 ஒதுக்கப்பட்ட தெற்கு ரயில்வேயின் புதிய ரயில் பாதை பணிகள்

11 புதிய ரயில் பாதைப் பணிகள் திட்டத்தில் இரண்டு திட்டங்கள் கேரளாவிலும் மீதமிருக்கும் 9 திட்டங்களும் தமிழகத்திலும் இடம்பெறுகின்றன.

 • திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை (70 கி.மீ)
 • திண்டிவனம் – நகரி (179.2 கி.மீ)
 • அத்திப்பட்டு – புத்தூர் (88.3 கி.மீ)
 • ஈரோடு – பழனி ( 91.05 கி.மீ)
 • சென்னை – மாமல்லபுரம் – கடலூர் (179.28 கி.மீ)
 • மதுரை – அருப்புக்கோட்டை – தூத்துக்குடி (143.5 கி.மீ)
 • ஸ்ரீபெரும்புதூர் – கூடுவாஞ்சேரி (60 கி.மீ)
 • மொரப்பூர் – தருமபுரி (36 கி.மீ)

அதேபோல், கேரளாவில் செயல்படுத்தப்பட்டு வரும் திருநின்னவாயா – குருவாயூர், அங்கமாலி – சபரிமலை ஆகிய புதிய ரயில் பாதைத் திட்டங்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வே – நிதி ஒதுக்கப்பட்ட திட்டங்கள்

 • திருச்சி – காரைக்கால் அகல ரயில்பாதை திட்டத்தில், நாகப்பட்டினம் – வேளாங்கண்ணி – திருத்துறைப்பூண்டி புதிய பாதை திட்டத்துக்கு ரூ.121.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் திருச்சி – காரைக்கால் இடையே பணிகள் முடிந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், இந்த நிதி நாகப்பட்டினம் – திருத்துறைப்பூண்டி புதிய பாதைப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.
 • ராமேஸ்வரம் – தனுஷ்கோடி புதிய ரயில் பாதைப் பணிகளுக்கு ரூ.207 கோடி தேவைப்படும் நிலையில், இந்த பட்ஜெட்டில் ரூ.59 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
 • மதுரை – வாஞ்சி மணியாச்சி – தூத்துக்குடி இடையிலான இரண்டாவது ரயில் பாதைப் பணிகளுக்கு ரூ.1,700 கோடி தேவைப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு நடப்பு ஆண்டில் 360 கோடி ரூபாயும் 2022-23 ஆண்டில் ரூ.425 கோடியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
 • நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் மதுரை – போடி அகல ரயில் பாதை திட்டத்துக்கு நடப்பு ஆண்டில் 104 கோடி ரூபாயும் 2022-23 ஆண்டில் ரூ.125 கோடியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
 • கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை அமைக்க நடப்பு ஆண்டில் ரூ.700 கோடி மற்றும் 2022-23 ஆண்டில் ரூ.400 கோடியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
 • பழைய தண்டவாளங்களைப் பராமரிக்கும் மற்றும் புதுப்பிக்கும் பணிகளுக்கு ரூ.1,470 கோடி, பாலப் பணிகளுக்கு ரூ.105.91 கோடியும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. சிக்னல் மற்றும் தொலைதொடர்புப் பணிகளுக்கு ரூ.189.76 கோடியும் பயணிகள் வசதிகளுக்காக ரூ.327.77 கோடியும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

Also Read – பிரதமர் மோடி முதல் பிரியங்கா காந்தி வரை… பட்ஜெட் பற்றிய பிரபலங்களின் கருத்துகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top