திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி வரலாறு தெரியுமா?

திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியாணியின் வரலாறு என்ன? ஏன் அந்த பெயர் வந்தது? சென்னையில் கிளை ஆரம்பிக்கலாம் என்று நினைத்தவர்களுக்குக் கிடைத்த ஷாக் என்ன? இந்த வீடியோவில் பார்க்கலாம்.

தலப்பாக்கட்டி
திண்டுக்கல் தலப்பாகட்டி

திண்டுக்கல் மாவட்டம் பூச்சிநாயக்கன்பட்டில நாகசாமினு ஒருத்தர். விவசாய குடும்பம். கொஞ்சம் நிலம் இருக்கு. இருந்தாலும் அதுல ஆர்வம் இல்லாம மானா முனா தோல்ஷாப்ல கணக்கு பிள்ளையா வேலை பார்க்குறாரு. அவருக்கு சொந்தமா தொழில் தொடங்கணும்னு ஆசை வருது. அவரோட மனைவி கண்ணம்மா நல்லா சமைப்பாங்க. பேசாம ஒரு ஹோட்டல் தொடங்கலாம்னு முடிவு பண்றாரு. 1957-ல திண்டுக்கல் கிழக்கு ரத வீதில ஆனந்த விலாஸ்ங்குற பேர்ல ஒரு ஹோட்டல் ஆரம்பிக்குறாரு. ஒரே நேரத்தில 50 பேர் உட்கார்ந்து சாப்பிடலாம். அவ்ளோ பெரிய ஒரு ஹோட்டல். வழக்கமான இட்லி, தோசைதான் ஆனா கொஞ்சம் டேஸ்டா இருக்கும். ஆனாலுமே கடை கொஞ்சம் சுமாராதான் போகுது. நிறைய பேர் வேலை பார்க்குறாங்க. அவங்களுக்கு சம்பளம், கடை வாடகைனு ஹோட்டல் நடத்துறது ரொம்ப கஷ்டமா போகுது. நாலு வருசம் போராடி பார்த்துட்டு இது நமக்கு செட் ஆகாதுனு அந்த ஹோட்டலை மூடிட்டு திரும்ப அதே தோல் கம்பெனிக்கு வேலைக்கு போயிடுறாரு. ஆனாலும் எதாவது வித்தியாசமா பண்ணனும்னு அவர் மனசுல ஓடிட்டே இருக்கு.

தலப்பாக்கட்டி பிரியாணி
தலப்பாக்கட்டி பிரியாணி

ஒருநாள் கண்ணம்மா ஒரு ஐடியா கொடுக்கிறாங்க. அந்த காலத்துல பிரியாணி கல்யாண வீடுகள்ல மட்டும்தான் பார்க்க முடியும். ஹோட்டல்ல பிரியாணிலாம் பாப்புலர் ஆகல. அதே மாதிரி பிரியாணி சாப்பிட்டா நாலு நாளைக்கு வயிறு போட்டு படுத்தும். பக்குவம் பெருசா யாருக்கும் கைவராது. நாம நல்ல பிரியாணி, பச்சைக்குழந்தைகூட சாப்பிடுற மாதிரி பண்ணலாம்னு கண்ணம்மா சொல்றாங்க. நாகசாமிக்கு இந்த யோசனை நல்லா இருந்தது. தோல் கம்பெனில வேலை பார்த்துக்கிட்டே டெய்லி நைட் பிரியாணி செய்ய கத்துக்குறாரு. ஒரு நாலு மாசம் பழகுனதும் அவருக்கு ஒரு நம்பிக்கை வருது. ஓக்கே மறுபடியும் ஹோட்டல் தொடங்கலாம். ஆனா போன முறை பண்ண தப்பை செய்யக்கூடாதுனு முடிவு பண்றாரு. வேலையை விடுறாரு. பழைய ஹோட்டல் இருந்த இடத்துக்கு எதிர்லயே திரும்ப ஆனந்த விலாஸ் ஆரம்பிக்குறாரு. இந்த முறை நாலே டேபிள். ஒரு நேரத்துல 8 பேர் சாப்பிடலாம். ரெண்டே ரெண்டு வேலையாட்கள்னு சின்னதா ஆரம்பிக்குறாரு. அவரோட பிரியாணி டேஸ்ட் ஊரையே மயக்குது. கொஞ்சம் கொஞ்சமா கடை பாப்புலர் ஆகுது. ஒருநாளைக்கு 3 தேக்‌ஷா பிரியாணி விக்குது.

தலப்பாக்கட்டி பிரியாணி
தலப்பாக்கட்டி பிரியாணி

சின்ன வயசுலயே நாகசாமிக்கு முடியெல்லாம் கொட்டிடுது. இதனால தலைப்பா கட்டிக்குறது வழக்கமா வச்சிருந்தாரு. இவரு கல்லால தலைப்பாகட்டி உட்கார்ந்திருக்குறதே பேராகி எல்லாரும் ஆனந்தவிலாஸ் பிரியாணி ஹோட்டலை தலைப்பாகட்டி பிரியாணினுதான் கூப்பிடுறாங்க. நாகசாமிக்கு குழந்தைகள் கிடையாது. அண்ணன், தம்பியோட பசங்களைதான் தன் பிள்ளை மாதிரி வளர்க்குறாரு. அப்படி ஒருத்தர்தான் தனபாலன். அவரு காலேஜ் முடிக்குற டைம்ல நாகசாமி இறந்திடுறாரு. அவருக்கு அப்பறம் தனபாலன் எப்படி பிரியாணி செய்யணும்னு கத்துக்கிட்டு அவரு தொழிலை எடுத்து நடத்துறாரு. மதுரைல இருந்து இவங்க பிரியாணி சாப்பிடுறதுக்காகவே திண்டுக்கல் வந்தவங்கள்லாம் இருக்காங்க. சிவாஜி சூரக்கோட்டை வரும்பொதெல்லாம் இந்தக் கடைலதான் சாப்பிடுவாருனு கடை பிரபலம் ஆகுது. அந்தக் கடைக்கு பக்கத்துலயே ஒரு பெரிய கடையா பிடிச்சு 25 பேர் உட்கார்ந்து சாப்பிடுற மாதிரி மாத்துறாரு. தனபாலனுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. பையனுக்கு அப்பாவோட பெயரையே வைக்கிறாரு. நாகசாமி தனபாலன் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் முடிச்சிட்டு லண்டன்ல ஒரு ஹோட்டல்ல வேலை பார்த்துட்டு இருந்திருக்காரு. ஒரு கட்டத்துக்கு அப்பறம் நம்மகிட்டயே ஒரு ஹோட்டல் இருக்கே அதையே எடுத்து நடத்தலாம்னு கெளம்பி வந்து கடைல சின்ன சின்ன மாற்றங்கள் கொண்டு வர்றாரு. குறிப்பா கடையோட பெயரை திண்டுக்கல் தலைப்பாகட்டினு மாத்துறாரு. கே.எஃப்.சி லோகோவில் அதன் நிறுவனர் படம் இருப்பதைப்போல தாத்தாவோட முகத்தையே லோகோவா மாத்துறாரு. கோயம்புத்தூர்ல ஒரு பிராஞ்ச் ஆரம்பிக்குறாரு. சென்னைல ஆரம்பிக்கலாம்னு பார்த்தா ஒரு பெரிய ஷாக் வருது.

தலப்பாக்கட்டி
தலப்பாக்கட்டி

ஒரு முறை ஒரு வார பத்திரிகையில் திண்டுக்கல் லியோனியை தலைப்பாகட்டியில் சாப்பிட வைத்து ஒரு கட்டுரை வெளியிடுகிறது. அந்தக் கட்டுரையின் மூலம் ஹோட்டல் தமிழகம் எங்கும் பிரபலமாக சென்னையில் தெருவுக்குத் தெரு தலைப்பாகட்டி பெயரில் பிரியாணி கடை முளைத்திருந்தது. ஒரிஜினல் தலைப்பாகட்டி நாங்கதான் என்று கோர்ட்டில் கேஸ் போட்டு அந்தப் பெயரை பயன்படுத்த தடை வாங்கினார் ஜூனியர் நாகசாமி. இன்றைக்கு சென்னை, கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் முக்கியமான ஊர்கள், இந்தியா, வெளிநாடு என மொத்தம் 100 கிளைகளுக்கு மேல் இருக்கிறது. அனைத்தையும் இவர்களே நடத்துகிறார்கள். ஃபிராஞ்சைஸ் கிடையாது. இத்தனை பிராஞ்சில் நீங்க எங்க பிரியாணி சாப்பிட்டாலும் ஒரே டேஸ்ட்தான் இருக்கும். காரணம் இவர்களுடைய ரெசிப்பியை சிஸ்டமாக மாற்றியிருக்கிறார்கள். 100 கிலோ பிரியாணி செய்ய வேண்டும் என்றால் எத்தனை கிராம் உப்பு இருக்க வேண்டும், எத்தனை கிலோ கோழி இருக்கவேண்டும் என அத்தனையும் சிஸ்டமே சொல்லிவிடும். மசாலா எல்லாமே இன்னமும் திண்டுக்கல்லில் இருந்துதான் தயாராகி வெளிநாடுகளுக்கும் போகிறது. இதுதான் திண்டுக்கல் தலைப்பாகட்டியின் சீக்ரெட் ரெசிப்பி.

தலைப்பாகட்டி பிரியாணி சாப்பிட்டிருக்கீங்களா? உங்க அனுபவத்தை கமெண்ட்ல சொல்லுங்க. 

1 thought on “திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி வரலாறு தெரியுமா?”

  1. பிரியாணி என்றாலே, அது தலப்பாகட்டி பிரியாணி தான், எதுவும் கிட்ட நெருங்க முடியாதூ..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top