‘திராவிடம், சமூகநீதி, மக்கள்’ – தமிழக பிரபலங்களின் ஒரு வார்த்தை ட்வீட் என்னென்ன தெரியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஆம்ட்ராக்’ என்ற நிறுவனம் ட்விட்டரில் ‘ட்ரெயின்ஸ்’ என்று ஒற்றை வார்த்தையில் பதிவிட்டு புதிய டிரெண்ட் ஒன்றை ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து உலக தலைவர்கள் பலரும் ஒற்றை வார்த்தையில் பல விஷயங்களை குறிப்பிட்டு ட்வீட் செய்து வருகின்றனர். இந்தியாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ‘கிரிக்கெட்’ என பதிவிட்டு இந்தியாவில் அந்த டிரெண்டை தொடங்கி வைத்தார். தற்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முதல் நாம் தமிழர் ‘சீமான்’ வரை பலரும் ஒரு வார்த்தை ட்வீட் பதிவிட்டு வருகின்றனர். எந்த தலைவர்கள் எல்லாம் என்னென்ன வார்த்தைகளை ட்வீட் செய்துள்ளனர்? என்பதைப் பற்றிதான் இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘திராவிடம்’ என ட்வீட் செய்திருந்தார். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ‘தமிழ்நாடு’ என ட்வீட் செய்திருந்தார். அதேபோல, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ‘தமிழன்’ என ட்வீட் செய்திருந்தார். வழக்கம்போல எல்லா ட்வீட்களுக்கு எதிர்வினைகள் எழத்தொடங்கின. இந்த நிலையில். தி.மு.க மற்றும் பா.ஜ.க நேரடியாகவே ட்விட்டரில் மோதிக்கொண்டன. அண்ணாமலையின் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்த தி.மு.க ஐ.டி விங் பிரிவினர். அந்த ட்வீட்டுடன் அண்ணாமலை பேசிய காணொளி ஒன்றையும் பகிர்ந்துள்ளனர். அண்ணாமலை அந்த காணொளியில், “நான் கன்னடர் என்பதில் எப்போதும் பெருமை கொள்கிறேன். தமிழகத்தில் இருந்து கர்நாடகா வந்தபோது என்னை தமிழகத்தில் கிட்டத்தட்ட 300 பேருக்குதான் தெரியும். கர்நாடக மக்கள் எனது பணி திறமையை மட்டுமே பார்த்தீர்கள். காவிரி பிரச்னை வந்தபோதுகூட என்னை நீங்கள் தமிழனாக பார்க்க வில்லை. அண்ணாமலை எனும் காவல்துறை அதிகாரியாகவே பார்த்தீர்கள். எனது மாநிலத்தில்கூட இந்த அளவுக்கு எனக்கு மரியாதை கிடைத்திருக்காது என்று நினைக்கிறேன். என் கடைசி மூச்சு இருக்கும் வரை நான் பெருமைமிக்க கன்னடன்தான்” என்று பேசியுள்ளார்.

அண்ணாமலை பேசியதை குறிப்பிட்டு பலரும் அவருக்கு எதிர்வினை ஆற்றி வருகின்றனர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘எடப்பாடியார்’ என்று பதிவிட்டுள்ளனர். டி.டி.வி தினகரன் ‘அம்மா’ என ட்வீட் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையில் நிலவும் பிரச்னையை சரிகட்ட முயற்சிக்கும் வகையில் சசிகலா ‘ஒற்றுமை’ என ட்வீட் செய்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ‘மக்கள்’ என ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன் ‘சமூகநீதி’ என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ‘சனநாயகம்’ என்றும், தி.மு.க-வைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ‘பெரியார்’ என்றும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ‘வறுமைஓழிப்பு’ என்றும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘தமிழ்த்தேசியம்’ என்றும் ட்வீட் செய்துள்ளனர்.

தமிழக காவல்துறையினர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘காவல்’ என்று பதிவிட்டுள்ளனர். அதேபோல கோலிவுட் இயக்குநர்களும் நடிகர்களும் தங்களுக்கு பிடித்த வார்த்தைகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். ரசிகர்களின் தங்களுக்குப் பிடித்த நடிகரின் பெயரை ட்வீட் செய்து வருகின்றனர். கடந்த ஒருசில நாள்களாக இந்த ஒரு வார்த்தை ட்வீட் ட்விட்டரை ஆக்கிரமித்துள்ளது எனலாம். இந்த ஒரு வார்த்தையை வைத்தும் பல பிரபலங்கள், பிரபல நிறுவனங்கள் வார்த்தைப் போரையும் நடத்தி வருகின்றன.

Also Read: மனிதர்களை விட திறமைசாலிகள் மட்டுமல்ல, இந்த விஷயத்திலும் AI-கள் கெத்துதான்!

சரி, இதெல்லாம் பார்த்துட்டு ஒரு வார்த்தைல இதுக்கு நீங்க ரிப்ளை பண்ணனும்னா அந்த வார்த்தை என்னவா இருக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top