விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகப் பெருமானின் பிறந்த நாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. முழு முதற் கடவுளை விநாயகர், கணபதி, ஆனைமுகன், பிள்ளையார் என பல பெயர்களால் அழைக்கிறோம். விநாயகர் வழிபாடு என்பது இந்தியாவிலும், நேபாளத்திலும் தான் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி ஏன் கொண்டாடப்படுகிறது என்பதைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம தெரிஞ்சிக்கப்போறோம்.
விநாயகர் சதுர்த்தி தோன்றியது எப்படி?
இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாவில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. இவ்விழா ஆராவாரமாகக் கொண்டாடப்படுவதற்கு காரணமூலமாக இருந்தவர் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜிதான். இவருடைய ஆட்சிக் காலத்தில் இந்த விழா தேசிய விழாவாகவும், கலாசார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிர மக்கள் அனைவரும் பிள்ளையாரை வீடுகளில் வைத்து குடும்ப விழாவாக சித்தரித்து விமரிசையாகக் கொண்டாடி வந்தனர்.
அதன் பின் நாளடைவில் சுதந்திரப் போராட்டக்க்காலத்தில் இந்து மதத்தின் மீது ஈர்ப்புக்கொண்ட பாலகங்காதர திலகர் தேசியம் வளர இந்த விழாவினை ஊர்வலமாக கொண்டாட பொதுமக்களிடையே ஊக்குவித்தார். எனவே, 1893 ஆம் ஆண்டு ”சர்வஜன கணேஷ் உத்தவ்” என்ற பெயரில் இவர் ஆரம்பித்து வைத்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களே, இன்று வரை மக்களிடையே பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கோவா போன்ற மாநிலங்களில் கூடுதல் உற்சாகத்துடன் 10 நாட்கள் வரை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அது மட்டுமின்றி, இந்தியாவை தவிர நேபாளம், அமெரிக்கா, மொரீசியஸ் போன்ற நாடுகளிலும் இந்த விழாவானது, சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
விநாயகர் தோன்றியது எவ்வாறு?
புராணங்களின்படி பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட சிவபெருமானின் மகனே விநாயகர் ஆவார். ஒரு சமயத்தில் சிவ பெருமான் இல்லாத நேரத்தில் குளிக்கச் சென்ற பார்வதி தேவி தனக்கு காவலுக்கு யாருமே இல்லை என தான் கொண்டு வந்த சந்தன குழம்பை எடுத்து ஒரு ஆண் உருவத்தை உருவாக்கி அதற்கு உயிர் ஏற்படுத்தினார். அதன் பின் அந்த சிறுவனுக்கு விநாயகர் என பெயரிட்டார். பார்வதி தேவி அச்சிறுவனிடம் தான் குளிக்க செல்கிறேன் எனவே உள்ளே யாரையும் அனுமதிக்காமல் பார்த்து கொள்ளும் படி கட்டளையிட்டு சென்றிருந்தாராம். அவர் உள்ளே சென்ற சற்று நேரத்தில் அங்கே வந்த சிவபெருமானை உள்ளே அனுமதிக்காமல் தடுத்த விநாயகரை சிவ பெருமான் கோபம் கொண்டு விநாயகர் தலையை வெட்டி வீசிவிட்டு உள்ளே சென்றதாகவும் புராணங்கள் உண்டு.
அப்பொழுது சிவபெருமானை கண்ட பார்வதி தேவி எவ்வாறு தாங்கள் உள்ளே வந்தீர்கள் என வினாவிய போது, சிவ பெருமான், தன்னை அனுமதிக்காமல் கோபமூட்டிய அச்சிறுவனின் தலையை வெட்டி வீசி விட்டு தான் உள்ளே வந்ததாகக் கூறினார். இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி, தான் உருவாக்கிய நம் சிறுவனை அழித்து விட்டீர்களா என காளியாக உருவம் எடுத்து மூவுலகில் தான் பார்ப்பனவற்றையெல்லாம் அழித்து கொண்டிருந்தார் பார்வதி தேவி.
இதனை கண்ட தேவர்கள் சிவபெருமானிடம் முறையிடவே, பார்வதி தேவியின் கோபத்தை தணிக்க சிவபெருமான், இறந்த விநாயகருக்கு தலைபொருத்தி உயிரூட்ட வட திசையில் தாங்கள் காணும் முதல் ஜிவராசியின் தலையை கொண்டு வாருங்களென தேவர்களுக்கு ஆனையிட்டார். அதன் படி தேவர்கள் கண்ட முதல் ஜீவராசி யானை. அதன் தலையைக் கொண்டுவர விநாயகருக்கு யானையின் தலை பொருத்தப்பட்டு கணபதி என சிவபெருமானால் பெயரிடப்பட்டு தேவர்களுக்கு தலைவனாக நியமிக்கப்பட்டார் கணபதி. இதுவே யானை முகம் கொண்ட விநாயகரின் புராணங்கள் சொல்லும் வரலாற்றுக் கதையாகும்.
Also Read: லடாக் ட்ரிப் ஏன் ரொம்ப ஸ்பெஷல்… அப்படி என்ன இருக்கு அங்க?