சித்திரை நட்சத்திரம்

நட்சத்திரக் கோயில்கள் – சித்திரை நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய கோயில்!

நட்சத்திரங்கள் என்பது நிலவு சார் அளவு ஆகும். ராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பு என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். ஒவ்வொரு நட்சத்திரங்களும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மனிதன் பிறக்கும் பொழுதே அவனுடன் சேர்ந்து அவனுக்குரிய ராசியும் நட்சத்திரங்களும் தோன்றிவிடுகின்றன. வானில் திங்கள் நிற்கும் நாள் மீன் கூட்டம், அப்பொழுதுக்கான நட்சத்திரம் என எடுத்துக்கொள்ளப்படுவது ஐதீகம்.

எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன், ராசிச் சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப்பிரிவில் இருந்தால் அந்த நேரத்துக்குரிய நட்சத்திரமாக ரேவதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. வாழ்வில் இருள் நீங்கி ஒளிபொருந்திய சூழல் உருவாக தங்களின் நட்சத்திரங்களுக்கு உரிய கோயில்களுக்குச் சென்று வழிப்பட்டு வந்தால் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இன்று சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கோயிலில் வழிபட வேண்டும், என்னென்ன இடங்களைத் தவறாமல் தரிசிக்க வேண்டும் என்பதைப் பற்றித்தான் நாம் இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

சித்திரை நட்சத்திரம்

சித்திரை நட்சத்திரகாரர்கள் அறிவுக்கூர்மை மிக்கவர்களாகவும், சுய லாபத்துக்காக எதையும் செய்ய விரும்பாத குணம் கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். இந்நட்சத்திரத்தின் அதிதேவதையாக ஸ்ரீசக்கரத்தாழ்வார் விளங்குகிறார். சித்திரை நட்சத்திரத்தின் நட்சத்திர அதிபதியாய், செவ்வாயும், ராசி அதிபதியாய், புதனும், நவாம்ச அதிபதியாய் முதல் பாதத்தில் சூரியனும், இரண்டாம் பாதத்தில் புதனும், மூன்றாம் பாதத்தில் சுக்கிரனும், நான்காம் பாதத்தில் செவ்வாயும் வலம் வருகின்றன. இந்நட்சத்திரக்காரர்கள் மகாவிஷ்ணுவை வணங்கி வழிபட்டு வர நன்மைகள் பல உண்டாகும் என்பது நம்பிக்கை. சித்திரை நட்சத்திரமானது, முத்து மற்றும் ரத்தின கற்கள் வடிவங்கள் கொண்டு விளங்குவதனால் இத்தகைய வடிவங்களை இந்நட்சத்திரகாரர்கள் தங்களுடைய தொழில் வணிகங்களுக்கு லோகோவாக பயன்படுத்திக்கொள்ள பல நன்மைகள் நிகழும்.

சித்திர நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய அதிர்ஷ்டத்தை பெருக்கிக் கொள்ள வஸ்திர தானம் செய்து வர வேண்டும். குறிப்பாக இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வபக்தி மிகுந்தவர்களாக இருப்பார்கள் ஆன்மீக காரியங்களில் அதிகமாக கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். இந்நட்சத்திரக்காரர்கள் அறுபடை முருகனின் அனைத்து படை வீடுகளுக்கு சென்று வர நன்மைகள் பல உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தின் விருட்சமாக வில்வ மரம் திகழ்கிறது. என்வே இந்நட்சத்திரகாரர்கள் வில்வ மரத்தை தல விருட்சமாக கொண்ட கோயில்களுக்குச் சென்று வழிபட வேண்டும்.

சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்நாளில் ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது வருடத்துக்கு ஒரு முறையோ ஏழைகளுக்கு சிவப்பு நிற உடைகளைத் தானமாக வழங்கி வந்தால் நன்மைகள் உண்டாகும். தங்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்க முருக பெருமானின் வாகனமாக விளங்கும் மயில்களுக்கு உணவளிக்க வேண்டும்.

குருவித்துறை ஸ்ரீசித்திர ரத வல்லப பெருமாள் ஆலயம்

ஸ்ரீ சித்திரரத வல்லப பெருமாள் திருத்தலம் மதுரை மாவட்டம் குருவித்துறையில் அமைந்துள்ளது. சித்திரை நட்சத்திரகாரர்களுக்கு இத்திருத்தலமானது பிரசித்தி பெற்று விளங்குகிறது. தங்கள் வாழ்நாளில் சித்திரை நட்சத்திரகாரர்கள் தங்களுடைய தோஷங்கள் நீங்க இத்தலத்தினை வணங்கி வழிபட வேண்டும்.

ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கு கடுமையான போர் ஏற்பட்டது. அப்போரில் நிறைய அசுரர்கள் தேவர்களால் கொல்லப்பட்டனர். அப்போது அசுரர்களின் தலைவரான சுக்கிராச்சாரியார், மருதசஞ்சீவி மந்திரத்தைக் கூறி இறந்த அசுரர்களை உயிர்தெழச் செய்தார். இதனால் கடும் கோபத்துக்கு உள்ளான தேவர்கள் குருபகவானின் மகனாகிய கசனை நாடினர். அசுரலோகத்துக்குச் சென்று அந்த மருதசஞ்சீவி மந்திரத்தை கற்று வருமாறு கோரினர். கசனும் அவர்களின் கோரிக்கையை ஏற்று தந்தையின் ஆசியுடன் அசுரலோகம் சென்றான். அசுரலோகம் சென்ற கசனை சுக்கிராச்சாரியாரின் மகளாகிய தேவையானி ஒரு மனதாக காதல் கொண்டார். கசனும் சுக்கிராச்சாரியாரிடம் இருந்து மந்திரத்தைக் கற்று கொண்டான். இத்தகைய கம்சனின் செயலை அறிந்த அசுர குலத்தினர், கம்சனை எரித்து சாம்பலாக்கி சுக்கிராச்சாரியாரின் குடி பானத்துடன் அவருக்கு தெரியாமல் கலந்து குடிக்க வைத்தனர். கசனை காணாமல் துடித்த தேவைவானி தன் தந்தை சுக்கிராச்சாரியாரிடம் முறையிட்டு கசனை மீட்டு தருமாறு கேட்டாள். சுக்கிராச்சாரியாரும், தன்னுடைய ஞானத்தால் கசன் தன் வயிற்றுக்குள் இருப்பதனை உணர்ந்துக்கொண்டார். சுக்கிராச்சாரியார் அந்த மருதசஞ்சீவி மந்திரத்தை கூற கசன் அவரின் வயிற்றை பிளந்துக்கொண்டு உயிர் பெற்றான். இதனால் இறந்து கிடந்த சுக்கிராச்சாரியாரை கசன் அதே மந்திரத்தை கூறி உயிர் பெறச் செய்தான்.

Also Read – நட்சத்திரக் கோயில்கள் – அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய கோயில்!

கசன், பின் தான் வந்த வேலை முடிந்தது எனக்கூறி தேவலோகம் புறப்பட்டான். அப்பொழுது சுக்கிராச்சாரியார் கசனிடம் தன் மகளை மணந்து செல்லுமாறு கூறினார். அதற்கு கசன், தான் உங்கள் வயிற்றில் இருந்து உயிர் பெற்றதனால் உங்கள் மகளை மணம் முடிக்க முடியாது என கூறி சாமர்த்தியமாக நழுவி சென்றான். இதனால் கோபம் கொண்ட தேவையானி, ஏழு மலைகள் சூழ கசனை அசுரலோகத்திலேயே தங்கும் படி செய்தாள். இதனால் மகனைக் காணமுடியாத குருபகவான் இத்தல பெருமானிடம் வேண்ட பெருமான் சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வரச்செய்தார். இதன் பிறகு குருபகவான் வேண்டுதலுக்கு இணங்க பெருமாள் இத்தலத்தில் ஸ்ரீசித்திர ரத வல்லப பெருமாளாக எழுந்தருளியுள்ளார். இந்நிகழ்ச்சியானது சித்திரை நாளன்று நிகழ்ந்ததால் இத்தலம் சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு பிரசித்தி பெற்று விளங்குகிறது.

இத்தலத்தில் குருபகவானே தன் மகனுக்காக தவம் கொண்டதால், சித்திரை நட்சத்திரகாரர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து வர குருவினால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். திருமணத் தடை உள்ளவர்கள், புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல குருபகவானை வணங்கி வந்தால் குறைகள் தீரும் என்று இங்கு வந்து பலனடைந்தவர்கள் கூறுகின்றனர். தல நடை காலை 7.30 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் இரவு 6 மணி வரை திறக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி மற்றும் குருபெயர்ச்சி ஆகிய நாட்களில் இத்தலம் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

எப்படி போகலாம்?

ஸ்ரீ சித்திரரத வல்லப பெருமாள் திருத்தலமானது மதுரையில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள சோழவந்தானை அடுத்த குருவித்துறையில் இருக்கிறது. சென்னை, திருச்சி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இத்திருத்தலத்துக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் மதுரை ரயில் நிலையமாகும். அருகில் உள்ள விமான நிலையம் மதுரை விமான நிலையமாகும்.

1 thought on “நட்சத்திரக் கோயில்கள் – சித்திரை நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய கோயில்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top