தமிழ் சினிமா மட்டுமில்ல, பாகுபலி படம் மூலமா ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமும் கொண்டாடும் நடிகரா மாறுனவர் சத்யராஜ். அடியாளாக அறிமுகமாகி, வில்லன், அப்புறம் ஹீரோ, அப்பா, கேரக்டர் ஆர்டிஸ்டுனு தமிழ் சினிமா பார்த்திருக்க அத்தனை ரோல்கள்லயும் இவர்போல நடிச்சவர்களைப் பார்ப்பது அரிது. ஜமீன் குடும்பத்துல பிறந்த சத்யராஜோட சினிமா கனவு எந்த வயசுல தொடங்குச்சு… அவருக்கு எப்படி முதல் சினிமா வாய்ப்பு கிடைச்சது… இப்படினு அசாத்திய நடிகர் சத்யராஜோட ஜர்னி பத்திதான் நம்ம இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.
கோயம்புத்தூர்ல ஜமீன் குடும்பத்துல சுப்பையா – நாதாம்பாள் தம்பதியின் மூத்த மகனாக 1954 அக்டோபர் 3-ம் தேதி பிறந்தவர் சத்யராஜ். இவரோட இயற்பெயர் ரெங்கராஜ். சினிமாவுக்காகத் தன்னுடைய பெயரை பின்னால சத்யராஜ்னு மாத்திக்கிட்டார். ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போதே, எப்படியாவது ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான் அவரின் கனவாக இருந்திருக்கிறது. ஆனால், தனது மகன் சினிமாத் துறைக்குப் போவதை சத்யராஜின் தாயார் விரும்பவில்லை. எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் ஓகே, எப்படியாவது சினிமாவுல நடிச்சுடணும் என்பதுதான் சத்யராஜின் ஒரே கனவு; ஆசை; லட்சியம் எல்லாமே. பள்ளிப்படிப்பை முடித்து, கோவை அரசு கலைக் கல்லூரியில் தாவரவியல் பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடிக்கிறார்.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டுக்குத் தெரியாமல் சென்னை வந்து சேர்ந்திருக்கிறார். அப்போது தனது சொந்த ஊர்க்காரரான சிவக்குமாரைப் பார்க்க அன்னக்கிளி ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போயிருக்கிறார். சிவக்குமாரிடம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையைச் சொல்லியிருக்கிறார். ஆனால், சிவக்குமாரோ, `சினிமாவுல வாய்ப்புக் கிடைக்குறதெல்லாம் ரொம்ப கஷ்டம். அதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது. பேசாம நீ ஊருக்குப் போற வழியைப் பார்’ என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும், சொந்த ஊருக்குப் போகாமால் சென்னையிலேயே தங்கிய சத்யராஜூக்குத் தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவக்குமார் உதவி செய்திருக்கிறார். பின்னர், கோமல் சுவாமிநாதனின் நாடகக் குழுவில் இணைந்தார். 1978-ல் வெளியான சட்டம் என் கையில் படம்தான் சத்யராஜூக்கு கிரெடிட் கிடைத்த முதல் படம். மெயின் வில்லனான தேங்காய் சீனிவாசன் அடியாள் குரூப்பில் ஒரு ரௌடியாக நடித்திருப்பார். அதன்பின்னர், கண்ணன் ஒரு கைக்குழந்தை படத்துக்கு புரடக்ஷன் மேனஜராக வேலைபார்த்த அவர், படத்தின் ஒரு சின்ன ரோலிலும் வந்து போவார்.
காலேஜ் டேஸ்ல இவரோட படிச்சவர் இன்னொரு பிரபலம். அவங்களோட கல்லூரி நட்பு இருவரையும் சினிமாவிலும் இணைத்தது. சொல்லப்போனால், சத்யராஜ் சொல்லி கல்லூரியில் ஒரு பாடப்பிரிவில் சேர்ந்த அந்தப் பிரபலம், படிக்க முடியாமல் இடையிலேயே தனது படிப்பை நிறுத்தினார். அந்தப் பிரபலம் யாருனு கெஸ் பண்ணிட்டே இருங்க.. வீடியோவோட கடைசில அவர் யாருனு நானே சொல்றேன்.
சின்ன சின்ன ரோல்களில் நடித்துக் கொண்டிருந்த சத்யராஜூக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது மணிவண்ணன் இயக்கிய படங்கள்தான். நூறாவது நாள், 24 மணி நேரம் போன்ற படங்கள் மூலம் வில்லனாக அறிமுகமானார். அதுவும் குறிப்பா, நூறாவது நாள் படத்தில் மொட்டைத் தலை, கூலிங் கிளாஸ் சகிதம் இவர் பண்ண வில்லத்தனம் அதுவரை தமிழ் சினிமா பார்க்காதது. `தகடு தகடு’ என அந்தப் படத்தில் இவர் பேசிய வசனம் இவரின் தனி அடையாளமாகவே மாறிப்போனது. 1978 – 1985 இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 75 படங்களில் நடித்து முடித்திருந்தார் சத்யராஜ். பெரும்பாலான படங்களில் வில்லன் கேரக்டர்தான். 75 படங்களுக்குப் பிறகுதான் இவருக்கு ஹீரோ ரோல் கிடைத்திருக்கிறது. 1985-ல் வெளியான சாவி படம்தான் இவர் ஹீரோவாக நடித்த முதல் படம். அதன்பிறகு, தொடர்ந்து லீட் ரோல்களில் நடிக்கத் தொடங்கினார். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து நடிகன், முறைமாமன் உள்ளிட்ட பல படங்களில் காமெடி விருந்து படைத்திருப்பார்கள்.
பெரியாரின் கருத்துகள் மேல் தீவிர பற்றுக் கொண்ட சத்யராஜ், கடவுள் மறுப்புக் கொள்கையைப் பின்பற்றுபவர். பெரியாரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் பெரியாராகவே வாழ்ந்திருப்பார். படம் இயக்க வேண்டும் என்று ஆரம்ப காலகட்டங்களில் நினைத்திராத சத்யராஜ், தனது 125-வது படமான வில்லாதி வில்லன் மூலம் இயக்குநர் அவதாரமும் எடுத்தார். மூன்று வேடங்களில் அவர் நடித்திருந்த அந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை. இதனால், அதன்பிறகு படம் இயக்க வேண்டும் என்பதைப் பற்றியே அவர் சிந்திக்கவில்லை. வரலாற்றுப் பின்னணி கொண்ட கதையில் நடிக்க வேண்டும் என்பது சத்யராஜின் நீண்ட நாள் ஆசை. 24 வயது முதலே அதைப் பற்றி கனவு கண்ட சத்யராஜூக்கு, 60 வயதில்தான் அந்த கேரக்டர் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ராஜமௌலி இயக்கிய பாகுபலி சீரிஸ் படங்களில் இவர் நடித்த கட்டப்பா கேரக்டர் அவ்வளவு கனமானது. அந்த கேரக்டரில் சத்யராஜைத் தவிர்த்து வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது என்கிற அளவுக்கு பெர்ஃபாமன்ஸ் காட்டியிருப்பார். தமிழ் மொழிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் சத்யராஜை, ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஹீரோயின் தீபிகாவின் தந்தை ரோலில் நடிக்க அணுகியிருக்கிறார்கள். அப்போது இவர் சொன்னது, தமிழ் உணர்வாளர்களைப் புண்படுத்தாமல் இருந்தால் நிச்சயம் நடிக்கிறேன் என்பதுதான். அந்த அளவுக்கு மொழி மீது பற்றுகொண்டவர்.
சத்யராஜூம் மணிவண்ணனும் கல்லூரி கால தோழர்கள். இன்னும் சொல்லப்போனால், சத்யராஜ் சொல்லித்தான் History in Advanced English கோர்ஸிலேயே மணிவண்ணன் சேர்ந்தாராம். ஆனால், அந்த ஆங்கிலம் ஒத்துவராததால், கோர்ஸை முடிக்காமலேயே அதிலிருந்து விலக நேர்ந்ததாம். இதை சத்யராஜே ஒரு இடத்தில் பகிர்ந்திருப்பார். கோலிவுட்டில் கவுண்டமணி – செந்தில் காம்போ போல் புகழ்பெற்ற காம்போ சத்யராஜ் – மணிவண்ணன் காம்போ. இவர்கள் இருவரும் இணைந்து செய்ததில் தரமான சம்பவம் அமைதிப்படை. தமிழ் சினிமாவில் அமைதிப்படையைப் போல் அரசியலைப் பகடி செய்து படங்கள் வரவில்லை என்பதுதான் நிதர்சனம். சினிமா தாண்டி பெர்சனல் வாழ்க்கையிலும் இருவரும் நெருங்கிய நண்பர்கள். 30 ஆண்டுகளுக்கு மேலாக இவர்களின் நட்பு நீடித்தது. தினசரி போனில் மணிக்கணக்கில் பல விஷயங்கள் பற்றி இருவரும் உரையாடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள். 2013-ல் மணிவண்ணன் இறப்பதற்கு முதல் நாள் கூட புதிய கதை ஒன்றை சத்யராஜிடம் சொன்னாராம். அந்த அளவுக்கு இவர்களின் நட்பு இருந்திருக்கிறது.
சத்யராஜ் நடிச்ச கேரக்டர்கள்லயே எது உங்களுக்குப் பிடிச்சது… அவர் பேசுன வசனங்கள்ல உங்களோட ஃபேவரைட் டயலாக் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.